Wednesday, September 23, 2009

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு...



விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றைய நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம்,
புனைவெல்லாம்விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயினர்.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கினர்.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.
மீண்டும்…..கண்ணீரில்
கருத்தரிக்கட்டும் காலநெருப்பு
தீ பரவட்டும் திலீபனுக்கு வீரவணக்கம்

Monday, September 21, 2009

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முதலாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத் தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம் வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது.

மூன்றாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாடு பெரும் சோகமாக நிறைவுற்றது. தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றை சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இறுதிநாள் நிகழ்வில் திட்டம்போட்டு உள்நுழைந்த காவல்த்துறையினர் கணணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடதத்தியும் கலகம் விளைவித்ததால் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததாலும் 9 தமிழர்கள் பலியானார்கள். அந்த அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த வேளை, 1981-ம் ஆண்டு 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989 இல் மொரிசியசிலும் நடைபெற்றது. அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 1995-ம் ஆண்டில் அப்போது தமிழக முதல்வராகப் பதவி வகித்த செல்வி ஜெயலலிதா அவர்களால் தஞ்சாவூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ளச் சென்ற தமிழீழ அறிஞர்கள் வெல்வி ஜெயலலிதா அவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' என்ற பதம் மாற்றம் செய்யப்பட்டு, 'உலகத் தமிழ் மாநாடு' என்ற நாமத்துடன் அரங்கேற்றப்பட உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட்டிருக்க வேண்டிய இந்த மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தை ஆண்ட 14 வருட காலத்தில் முதல் தடவையாக உலகத் தமிழர் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. கலைஞர் அவர்களது தமிழ்ப் பற்றுக்கு இதுவும் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்படவுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்குச் செய்ததை விட அதிகமாகவே தமிழ் அவருக்குச் செய்துள்ளது.

வெறும் தகரப் பெட்டியுடன் திருக்குவளையிலிருந்து சென்னை வந்த கருணாநிதி அவர்களுக்கு தமிழ் சோறு போட்டது. தமிழ் அரசியலைக் கற்றுக் கொடுத்தது. தமிழ் அவரைக் கோடீஸ்வரனாக உயர்த்தியது. தமிழ் அவரை தமிழக முதல்வராக 14 வருடங்கள் பதவியில் அமர்த்தியுள்ளது. தமிழ் வேறொருவருக்கும் இந்த அளவுக்கு வாரி வழங்கியதும் இல்லை வாரி வழங்கப் போவதும் இல்லை.

'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக இருக்கவேண்டும்' என்ற அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர் உயர்ந்துவிட்டார். 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்று கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது.

தமிழர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள் மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற அவாவினால், இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது, ஆனால், ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை. அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைக்கத்தான் போகின்றது. மூன்று வேளையும் உண்டு வசதியாக வாழ்ந்த மக்கள், சிங்கள தேசத்திடம் அடிபணிய மறுத்து முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து, அதற்கும் அப்பால் செய்வது எதுவென்று தெரியாமல், ஒருவாய் தண்ணீருக்கும் வழியில்லாமல் ஏங்கித் தவித்தபோது, அப்போதும் தத்துவம் பேசத் தமிழ்தான் கலைஞரின் நாவில் நின்றது.

தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே அரைநாள் உண்ணாவிரதம் இருந்தபோது, அதையும் மந்தைகள் போல் தமிழக மக்களைத் தலையாட்ட வைத்ததும் அதே தமிழ்தான். தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பமாக கவைஞரை உருவாக்கி, அரசியலில் அந்தக் குடும்பமே உச்ச நிலைக்குச் செல்ல, இன்னமும் மேலே செல்ல உறுதுணையாக இருக்கும் தமிழுக்கு கலைஞர் விழா எடுப்பது மிகப் பொருத்தமானதே.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது முதல், அதன் நிமித்தம் உயிர்களையும் பலி கொடுத்த ஈழத் தமிழினம் இத்தனை கொடுமைகளை அனுபவிக்கும் இன்னைய காலத்தில், ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்டு, எஞ்சியவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக சிறை முகாம்களில் சிக்கித் தவிக்கும்போது போலியாக ஆவது கலைஞர் கவலை கொண்டிருந்தால் உலகத் தமிழினம் தமது சினத்தைக் குறைத்திருக்கும்.

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஈழத் தமிழர்களின் அவலங்ங்கள் தொடர்வதால் உலகம் சிறிலங்காமீது கோபப் பார்வை பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில் கொள்முதல் செய்யவே கலைஞர் 'உலகத் தமிழ் மாநாடு' ஏற்பாட்டைச் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகின்றது.

இப்போது கலைஞரது தலைக்குப்பின்னால் பிரகாசித்த ஒளி வட்டம் மங்கி வருவது நன்றாகவே தெரிகின்றது. அதை மீண்டும் துலக்குவதற்கு கலைஞர் முயற்சிக்கிறார். தமிழகத்து முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழாலும், பணத்தாலும், சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் அப்பாவிப் பாமர தமிழகத்து மக்களுக்குத் தன்னை பரமாத்மாவாகக் காட்டிக் கொள்ளலாம். நடந்து முடிந்த, நடக்கின்ற அத்தனையையும் பகுத்தறிவோடு பார்த்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழினம் அவரின் மகுடிக்கு மயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட உள்ள 'உலகத் தமிழ் மாநாடு' மிகக் கொடுமையான ஈனச் செயல் என உலகத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். சினம் கொள்கிறார்கள்.

தமிழுக்கு அரியாசனம் பெற்றுக் கொடுக்கவும், உலகத் தமிழினத்திற்கு ஒரு நாடு உருவாக்கவும் களத்தில் நின்று போராடி பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்குப் பக்கபலமாக நின்று, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இந்த விடுதலைத் தீ அணைந்து போகாமல் தடுக்கவும், விடுதலை அவா கொண்ட அந்த மக்களைக் காப்பாற்றவும் முத்துக்குமார் தொடக்கம் பல தமிழர்கள் தம்மைத் தீக்கு இரையாக்கித் தீபங்களாக மாறியுள்ளார்கள்.

அத்தனை நடந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் பச்சைத் துரோகம் செய்த தமிழக முதல்வர் அவர்கள் ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' என்ற உயரிய சிந்தனைக்கு விளக்கு ஏற்றுவதும் விழா எடுப்பதும் பொருத்தமற்ற காலத்தில் செய்யப்படும் வெட்கக்கேடான செயலாகவே கணிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுத் தவறை மேற்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மீதான அளவற்ற பற்றுக் காரணமாக, இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறிய அனைத்துத் தமிழ்ப் பெரு மக்களும், அறிஞர்களும் இந்த 'உலகத் தமிழர் மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே, தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!! : தியாகி லெப்.கேணல் திலீபன் சொல்ல வந்தது??? -


தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.

அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்... வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்... மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.

அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், ராஜீவ்காந்தி படுகொலை... இந்தியத் தேசியம்... பிராந்திய நலன்... என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???


தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது.

அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம் மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம். இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது.

இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.


சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்து நிற்கும் இந்தியா,சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின.

அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது.

ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ, அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும். இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.


ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம். அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். "மக்கள் புரட்சி" என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்...ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம்.


நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவு காலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச் சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம்.

புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.

எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம். இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்... நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.

மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். "எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை" என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.


"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக சீலன் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Sunday, September 20, 2009


பத்து தடவை பாடை வராது.. பதுங்கிகிடக்கும் புலியே தமிழா..... போர்க்களம் காண வெளியே வாடா...


எண்ணிப்பாரடா தமிழா.. இணைந்து நில்லடா தமிழா...


மண்ணில் உன்னை வெல்ல யாருடா...மறத்தமிழன் நீயடா...


உன்னைப் பிளவு படுத்தும் விணனை வீழ்த்தடா...


தமிழ் அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா...


ஆறரைக்கோடி தமிழினமே நீ கிளர்ந்தெழுந்தால்


ஆழ் கடலும் வழி விடுமே அறியவில்லையோ?


எக்கணமும் புகழ் மணக்க இருந்தவரே..


நீவீர் அக்கினியாய் கிளம்பாமல் அடங்கி இருப்பதேனோ?


பச்சிளம் பிஞ்சுகள் சருகாய் சாய்கிறதே


பால் மனம் மாறா பிள்ளைகள் பாடைகளில் போகிறதே


கோரத் தாண்டவமாடும் சிங்களன் வெறியாட்டத்தில்


வீர புலிக்குட்டிகள் விழுப்புண் தாங்கி மடிகிறதே!


கொதித்து எழடா தமிழா -


உன் குருதி குடித்தவனை மிதித்து வீழ்த்தடா தமிழா....


செத்து செத்து வாழ்வதை விட -


தமிழீழம் மலர வித்தாகி மடிவோம் வாடா தோழா!


தோல் தருவோம்


நம் புலிக்கூட்டம் தினவெடுக்க வாழ் எடுப்போம்


பகைவனின் கதை முடிக்க நாள் குறிப்போம்


தாயக விடியலுக்காக -


நம்பிப் போராடப் புறப்படடாஎன் தமிழா
இப்படிக்குஉணர்வுள்ள தமிழன்

Saturday, September 19, 2009

தமிழீழ விடுதலைப் போராட்டதின் எதிர்காலம் யார் கையில் ?



கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம்.


"...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது. இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும். .."


வாழ்வுக்கான காரணம் என்னும் (The Life of Reason) நூலில் அதன் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா (George Santayana ) என்னும் தத்துவஞானி " தங்கள் கடந்த காலத்தை ஞாபகத்தில் கொள்ளாதோர் அதனை மீண்டும் அனுபவிக்குமாறு சபிக்கப்படுவர் " - "Those who cannot remember the past are condemned to repeat it ” எனக் கூறுகின்றார்.

பொதுஅறிவில், சமூகத்தில், சமயத்தில், கலையில், விஞ்ஞானத்தில் வாழ்வுக்கான காரணங்களைத் தேடும் இந்நூலில் பலராலும் எடுத்தாளப்படும் மேற்குறிப்பிட்ட வாசகம் பொது அறிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. தனிமனிதர்களுக்கும், சமூகத்திற்கும், நாடுகளுக்கும் இது பொருந்தும்.

எமது வசதிக்காக வரலாற்று ஞானம் எனக் கூறிக்கொள்வோம். அறிவு வேறு , ஞானம் வேறு. முன்னது புறம் சார்ந்தது பின்னது அகம் சார்ந்தது. ஞானம் பட்டுத்தெளிவதால், அழுந்தி அறிவதால் பெறப்படுவதெனின் சாதாரண மக்களிடம் அதனை நிறையக் காண்கின்றோம். இது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.

ஆயின் கடந்தகாலம் பற்றிய அறிவு ,ஞானம் என்பன எம்மைச்சுற்றி அவிழ்ந்து கொண்டிருக்கும் (unfolding ) சமகால நிகழ்வுகளை உரிய முறையில் புரிந்து கொள்ள உதவாதுவிடின் அந்த அறிவு வெறும் உபதேசமாகவே முடியும் . எமது கவனக் குவிப்பு எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மீது குவிக்கப்படும்போது அவற்றை நாம் வாசிக்கும் விதத்தில் தெளிவு ஏற்படுவதை அவதானிக்கின்றோம்.

இப்படியான வாசிப்பை வசப்படுத்தியவர்களில் ஒருவரான மாமனிதர் தராக்கி எனப்படும் சிவராம் "States that want to oppress a people do so by breaking their political will to resist injustice---It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression " எனக் கூறியதை எத்தனை தரம் அழுத்திச் சொன்னாலும் தகும்.


கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம்.


அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது. இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும்.



தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் , பிரிவினைவாதம், ஆயுதக்குழு, இனக்குழுமம், தமிழ் சமூகம், சிறுபான்மையினத்தவர் என்ற பதங்களால் இவர்கள் அழைப்பதன் காரணங்கள் என்ன என்பவற்றை நாம் விளங்கிக்கொள்வதன் மூலமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.



தேசியம் என்றால் அரசாகும் தகுதியுண்டு. சிறுபான்மையினருக்கு., இனக்குழுமத்திற்கு அவை இல்லை. மக்கள் என்றால் அவர்களுக்கு தம் அரசியல் தலைவிதியை, தமது தற்பாதுகாப்பை தாமே தேடிக்கொள்ளும் உரிமை உண்டு. சிறுபான்மையினர்க்கு, இனக்குழுவிற்கு இது இல்லை. இதனால் தானா எம்மீது இவ்வார்த்தைப் பிரயோகங்கள்?. அதிஸ்டவசமாக tamilnation.org இணையத்தளம் சலிக்காது இதற்கான வாசிப்பிலும் தேடலிலும் எமக்கு வழிகாட்டியாக உள்ளது.

உதாரணத்திற்கு இறைமை (sovereignty) ஆட்புல ஓருமைப்பாடு (Territorial integrity) இவற்றால் சிறிலங்கா ஒரு நாடு என வாய்ப்பாடாக சர்வதேச சமூகம் கூறுவது ஏன்? இதில் எமக்கொரு ஞாயம் கொசொவாவற்கு ஒரு ஞாயம் ஏன்? உண்மை என்ன .



1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனை போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ. ஒலிவேரா தரைப்படை கடல்படை கொண்டு தோற்கடிக்கின்றான். பின்னர் கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். எதிர்மனசிங்கனின் மூன்று புதல்விகளும் கோவாவிலும் லிஸ்பனிலும் மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் ஆவணம் ஒன்றின் மூலம் யாழ்பாண இராச்சியத்திற்கான உரிமையை போர்த்துக்கேயருக்கு கையளிப்பு .



பின்னர் டச்சுக்காரர் பிரித்தானியர் சிங்களவர். ஆகியோரிடம் இழந்த இந்த இறைமையை மீட்டு எடுக்கும் மகத்தான மக்கள் பிரகடனமே 1977 வட்டுக்கோட்டைப் பிரகடனம். அதைத்தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகளின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப்போராட்டம். யாரின் இறைமை. யாரின் ஆட்புலம். எங்கே பிரிவினைவாதம். இதனை நவீன கற்கையில் Reversion of Sovereignty என்பர். இதனை இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்?



இவைபற்றிய தெளிவின் மூலமே சமகால நிகழ்வுகளை எம்வசப்படுத்தி சர்வதேச சமூகத்துடன் நாம் உறவாடமுடியும்.


(பின்னிணைப்பு) மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களைக் காக்க வேண்டும் என்கின்ற ஆதங்கமும் உணர்ச்சியும் உணர்வும் நியாயமானதே. அந்த நியாயத்தை கடந்த கால அனுபவப் பகிர்வினூடான தெளிவினூடாகவே முன்னெடுத்தல் இன்று முக்கியமானது சமகாலம் பற்றிய விழிப்புணர்ச்சி என்பது ,இருட்டிலும் விழிப்புடன் இருத்தலாகும்.


இந்தச் சமயத்தில் தாந்தே (Dante) என்னும் புகழ்பெற்ற 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கவிஞனின் " தெய்வீக நகச்சுவை இன்பியல் " ( Divine comedy) என்னும் காவியத்தை ஒருமுறை நோட்டம் விடுவோம். இதில் மூன்று உலகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. நரகம் (Inferno) பாவம் போக்கும் இடம் (Purgatory ) சுவர்க்கம் (Paradise) என்பவையே அவை.

கவிஞனே இந்த மூன்று உலகத்திலும் பிரவேசம் செய்கின்றான். எங்கள் பாரதியின் ஞானரதம் போல. அங்கு நரகலோகத்தின் வாசலில் ஒரு பலகை தொங்குகின்றது. இங்கு நுழைவதற்கு முன்னர் எல்லா நம்பிக்கைகளையும் துறப்பீராக (Abandon all hope before enter ) என்பதே அந்த வாசகம். நரகத்துள் வீழ்வதற்கு முன்பும் மனிதனுக்கு ஒரு சந்தர்பம். அவனது சுயமுயற்சியால் (Free will ) தன்னைக் கட்டிய தளைகளை அறுக்கும் வாய்ப்பு. இதற்கு சமகாலம் பற்றிய அறிவு அவசியம். நரகத்தில் வீழ்ந்தவர்களுக்கு கடந்தகாலம் பற்றிய அறிவும் எதிர்காலம் பற்றிய அறிவும் உண்டாம்.



ஆனால் சமகாலம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இது அவர்கள்மேல் தாந்தேயின் கேலி. ஏனெனில் இறுதித் தீர்ப்பின் பின்னர் காலம் முடிகின்றது. அதனால் நரகத்தில் உள்ளோர்க்கு ஒரு அறிவும் இல்லை என்கிறார். அவர்கள் மீளா அடிமைக்குள் ஆளாவர். சிவராமின் வார்த்தையில் " ...It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression "


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோன் ஆற்றம் கரையில் அழுது பாடமறுத்த யூத மக்களைப்போல் நாமும் எம் இலட்சியத்தை சுமக்கும் அதேசமயம் சமகால நிகழ்வுகள் பற்றிய தெளிவிற்கான வாசிப்புக்களிலும் கருத்துப்பரிமாற்றலிலும் ஈடுபடுவோமாகாக.

Friday, September 18, 2009

கருணாநிதியன் சமசீர் கல்வி அகோர பசிக்கு அல்வா மிட்டாய்

இன்றைக்கு கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகும். வாழ்க்கை எனும் திசை தெரியாத கடலில், ஊழிக்காற்றின் அலைப்புகளில் கரை காண உதவும் சின்ன விளக்கு. ஆனால் இந்த சின்ன விளக்கை கைக்கொள்வதற்குள் மக்களின் குருதி வற்றிவிடுகிறது.
அறிவு, அறிவுக்கான தேடல் எனும் புள்ளியிலிருந்து புறப்பட்ட கல்வி இன்று மக்களை பிழிந்து குடிக்கும் கல்வி வள்ளல்களின்(!) கைகளில் ஒரு கொடு வாளாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிலரால், “அரசுப்பள்ளிகளில் யார் படிப்பது”, “மாடு மேய்க்கத்தான் லாயக்கு”, “பணம் கொடுத்தாலும் தரமான கல்வி” என்றெல்லாம் பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட இந்த தனியார் கல்வித்துறை இன்று தாங்க முடியாமல் அதிகமாகிப்போன கல்விச்செலவுகளால் மக்களை தவிக்கவைத்திருக்கிறது. சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. விவசாயம் செய்யமுடியாமல் போனாலும் ஏதோ கொஞ்சம் படிக்கவைப்போம் என கிராமங்களில் இருந்த நிலை மாறிய போது, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குழந்தைத்தொழிலாளர்களாக மாறி நகர்ந்த போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இப்போது சமச்சீர் கல்வி என்று கண்ணீர் துடைக்க கைக்குடையோடு வருகிறது.


ஐந்து வயதிலிருந்து தொடங்கும் அரசு கல்வி முறை சிறுவர்களை சிறுவர்களாகவே இயல்பாக வளரச்செய்யும் அமைப்புடன் இருந்தது. ஆனால் நகரிய முதலாளித்துவ வாழ்க்கை முறையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் சூழல் இதை அனுமதிக்கவில்லை. சில மாதங்களே மகப்பேறு விடுப்பாக கிடைக்கும் நிலையில் கிண்டர் கார்டன் எனும் சிறார் பள்ளிகள் வரவேற்படையத் தொடங்கின. இதுவே பின்னர் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே சீட்டுக்கு அலையும் நிலையாகவும், பல்லாயிரக்கணக்கில் கொட்டியழ வேண்டிய பெற்றோர்களின் உழைப்பை சுரண்டக்கூடியதாகவும் வீங்கிப்போனது. இதனோடு பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்திற்கென்றிருந்த மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் ஓரியண்டல் போன்ற முறைகளும் சேர்ந்து கொள்ள அரசுப்பள்ளிகளில் படிப்பதும் அல்லது கிண்டர் கார்டன், மெட்ரிகுலேசன் போன்ற பள்ளிகளில் படிக்காததும் கேவலத்திற்குறிய ஒன்றாக ஆகிப்போனது. ஐந்தாம் வகுப்பு படிக்கவைப்பதற்கே ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்கினால்தான் சமாளிக்க முடியும் என்றானதும் தான் உரைக்கத்தொடங்கியது. வெறும் ஆங்கில மொழிப்பயிற்சி மட்டுமே அறிவு என நம்பிய கூட்டத்தினரால் தோற்ற மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. இதனுடன் உயர்கல்வியின் கட்டணக்கொள்ளையும் சேர்ந்து போராட்டங்களாய் வெடிக்க ஆரம்பித்தன. ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தான் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிவித்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து சமச்சீர் கல்வி முறை என்பது புரட்சிகரமான மாற்றமோ அல்லது பெரிய சீர்திருத்தமோ இல்லை, கொஞ்சம் நகாசு வேலை அவ்வளவுதான்.

ஒன்றிலிருந்து ஆறு வரையுள்ள வகுப்புகளில் மட்டும் செயல்படுத்தப்படப்போகும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். தனியார் பள்ளிகளின் முறைகேடுகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்கலெல்லாம், மாநில அரசின் கைகளுக்குப்போனால் முறைகேடுகள் நடைபெற ஏதுவாகும் என்றும், எல்லாமே மாநகராட்சி பள்ளிகளைப்போல் தரம் தாழ்ந்துவிடும் என்றும் புளித்துப்போனவைகளை எல்லாம் அள்ளிவீசுகிறார்கள். அரசும் உடனேயே தனியார் பள்ளி நிர்வாகிகளையும் அரசு அமைக்கும் குழுவில் சேர்த்துக்கொள்வோம் என்றும், பாடத்திட்டம் ஏற்படுத்தும் போது தனியார் பள்ளிகளும் கலந்தாலோசிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறது. இது என்ன முதலாளிகள் போராட்டம் நடத்தும் காலமோ, விமான முதலாளிகள் போராட்டம் நடத்தினார்கள், பள்ளி முதலாளிகள் போராட்டம் நடத்துகிறார்கள். கேள்வியெல்லாம் எப்போது இவர்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவார்கள் என்பதுதான்?

முதலில் கல்வி என்றால் என்ன என்பதை கொஞ்சம் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இயற்கையை தனக்கும் தான் சார்ந்த சமூக முன்னேற்றத்திற்கும் ஏற்ப மாற்றியமைக்கும் வழியில்தான் மனிதனின் வாழ்க்கையும் வரலாறும் தொடங்குகிறது. எனவே கல்வி என்பது இயற்கையை எப்படி சமூக முன்னேற்றத்திற்க்கு தக்கவாறு மாற்றியமைப்பது? என்ற சிந்தனைதான் கல்வியாக இருக்கமுடியும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி என்பது இப்படி இல்லை. தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கத்திலிருது எதையும் கற்றுக்கொள்ளும் வழமையை இன்றைய கல்வி ஏற்படுத்தவில்லை. ஒரு மாணவனுக்கு எந்த அளவு மனப்பாடம் செய்யும் திறனைருக்கிறது என்பதைத்தான் கல்வி சோதிக்கிறது. ஒரு இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பதுதான் கற்றுத்தரப்படும் பாடமாக இருக்கிறதே தவிர, அந்த இயந்திரம் எப்படி எந்த வடிவத்தில் உற்பத்திக்கு பங்களிக்கிறது அல்லது ஒரு இயந்திரம் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பதெல்லாம் பாடத்திட்டங்களாவதில்லை. ஏனென்றால் முதலாளிகளுக்கு தங்கள் இயந்திரங்களை இயக்கத்தான் ஆள் தேவையேயன்றி அதைப்பற்றி சிந்திக்கும் ஆட்கள் தேவையில்லை. இப்படி முதலாளிகளுக்கு தேவைப்படும் விதத்தில் தங்களை மாற்றியமைத்துக் கொள்வதுதான் கல்வி என்றானபின் அதன் அடுத்த கட்டமாய் மக்களின் பணத்திலேயே அவர்களை தயார்செய்வது என்ற விதிப்படிதான் தனியார் கல்வி நிலையங்களும் அதிலும் கொள்ளையடிக்கும் அவர்களின் லாபவெறியும் அரங்கத்திற்கு வந்திருக்கிறது. புது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சருகு போல் பெற்றொர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படி பயிற்றுவித்திடவேண்டுமென்று திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இந்த சமச்சீர் கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடும்?
அனைவருக்கும் கல்வியளிப்பது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் செய்து அறுபது வருடங்களை கடந்துவிட்டோம். இன்னும் அது ஏட்டிலேயே இருக்கிறது. தனியார் முதலாளிகள் லாபத்திற்க்கான உத்திரவாதம் எல்லாவகையிலும் உடனுக்குடன் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அவர்களுக்கு வரிவிலக்குகளையும், சலுகைகளையும் கோடிக்கணக்கில் ஒவ்வொறு நாளும் கொட்டிக்கொடுக்கும் போது, கல்வி வழங்கப் பணமில்லை என்னும் ஏமாற்றை இன்னும் எத்தனை நாள் சகித்துக்கொண்டிருப்பது? சாராயம் விற்றுக்கொண்டிருந்தவர்களெல்லாம் கல்வி நிலையம் நடத்த அனுமதித்துவிட்டு அரசு சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. பணக்காரனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கொரு கல்வி எனும் அநீதியை களைவதும், அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை தருவதும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் அரசின் கடமைகள். இவைகளை வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை

Thursday, September 17, 2009


தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்



தமிழ்த் தேசியத் தந்தை:


இன்று 17 செப்டம்பர் 2009 த‌ந்தை பெரியாரின் 131வது பிறந்த நாளாகும் இந்த நாளையொட்டி அவர் நினைவாக இவ் ஆய்வுக்கட்டுரையினை வெளிக்கொணர்கின்றோம். மானுடத்தின் குரலாக ஒலித்த அந்த ஆத்மாவுக்கு எமது வணக்கங்கள்
தமிழ் தேசிய அரசியல் என்பது 1938 ஆம் ஆண்டு முதலே தொடங்குகிறது.'தமிழத் தேசியம்' என்பது ஒரு மொழிப் போராட்டமோ அல்லது பண்பாட்டுப் போராட்டமோ அல்ல, அது ஒரு தேசிய இனத்தின் விடுதலை கோரும் கோட்பாட்டின் அரசியல் வடிவம்.அந்த வடிவத்தை தமிழகத்தின் எந்த சிந்தனையாளரிடமும் அல்லது தமிழ் அறிஞர்களிடமும் காணக் கிடக்கவில்லை.தமிழின உணர்வை மொழியுணர்வை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுதினாலும், தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்க வேறு எவரும் இயக்கம் கட்டியதில்லை.களத்தில் இறங்கிப் போராட்டங்கள் நிகழ்த்தியதில்லை;சிறைப்பட்டதுமில்லை.

1938 முதலே தமிழகத்தின் விடுதலையை பெரியார் தனது குறிக்கோளாகக் கொண்டார். தமிழ் நாட்டின் விடுதலையைக் கோராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் தேசத் துரோகிகள் எனக் கணித்தார்.இந்தக் கோணங்களில் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியத்தின் தந்தை இதந்தை பெரியார் என்பது புலப்படும்.

ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல.ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு 'தேசம்' என்ற நிலையை எட்டுகிறது.இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள்.


தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.1789 முதல் 1871 வரையிலான கால கட்டத்தில் அய்ரோப்பாவில் பல தேசங்கள் கண் விழித்தன.1871 இல் 14 தேசங்கள் விடுதலை பெற்றவையாக இருந்த அய்ரோப்பாவில் 1924 இல் 26 தேசங்களாகவும் விடுதலை பெற்ற தேசங்கள் உலகப் போர் காலகட்டத்தில் 35 ஆகவும் மாறின.இன்று கிட்டத்தட்ட அனைத்து தேசிய இனங்களும் விடுதலை பெற்று விட்ட கண்டமாக அய்ரோப்பா திகழுகிறது.ஆசியாவைப் பொறுத்தவரை 20 ஆம் நூற்றாண்டில் தான் தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக் கோரிக்கையை நோக்கி நகரத் துவங்கின.


'இந்தியத் தேசியம்' என்ற பொய்மை தேசியத்தை முன் வைத்த போதுஇஅதை எதிர்த்து தங்கள் அடையாளங்களைக் காத்துக்கொள்ளவும் இந்தியத் தேசியம் என்ற பெயரில் நிரந்தரமாக நிலை கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியத்தை தகர்க்கவும் இந்தியாவின் சில பகுதிகளிலேயே தேசிய இனங்கள் தங்கள் குரலை எழுப்பின.இந்திய உபகண்டத்தில் 1909 க்குப் பிறகு தேசிய இனங்களின் இயற்கையான வளர்ச்சி தெளிவாகத் தெரியத்துவங்கின.1909 இல் 'பீகார் பீகாரிகளுக்கே' என்ற தனி மானிலக் கோரிக்கை எழுந்தது.1920 இல் காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக் கொண்டது.இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்திலும் இவ்வுணர்வு வளர்ந்து வந்தது.எந்த தேசிய இனத்தை விடவும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் அதைப்பற்றிய முழுமையான உளவியல் உருவாக்கம் இன்றி உறங்கிக் கிடந்தார்கள்.


இக்காலகட்டத்தில் ஒரு தேசிய இன உணர்வின் விழிப்பினையும்இ தாம் ஓர் இனம் என்ற விழிப்பினையும் உருவாக்குவதில் தந்தை பெரியார் தம் வரலாற்றுப் பங்கினை அளித்தார்.அது மட்டுமின்றி சாதிகளாக உடைந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தில்இ தமிழர்களை 'திராவிடர்கள்' என்ற சொல்லைப் பயன் படுத்தியதற்க்கு அன்றைய அரசியல் சமூகச் சூழல்களும் அதிரடியாக எழுந்த வந்த ஆரியப் பார்ப்பனப் பேரலைகளும் காரணக்களாக இருக்கின்றன.தந்தை பெரியார் தமிழத் தேசிய இனத்தின் உரிமைப் போருக்கு முன் நிபந்தனையான தமிழத் தேசிய உளவியல் உருவாக்கத்தை எப்படி உருவாக்கித் தந்தார் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.


உடைந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒட்டி வைத்த பெரியார்.


தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தங்களை உணர்வதற்குப் பெருந்தடையாக இருந்ததுஇ அவர்களைப் பிரித்து வைத்திருந்த சாதிப் பிரிவுகளே.18-19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் அங்கமாகாக் கருத்தப்படவில்லை.1881 இல் எம் எ ஷெர்பிங் தனது Hindu tribes & castes இல் குறிப்பிடுவது போல பார்ப்பனர்களும் பறையர்களும் தமிழர்கள் என்ற வரையறைக்குள் சேர்க்கப்படவில்லை.அச்சொல் திராவிட சூத்திரர்களை மட்டுமே குறித்தது.அயோத்திதாசப் பண்டிதர் 1891 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திராவிட மகாஜனசபையை நிறுவினார்.

1882 இல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை பூர்வத் தமிழர் என அடையாளப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.1920 இல் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தில் அரசு அமைத்த நீதிக்கட்சி 1922 இல் ஆதி திராவிடர் என அழைக்க ஆணையிட்டது.தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்திய விடுதலையைக் கோரிய தலைவர்களும் கூட எப்படிப்பட்ட பார்வையைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 1921 இல் தமிழத்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த பகிங்காம் ரூ கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் கலவரம் பற்றி' நவசக்தி'யில் இப்படி எழுதினார்:'சேரிகளில் கூட்டங் கூட்டமாக வசிக்கும் பறையர்கள் திடீரென தமிழ் மக்களைத் தாக்குகிறார்கள்.புரசையில் சில தமிழ் மக்கள் பறையர்களால் கொலை செய்யப்பட்டனர்.திமிர் கொண்ட பறையர்களிடம் கத்திகளும்இபட்டாக் கத்திகளும் ... ஒளி வீசுகின்றன.தமிழ் மக்களிடம் கரங்கள் தவிர வேறொன்றுமில்லை.


' திரு.வி,க.போன்ற தமிழ் உணர்வு கொண்ட அறிஞர்களின் போக்கும்,புரிதலும் தமிழ்ச் சமூகத்தைப் பிளவுபட்ட நிலையிலையே பார்க்கும் அல்லது வைத்திருக்கும் நிலையில் இருந்தது.சாதியத்தை உயர்த்திப் பிடித்ததால் தமிழ்ச் சமூகம் ஒன்றுபட முடியாமல் இருந்ததை இது பிரதிபலிக்கிறது.


சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை தலமையில் தொகுக்கப்பட்டது.அவ்வகராதியில் தமிழறிஞர்கள் தமிழன் என்ற சொல்லுக்கு ''பறையனொழிந்த தமிழ்ச் சாதியான்'' என்று வரையறை செய்திருந்தார்கள்.இவ்விதம் சொல்லும்,பொருளும்,நடைமுறையும் தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ் இனத்துக்கு வெளியே நிறுத்தியிருந்தன.


இந் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவினத் துடைக்க 'திராவிடர்' என்ற சொல்லை ஏற்க விரும்பினர்.அந்த சொல் முன்னமே வழக்கில் இருந்தது.


1892 இல் ஆதி திராவிட ஜனசபா சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. 1894 இல் பறையர் மகாஜனசபை திராவிட மகா ஜனசபாவாக மாறியது.


1909 இல் மெற்றாஸ் பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு (Madras Non-Brahmin Association), மெட்றாஸ் திராவிடர் அமைப்பாக(Madras Dravidian Association) மாறியது.திராவிடன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களையும்,பார்ப்பனர் அல்லாத பிற சாதியினரையும் இணைப்பதில் பெரும் பங்காற்றியது.திராவிடர் என்ற சொல்லை அன்றைய நிலையில் தமிழர்களைக் குறிக்கும் சொல்லாகவே பிற தேசிய இனத்தவர்கள் கருதினார்கள்.


தாழ்த்தப்பட்ட மக்களைத் தமிழ் சமூகத்தின் ஒரு பிரித்தறிய முடியாத அங்கமாக உணரவைத்து தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கு வழி வகுத்த பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.அவரது செயல்பாடுகள் 1930 முதல் 1950 வரைஇ இக் கோணத்தில் அமைந்திருப்பதைக் காண முடியும்.11.1.1942 அன்று திருவள்ளூர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் இவ்விதம் பேசினார்.


''தமிழர் கதி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் சமுதாயத்தில் தமிழன் சூத்திரனாக வேசி மகனாக ஆகி விட்டான்.ஆரியனால் தீண்டப்படாதவனாக நடத்தப்பட்டு வருகிறான்.கோவில்களில்,ஓட்டல்களில் தமிழனுக்குச் சம உரிமை இல்லை,பல தமிழர்களுக்குப் பிரவேசமே இல்லை.


சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லை.இதற்கு என்ன காரணம்? தமிழனே.தமிழனை இழிவு படுத்துகிறார்கள்..தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதிகளாக மதிக்கப்படுகிறார்கள்.பழந்தமிழர்கள்� பறையர்,பள்ளர்,சக்கிலியர் சண்டாளர்களாக இருக்கிறார்கள்.இப்படி நூற்றுக் கணக்கான சாதியாய் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்''.


தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒட்டு மொத்த தமிழர்களின் விடுதலையைக் கோரியது.பெரியார் பேசிய திராவிட விடுதலை ஒட்டு மொத்த தமிழ்மொழியினக் குடும்பத்தையும் உள்ளிட்டதாக இருந்தாலும் தெலுங்கு,கன்னட,மலையாள தேசிய இனங்கள் திராவிடர் என்பது தமிழர்களைக் குறிப்பதாகவே புரிந்து கொண்டன.1956 இல் மொழிவாரி மானிலச் சீரமைப்புக்குப் பின் தந்தை பெரியார் தமிழ் நாட்டு விடுதலையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.தமிழ் மக்களை சாதி கடந்து இணைப்பதையே குறிக் கோளாகக்கொண்டு அதில் வெற்றி பெற்றார்.1930-1950 ஆகிய கால கட்டத்திற்குள் இம் முயர்ச்சியில் அவர் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.இக் கால கட்டத்தில் தான் நாம் தமிழர் என்ற உணர்வும் புரிதலும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டது.


சாதிச் சுவர்களை உடைத்துத் தமிழர்களை ஒருங்கிணைப்பதே சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடாக இருந்தது.சாதி உணர்வையும்,சைவ உணர்வையும் பாராட்டிய சைவப் பெரியார்கள் பெரியாரின் கண்டனத்திற்கு உள்ளானார்கள்.1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கற்பட்டில் நடந்த முதலாவது மாகாணச் சுய மரியாதை மாநாடு சாதி மேலாண்மையைக் கடுமையாகத் தாக்கியது.தீண்டாமை,சாதி ஒழிப்பு,புரோகிதர் விலக்கல்,சாதிப்படங்களைத் துறத்தல்,சமயச் சின்னங்கள் அணிவதை மறுத்தல் போன்றவற்றைத் தீர்மானங்ககளாக நிறைவேற்றியது.தீண்டாமையைக் கைவிடக்கோரியும், இழிகுலத்தார் கோவிலுக்கு நுழையக் கூடாது என்ற கடுஞ் சைவர்கள் போக்கினையும் எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போர் தொடுத்தது.தீண்டாமை என்பது சிவபெருமானால் வகுக்கப்பட்டது என்று சிவ நேசன் (செப்டம்பர் 1927) போன்ற சைவப் பத்திரிகைகள் தீண்டாமையை ஆதரித்துப் போராடின.(ஆ.இரா.வெங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாளரும்,சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1994.பக் 35-36)


சுய மரியாதை இயக்கம் பார்ப்பனர்களை எவ்விதம் எதிர்த்ததோ அதே வேகத்தில் சாதிவேற்றுமை பாராட்டிய பார்ப்பனர் அல்லாதாரையும், சைவ-தமிழ் உணர்வாளர்களையும் சாடியது.1929 மே 16 முதல் ஆறு நாட்கள் நடை பெற்ற திருப்பாதிரிப்புலியூர் சைவர் மா நாட்டில் சுய மரியாதை இயக்கச் சார்புடையவர்களாகக் கருதப்பட்ட சீர்திருத்தச் சைவர்களை விலக்கி வைத்தனர்.சீர்த்திருத்த எண்ணம் கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை இபூவாளூர் செல்வகணபதி அகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பார்ப்பன எதிர்ப்பு என்பதில் சுயமரியாதை இயக்கத்தின் போக்கை விரும்பிய சைவர்கள், தங்களுடைய சாதிஉணர்வும் மேலாதிக்க உணர்வும் தாக்கப்படுவதைப் பார்த்தவுடன் பார்ப்பனர்களுடன் கைகோர்க்கத் தலைப்பட்டனர்.இதை குடியருசுப் பதிரிகை சுட்டிக்காட்டிச் சாடியது.


''பார்ப்பனர்களும் அவர்களின் எதிரிகளாகிய சைவ சமயிகளும் இது சமயம் தங்கள் இருவர்களின் அடிப்படையான வித்தியா சத்தைக் கூட மறந்து விட்டு எப்படியாவது அடியோடு அழிக்க வந்திருக்கும் ஆபத்திலிருந்து தப்பு வித்துக் கொண்டால் பின்னால் அவரவர்கள் தனித்தனிக் காரியத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி தினம் ஒரு வருணாச்சிரம மகா நாடும் கூட்டிய வண்ணமாக இருக்கிறார்கள்''(குடியரசு 7 ஏப்ரல் 1929 தலையங்கம்.)


ஆனால் 1930 களில் தந்த்தை பெரியார் சைவர்கள் பெரிதும் போற்றிய மறைமலையடிகளின் 'அறிவுரைக் கொத்து' தொடர்பான போராட்டங்களில் மறைமலையடிகளை ஆதரித்து அவருக்கு அரணாக நின்றார்.


1935 ஆம் ஆண்டு மறைமலையடிகள் எழுதிய 'அறிவுரைக் கொத்து' சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடை நிலைத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்ட நிலையில் இந்திய தேசியம் பேசிய தினமணி சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் அந் நூலைக் கடுமையாக விமர்சித்தன.' நம் நாட்டவரைத் தாழ்த்தியும்,வெளி நாட்டவரை உயர்த்தியும் மறைமலையடிகள் எழுதியிருப்பதாகக் கண்டித்தன.இதை பகுத்தறிவு இதழ் ( செப்டம்பர் 1935) 'போக்கிரித்தனமான புகார்' என்று சாடி மறைமலையடிகளுக்கு அரணாக நின்றது.மறைமலையடிகள் நல்ல தமிழரிஞராக இருந்தாலும் அவர் பார்பனர் அல்லாதவர் என்பதால் பிராமணர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.என்றும் இது பார்ப்பன சூழ்ச்சியே என்றும் குடியரசில் நீலாவதி எழுதினார் (ஆ,இரா.வேங்கடாசலபதி .பக் 48) இந் நிலையில் மறைமலையடிகளுக்கும் தந்தை பெரியாருக்கும் இடையே ஓர் இணக்கமான சூழல் ஏற்பட்டது.


1937 இல் சென்னை மாகாண பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பு செய்தி வந்த பின், சைவ-தமிழ் அறிஞர்களும் சுயமரியாதைக்காரர்களும் இந்தியை எதிர்த்தனர்.1938 இல் இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன சூழ்ச்சியாகவே இரு சாராலும் கருதப்பட்டது.1937 டிசம்பர் மாதத்தில் வேலூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாஜ மாநாட்டில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திக்கு எதிரான போரில் இக் கூட்டணியை அமைக்க முதல் அழைப்பை விடுத்ததே தந்தை பெரியார் தான்.(குடிஅரசு 8 மே 1938)


1937 ஜூன் மாதம் முதலே இந்தி எதிர்ப்பு கருக் கொள்ளத் துவங்கியது.1937 லிருந்தே சைவர்கள் கூட்டங்கள் நடத்தி இந்தியை கட்டாய பாடமாக்கக் கூடாதென கூறி வந்தனர்.1937 டிசம்பரில் வேலூரில் சைவ சித்தாந்த மகா சமாஜ மா நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.( ஆ.இரா.வெங்கடாசலபதி இபக் 50)


ஆத்திகர்கள் என்றும் தங்களை மேல்சாதிக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சமூக மேலாண்மையைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்த சைவர்கள் ஒரு கூட்டணியில் சேர்த்து இந்தியை எதிர்க்கப் பெரியார் முன் வந்த்தார்.(குடிஅரசு 8 மே 1938) ஆனால் அவர்களோடு சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை.குடி அரசு இவ்விதம் எழுதியது,


''பொதுவாக தமிழ் மக்களை ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலை தூக்காமல் இருக்கத் தக்க வண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள்,வருகிறவர்கள் சைவர்களேயாகும்.அவர்களும் அவர்களது சைவ சமூகமுமே தமிழ் நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்கு தமிழர்களை அடிமையாக்கிற்று.ஆரிய வாதிக்கத்துக்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாக இருகிறார்கள் என்றால் சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம்.உண்மைச் சைவர்களுக்கு கடுகளாவாவது தன்மான உணர்ச்சி ஏற்பட்டு தங்களுடைய சற்சூத்திர தத்துவத்தை சிறிதாவது பின் வாங்கிக் கொள்ள அறிவு கொள்வார்களேயானால் ஆச்சாரியாரின் மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கிவிடும்.அந்த உணர்ச்சி சைவர்களுக்கு சுலபத்தில் ஏற்படாது எங்கின்ற தைரியத்தாலையே இன்று ஆச்சாரியார் இவ்வளவு துணிச்சலுடனும் மூர்க்க உணர்ச்சியுடனும் காரியாதிகள் செய்ய முடிகின்றது.(குடி அரசு 27 மே 1938)


இதில் பெரியாரின் சறுக்கலில்லா கொள்கையும் அதே நேரம் இன உரிமையைக் காக்க உசுப்பிவிட்டு ஒன்று சேர்க்கும் திறனும் வெளிப்படும். இதன் பின்னர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வர சுவாமியின் ஆண்டு விழாவின் போது ஞானியாரடிகள் இந்தித் திணிப்பைக் கண்டிப்பப் பேசினார் ( நவசக்த்தி 17 ஜூன் 1938).இதன் பின்னர் சைவர்களும் சுயமரியாதைக்காரர்களும் சேர்ந்து பல மா நாடுகளில் பங்கு பெற்றனர்.இதில் குறிப்பிடத்தக்கது 1937 ஆகஸ்ட்டில் துறையூரில் நடைபெற்ற முன்றாவது சுயமரியாதை மாநாடு ஆகும்.இதில் பெரியார்,அண்ணா,மறைமலை அடிகள் பிற சைவர்கள் பங்கேற்றனர்.


அது போலவே சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் திருச்சி மா நாட்டில் பெரியாரும் பிற சுயமரியாதை இயக்கத் தலைவர்களும் பங்கேற்றனர்.(குடி அரசு 17 அக்டோபர் 1937)


இவ் விதம் இந்தி எதிர்புப் போரில் சைவர்களும் இணைந்து நின்றாலும் போராட்டக் களத்திற்க்கு வரும் போது அவர்கள் சட்டப் படியான வழி முறைகளுக்கு அப்பால் வர மறுத்தனர்.1939 முதலே பல மாநாடுகள் நடத்தப்பட்டு அவற்றில் தமிழ் சமயம் ஆன்மீகம் ஆகியவை சைவர்களால் வலியுறுத்தப்பட்டன.


1938 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் சுயமரியாதைக் காரர்களையும் ஆன்மிகம் பேசிய சைவர்களையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் போராட்டக் களத்திற்க்கு அழைத்து வந்த பெருமை பெரியாரைச் சேரும்.தமிழ்த் தேசிய இனத்தைப் பிரித்து வைத்திருந்த சாதித் தடைகளை மீறித் தமிழர்களை இணைத்தவர் அவரே.முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கி கைதாகி சிறையில் மாண்ட போராட்டக்காரர் நடராசன் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்.(15 சனவரி 1939).அது போலவே இறந்த தாளமுத்து (12 மார்ச் 1939) நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிற சாதியினரையும் ஒன்றிணைத்தது.பெரியாரின் இந்திக்கு எதிரான போராட்டம் சாதியுணர்வைச் சைவர்களையும் ஏனைய சாதியினரையும் களத்தில் கை கோர்க்க வைத்தது.தாங்கள் அனைவரும் தமிழர் என்ற உணர்வு பெற வைத்து தமிழின உளவியல் உருவாக்கத்தை நிலைப் படுத்தியது.

1938 முதலே தமிழகத்தின் விடுதலையை பெரியார் தனது குறிக்கோளாகக் கொண்டார். தமிழ் நாட்டின் விடுதலையைக் கோராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் தேசத் துரோகிகள் எனக் கணித்தார்.இந்தக் கோணங்களில் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியத்தின் தந்தை இதந்தை பெரியார் என்பது புலப்படும்.






சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். 'பிரபாகரன் விரைவில் வருவார்!' என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டுதிருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார்.




சீமானின் 'நாம் தமிழர் இயக்கம்' அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.




''கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?




''''தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.




''''தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?




''''இதெல்லாம் வரலாறு அறியாத அம்மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு. தமிழீழ மக்களுக்கு அந்தத் தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்கிறதுதானே? அப்படியென்றால், அம்மக்கள் கொடுமைப்பட்டது ஏன்? சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன்? அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழ்ப் பெண்ணை விரட்டி விரட்டிச் சூறையாடியது ஏன்? எல்லாம் இனவாத நோக்கம்தான். இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம்தொட்டே இருந்ததால்தான் தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாகி வாழ முடியவில்லை. தனி நாடு கேட்டான்.




தமிழனாக இருந்துகொண்டு இதைச் சொல்லவே எனக்கு நாக்கு கூசுகிறது. ஆனாலும், அதுதான் உண்மை. தற்காலத் தமிழன் இனத்தைவிட பணத்தை மதிப்பவன். அதைக் கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான், இந்தத் துரோகம் நடந்தது. ஆனால், கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளந் தலைமுறை அதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையைக் கட்டளையாகப் பணித்துதான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்!




''''பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது... அதுபற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே...




''''இந்திய ராணுவ உதவியுடன் சிங்களவன் தொடுத்த தந்திரப் போர் உக்கிரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன். முழுக்க முழுக்க நள்ளிரவுப் பயணமாகவே இருந்தது அது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னால் உட்கார்ந்திருக்க... ஜீப் எங்களை அழைத்துச் சென்றது. திடீரென்று நின்ற வண்டியில்இருந்து அதுவரை ஓட்டி வந்தவர் இறங்கிக்கொண்டார். தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார். சில கிலோ மீட்டர்கள் போனதும் ஜீப்பின் விளக்கு கள் அணைக்கப்பட்டன. இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டுமே தெரிந்த திசையில் பயணமானது. ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் சாதாரண குடிசை. உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன். இல்லை அவர்!




அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. 'புலி உறுமிக்கொண்டு வருகிறது!' என்றார் நடேசன் சிரித்தபடி. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்னச் சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது. பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.'




சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. 'அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்' அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, 'கிருஷ்ணர் என் பக்கம்'னு நினைத்தேன்.எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்' என்றார்.




தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாகப் பேசியிருந்தேன். அதைப் பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன். 'தமிங்கிலீஷ்ல பேசுவதாகச் சொன்னீங்களாமே. அது உங்க நாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆனதுதான். ரொம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை. சமாதான காலத்துல உங்க நாட்டு டி.வி-யை இங்கே திறந்துவிட்டதன் விளைவு அது. தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும்!' என்றார்.




அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து 'கோபம்'னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். 'அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்' என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ' 'கோபம்'னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால 'கோபம்'னே இருக்கட்டும்!' என்றார். மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். 'பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்... நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்' என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன். சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, 'யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்' என்று நினைவுபடுத்திக்கொண்டார். 'பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே' என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப் போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார். 'பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்'னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்னை நினைத்தாரோ, 'சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும்... நடக்கட்டும்!' என்றார்.




சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள்தோல்வி யில் முடிந்தது பற்றி அடுத்து பேசினார். 'வன் முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலாக இருக்க முடியும். சுமாரான வன்முறையை வைத்து வெற்றி பெற முடியாது. வலிமை உள்ளவன் வெல்வான். எனக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடக்கும். என்னுடைய கவலை இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சைப் பயன்படுத்த வேண்டும்' என்றார். 'பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்து விட்டன. இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றேன். 'இல்லை தம்பி, பேச்சும் ஒரு படையணிதான். என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு. அதே போல் சினிமாவும் ஒரு படையணிதான். தமிழனுக்குத் தலைவனாக வருபவன் சாகத் துணிந்தவனாக இருக்கணும். சாகப் பயந்தவன் தரித்திரம். சாகத் துணிந்தவன் சரித்திரம். இந்தா இருக்காரே...' என்று ஒருவரைச் சுட்டிக் காட்டினார் பிரபாகரன். 'இவர்தான் கடாபி. என் பாதுகாவலர். சாதாரணத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர். உங்கள் நாட்டில் இப்படியருத்தர் இருந்தால், அனைத்து உச்ச விருதும் கொடுத்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் காரணம். கடுமையான பயிற்சி... எளிதான சண்டை! இது தான் இங்குள்ள தத்துவம்' என்றார்.




அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டேன். 'குண்டாக இருக்கிறேனே தவிர, எனக்கு எந்த நோயும் இல்லை!' என்றார். நன்றாகச் சாப்பிடுகிறார். 'இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் டைரக்ஷன்' என்றார். ராணுவம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார்.




எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போது எல்லாம் அவரது முகம் மலர்கிறது. அவர் அமைப்புக்குச் செய்த உதவி பற்றி எல்லாம் சிலாகித்துச் சொன்னார். அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்தாராம். 'உங்களது நாட்டை எதிர்த்துப் போரிடும்போது எம்.ஜி.ஆர். கொடுத்தார். 'அது தேசத் துரோகமா?' என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. எங்களது நோக்கத்தை மட்டும்தான் பார்த்தார்!' என்று வார்த்தைகளில் அத்தனை நன்றி தொனிக்கப் பேசிக்கொண்டே இருந்தார்




.அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, என்னுடன் இருந்த சேரலாதனிடம் அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. 'ஏன்?' என்று கேட்டேன். அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிப்பட்ட சந்திப்பு. அது பற்றி எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றவர், 'இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர். மற்றவரில் யாரும் துரோகியாகலாம். நான் உட்பட!' என்று கூறி நிறுத்தினார். என் இதயம் அதிர்ந்து அடங்கியது. மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்துக்குச் சென்றேன். 'கண்டேன் பிரபாகரனை' என்று அங்கிருந்த தங்கை யிடம் சொன்னேன். 'யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது. நீங்கள் இந்த இனத்துக்கு உண்மை யாக இருங்கள்' என்றாள் அவள்.




உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்.




''''இனியும் காண்பீர்களா பிரபாகரனை?




''''ஆம். காண்பேன்!




20 முறை அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர் மீண்டு வந்திருக்கிறார். அமைதிப்படை கொன்றதாகச் சொன்னார்கள். வந்தார். சுனாமியில் அடித்துப் போய்விட்டார் என்றார்கள். மீண்டும் வந்தார். கால் கருகிப்போய், ஒரு காலை எடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் பொய். அவரது கால் நன்றாகத்தான் இருந்தது. இப்போதும் அவர்களது ஆசைப்படி இறந்திருக்கிறார். பார்க்கலாம். அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல் காத்திருக்கிறோம்!




''நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள்!




நன்றி - ஆனந்த விகடன்

Wednesday, September 16, 2009

இலட்சிய நெருப்பு தியாகி திலீபன் தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு





தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!

தேசியத்தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடு – திலீபன தியாகி

திலீபனின் ஆண்டு நினைவுத் தினம் நெருங்கி வருகின்ற இந்த வேளையில், அந்த மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை, நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்!

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபத்தியிரண்டாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு, அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!


இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986ம் ஆண்டு, நவம்பர் மாதத்தின்போது, இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, நாங்கள் இப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளுவது வரலாற்றுக்கடனாகின்றது.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். “அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே” - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

“இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ண்Pர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!”

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளூரப் படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். “ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்” - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். “தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்”- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். “அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?”

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!. உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது! இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.

அது போலவே, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாகவும் தியாகி திலீபன் விளங்குகின்றான். சிறிலங்கா அரசுகள் தம்முடைய உணவைப் பறிப்பதனாலேயோ, தங்களைப் பட்டினி போடுவதாலேயோ, தம்மைப் படுகொலை செய்வதாலேயோ தமிழ் மக்கள் தம்முடைய போராட்ட உணர்வைக் கைவிட மாட்டார்கள். இது தமிழ் மக்களின் போராட்ட இயல்பாகும். திலீபனின் உண்ணா நோன்பு இதைத்தான் குறிப்பிடுகின்றது. “நாங்கள் பசியோடு இருந்தாலும் சரி, உணவில்லாமல் போனாலும் சரி, மிகப் பெரிய துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் சரி, நாங்கள் போராடுவோம். போராட்டத்தைக் கைவிடமாட்டோம்”- என்பதுதான் அந்தக் குறியீடாகும்!

தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்ந்தும் அதைத்தான் சொல்லி வந்திருக்கின்றது. நீங்கள் - அதாவது சிங்கள அரசுகள் - எங்களுக்குப் பசி பட்டினியைத் தந்து எம் மீது போரைத் திணித்து, அழிவைத் தந்து, இவற்றின் மூலம் எமது போராட்டத்தை அழித்து விடப் புறப்பட்டால் அது நடக்கவே நடக்காது! மாறாக, எமது விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுமே தவிர அது அடங்காது!

உணவு, மருந்து, பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளை விதிப்பதன் மூலமோ, பாரிய படைக்கலன்களைக் கொண்டு ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதன் மூலமோ தமிழீழ மக்களின் போராட்டத்தை அடக்க முடியாது என்பதைத்தான் தியாகி திலீபனின் போராட்டம் காட்டி நிற்கின்றது.

தியாகி திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் இன்னுமொரு மிக முக்கியமான விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்டத்தை ஒரே ஒரு வடிவத்தின் ஊடாக மட்டுமே நடத்துவார்கள் என்பதில்லை. விடுதலைப்புலிகள் அந்த - அந்தக் காலங்களுக்கு ஏற்ப, எந்த எந்த வகையில் போராட்டத்தை நடாத்தி, தங்களுடைய இலட்சியத்தை அடைய முடியுமோ, அந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்தையுமே கையாள்வார்கள் என்பதையும், திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் ஒரு குறியீடாகக் காட்டி நிற்கின்றது. புலிகளின் போராட்டம் கரந்தடிப் போர் முறையாக மாறலாம், அல்லது மரபு வழிப்போர் முறையாக இருக்கலாம். அல்லது இவையிரண்டும் கலந்த போர் முறையாக இருக்கலாம். அல்லது உண்ணா நோன்புப் போராட்டமாகக்கூட இருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுவார்கள். ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்தாலும் கடைசி வரைக்கும் தாயக விடுதலைக்காக போராடுவார்கள். போராடுவதற்கு, ஒரே ஒரு உத்திதான் என்று இல்லை. இலட்சியத்தை அடைவதற்காக என்ன என்ன வடிவங்களில் போராட்டக் கலை உள்ளதோ அத்தனை வடிவங்களும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்படும். திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் இதனையும் ஒரு குறியீடாகக் காட்டிள்ளது.

தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்த காலத்தின் -அதாவது இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த காலத்தின் அரசியல் நிலைமையையும், தற்கால அரசியல் நிலைமையையும் சிந்தனையில் கொண்டு, சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய திருப்பத்தைச் சந்தித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக, நேரடியாகத் தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து இந்தியாவினதும், சிறிலங்காவினதும் அன்றைய அரசுகள், ஒப்;பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் பாரளுமன்றத்திலும், சிறிலங்காவின் யாப்பிலும் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியா தனது இராணுவத்தைத் தமிழீழப் பகுதிகளில் நிலைகொள்ளச் செய்திருந்தது. இந்தியாவும் சிறிலங்காவும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை முற்றாக அணுகவில்லை. தமிழ் மக்களைக் கலந்து அவர்களுடைய ஆலோசனைகளையும் பெறவில்லை. ஆனாலும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த சில இயல்பான விடயங்கள் அமலாக்கப்படும் என்றுதான் தமிழீழ மக்கள் பொதுவாக நம்பினார்கள்.

தமிழீழ மக்கள் இவ்வாறு நம்பியதற்குக் காரணம், அவர்கள் சிறிலங்கா அரசுமீது கொண்டிருந்த நம்பிக்கை அல்ல! மாறாக வெளிநாடு ஒன்று இம்முறை தமிழ் மக்களின் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டிருக்கின்றது. அத்தோடு அந்த வெளிநாடு வேறு ஏதாவது ஒரு வெளிநாடு அல்ல! தமது அண்டைநாடான இந்தியா அல்லவா? அது மட்டுமல்லாது, இந்தியா வெறும் அண்டை நாடு மட்டுமல்ல, ஒரு பிராந்திய வல்லரசும் கூட! “தமிழ் மக்களின் நலனில், பிரச்சனையில் ‘அக்கறை’ கொண்டுள்ள இந்திய வல்லரசு, இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறைந்த பட்ச சரத்துக்களையாவது அமலாக்கம் செய்ய முற்படும். அதற்குரிய இராஜதந்திர அரசியல் அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு மேற்கொள்ளும் என்று எமது தமிழ் மக்கள் உளப்பூர்வமாக நம்பியிருந்த காலம்தான் அது!

ஆனால் தமிழீழ மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்;த்திருந்தது போல் எதுவுமே நடக்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாதம் தனது வழமையான பயங்கரவாத, பேரினவாதச் செயல்களை முடுக்கி விட்டது. மிகவேகமாகச் சிங்கள குடியேற்றங்களைத் தன் இராணுவத்தின் துணையுடன் சிங்கள அரசுடன் மேற்கொண்டது. தமிழ் அகதிகள் தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப்பகுதிகளில் மேலும் விரிவாக்கப்பட்டது. தமிழ்த் துரோகக் குழுக்கள், இந்திய-சிறிலங்கா இராணுவங்களின் துணையுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், போன்ற கொடுஞ் செயல்களைப் புரிய ஆரம்பித்தன. நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல சரத்துக்கள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.

இவற்றை இந்திய அரசும், இந்திய இராணுவமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக அமல் படுத்த வேண்டிய தம்முடைய கடமையைச் செய்யாமல், சிங்கள இனவாதத்திற்குத் துணைபோகும் சக்தியாகவே இந்தியா நடந்து கொண்டது.

‘இது இவ்வாறுதான் நடக்கப் போகின்றது’ என்று தேசியத் தலைவர் பிரபாகரன் ஏற்கனவே, வெளிப்படையாகவே அறிவித்திருந்தார் “இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தினால், தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை. சிங்கள இனவாதப் பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை” என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 1987ம் அண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் தெட்டத் தெளிவாகக் கூறியிருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான பார்வையின்படியே அன்றைய சிங்கள அரசு - ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசு - நடந்து கொண்டது. அது மட்டுமல்லாது, நடைமுறையில் செயல் இழந்துபோன இந்த ஒப்பந்தத்தை, உத்தியோகபூர்வமாக விழுங்கி ஏப்பம் விடுகின்ற வேலையை, இன்றைய சிங்கள அரசு - ராஜபக்சவின் அரசு - செய்து காட்டிவிட்டது. சிறிலங்காவின் உச்சமன்றத்தின் தீர்ப்பு மூலம் இந்த ஒப்பந்தம் இப்போது ‘சட்ட விரோதமான’ ஒன்றாகி விட்டது. அன்றைய ஆட்சியாளரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இன்றைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அரசியலில் எதிர்க்கட்சியினராக இருந்தாலும், சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சிந்தனையில் இரு தரப்பினரும் ஒத்த கருத்தினரே!


இந்த ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து, சிறிலங்கா அரசிடம் முறையிடுவதையும் விட, இந்த ஒப்பந்தத்தின் பாதுகாவலனாக வந்திருந்த இந்திய அரசிடம் முறையிடுவதே பொருத்தமானதாக இருந்தது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பும் கடமையும் இந்தியாவினுடையதாக இருந்தது. இந்தியாதான் தமிழ் மக்களின் உரிமைக்கு உத்தரவாதத்தை அளித்து, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தையும் நிறுத்தி வைத்தது. எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக தேசியத் தலைவர் தனது சுதுமலைப் பிரகடனத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்திய அரசு, தமிழ் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் காப்பாற்றுமாறு வேண்டி, ஐந்து கோரிக்கைகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முன் வைத்தது.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் மற்றும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும்
சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


இடைக்கால அரசு நிறுவப்படும்;வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் புதிதாகத் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, பள்ளிக்கூடங்கள், தமிழ்க் கிராமங்கள் ஆகியவற்றில் உள்;ள இராணுவ மற்றும் பொலிஸ் நிலைகள் மூடப்படல் வேண்டும்”

என்ற இந்தக் கோரிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்தபோது, எந்தவிதமான பதிலோ, சமிக்ஞையோ இந்தியாவிடமிருந்தோ, இந்தியாவின் தூதுவரிடமிருந்தோ வரவில்லை. ஆகவே இந்த ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து, இந்திய அரசிடம் நீதி கேட்டு, சாகும்வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தியாகி திலீபன் மேற்கொண்டான். மற்றவர்கள் இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொள்ளக் கூடாது. அதனைத் தானேதான் மேற்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக நின்று தலைமையிடம் அனுமதியைத் திலீபன் பெற்றான்.

இந்த ஐந்து கோரிக்கைள் புதிதாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல! ஏற்கனவே ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசாலும், சிறிலங்கா அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவைதாம் இவை! தவிரவும், இந்த ஒப்பந்தத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய விடயங்களையும் பார்க்க, மிகவும் இலகுவாக அமலாக்கக்கூடிய மிக எளிமையான சரத்துக்கள்தாம் இவை!

ஆனால் இந்திய அரசு இறங்கி வரவில்லை. அது சிறிலங்கா அரசு மீது எந்தவிதமான அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து பன்;னிரெண்டு நாட்கள் - 265 மணித்தியாலங்கள் - ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணா நோன்பினை மேற்கொண்டு, உடல் துடித்து உயிர் விட்டது, ஓர் உத்தம ஆத்மா!

தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான்! இந்திய அரசு தமிழர்களின் கோரிக்கைளுக்கு இணங்காத பட்சத்தில், திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக்கொள்வான் என்று எல்லோருக்குமே நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உயிரோடு இருந்தபோதே அவன் மீது இரங்கல்பா பாடப்பட்டது. அவன் உயிரோடு இருந்தபோதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.

அன்று, பிராந்திய வல்லரசான இந்தியா ஈழத்தமிழரின் பிரச்சனை தொடர்பாக ஒரு மலிவான ஒப்பந்தத்தைச் சிறிங்கா அரசுடன் மேற்கொண்டிருந்த போதும் அதனால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது இராணுவத்தை இலங்கைத்தீவில் நிலை கொள்ளச் செய்திருந்த போதிலும், அது எந்தவிதமான அழுத்தத்தையும் சிறிலங்கா மீது ஏற்படுத்தவில்லை. மாறாக, சிறிலங்கா அரசின் அலட்சியப் போக்கையே, இந்தியாவும் மேற்கொண்டதால்தான் மீண்டும் போர் வெடித்தது.

இதே செயற்பாட்டைத்தான் இப்போது மீண்டும் நாம் காண்கின்றோம். முன்பு இந்தியா இருந்த இடத்தில், இப்போது பல உலக நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கு உள்ள பிராந்தியச் செல்வாக்கு உலக நாடுகளுக்கு இல்லை. இந்தியா சிறிலங்கா அரசோடு ஒப்பந்தம் ஒன்றையும் போட்டிருந்தது. இந்த உலகநாடுகள் அவ்வாறு ஒப்பந்தமும் போடவில்லை. இந்தியா தனது படைகளை இலங்கையில் தரையிறக்கியிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவுமில்லை.

ஒப்பீட்டளவில் உலக நாடுகளையும் விட, அன்று இந்தியா பலம் பொருந்திய செல்வாக்கோடு இருந்தது. எனினும் இந்தியா சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அல்லது கொடுக்க முடியவில்லை. மாறாக, தமிழ் மக்ளின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுதான் தேவையற்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகித்தது. இதே செயல்களைத்தான் இன்று இந்த உலக நாடுகளும் செய்கின்றன. சிறிலங்கா அரசும் தன்னுடைய பாணியில் தன்னுடைய அதே செயற்பாடுகளைத்தான் செய்து வருகின்றது.

திலீபன் தன்னுடைய உயிர்த் தியாகத்தின் மூலம் ஒரு மிகத் தெளிவான செய்தியைச் சொல்லிச் சென்றுள்ளான். எந்த ஒரு சிறிலங்கா அரசும், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நிரந்தரமான நியாயமான, கௌரவமான, சமாதானத் தீர்வைத் தராது என்கின்ற உண்மையைத்தான் திலீபன் தன்னுடைய தியாகத்தின் ஊடான செய்தியாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் சமாதானத் தீர்வைத் தரப்போவதில்லை என்ற யதார்த்தத்தை -உண்மையை - நாமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளோம். திலீபனின் தியாகம் எமக்கு அந்தத் தெளிவைத் தந்தது.

என் அன்புத் தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!! என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் விழி மூடி வீரச் சாவடைந்தான். திலீபன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தக் காலகட்டத்தில் நாமும் விழிப்பாக இருந்து, எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எமது கடமையைச் செய்வோமாக! அதுவே நாம் திலீபனுக்கு இந்த இருபத்திரண்டாவது ஆண்டு நினைவின் போது செய்யக் கூடிய உண்மையான அஞ்சலியுமாகும்.