மணிவண்ணன் என்கிற மகத்தான கலைஞனை மனிதனை
இழந்து தவித்து கொண்டிருக்கிறோம். அவருடைய இறப்பு அறிவிற்குப்
புலப்பட்டாலும் மனதால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழகம் முழுவதும் வாழும்
பகுத்தறிவாதிகள் அனைவராலும் நமது தோழர் என்று உணரப்பட்ட அற்புதமான மனிதர்.
பார்ப்பன நடுத்தர வர்க்க பார்வையாளர்களை மய்யப்படுத்திய திரைப்படங்கள்
வெளிவந்து கொண்டிருந்த 80களில் வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர்
பிரச்சனைகளை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர். இனி
ஒரு சுதந்திரம், வீரப்பதக்கம், தோழர் பாண்டியன், அமைதிப்படை போன்ற
திரைப்படங்களில் மணிவண்ணனின் வசனங்கள் சமகால அரசியலை மிகத் துணிச்சலாக
சாடியவை.
97
என்று நினைவு.. மதுரை தமுக்கம் மைதானத்தில் தமுஎச சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த கலை இரவில் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொண்டார். உள்ளத்தை அள்ளித் தா, அவ்வை சண்முகி என மணி்வண்ணன் இயக்குனர்
பணியில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு முழு நேர நடிகனாக தன்னை வடிவமைத்து
கொண்டிருந்த நேரம். அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உருவாகி இருந்த
நேரம். அந்த மாநாட்டில் இடது சாரித் தோழர்கள் தவிர்த்து வெகுசன மக்கள்
பலரும் மணிவண்ணனை பார்ப்பதற்காக கூடி இருந்தனர். அந்த பெருந்திரள்
கூட்டத்திற்கு முன் மிகவும் பணிவாகப் பேசிய அவரது உரையின் பாதிப்பு பத்து
நாட்களுக்கு மேல் என்னிடம் இருந்தது. கடந்த ஒராண்டிற்கு முன் மூவர்
தூக்கிற்கு எதிரான உண்ணாநிலை மேடைக்கு மணிவண்ணனை அழைப்பதற்காக அவருடைய
வீட்டிற்கு நானும் அமீர் அப்பாஸூம் சென்றிருந்தோம். அப்போதும் மிகவும்
தன்மையுடன் பேசினார். அவருடைய மகன் வயதில் உள்ள என்னை அவரது சம வயது தோழர்
போல் நடத்திய அவரது பண்பு இன்றைய அரசியல்வாதிகள் , பிரபலங்கள் எத்தனை
பேருக்கு வரும்?
அய்ம்பது திரைப்படங்களை இயக்கிய, 400
படங்களில் நடித்த 30 ஆண்டு காலமாக பொதுவுடைமை அரசியலுடனும் திராவிட இயக்க
ஆளுமைகளுடனும் தொடர்பு வைத்திருந்த மனிதரின் எளிமை என்னை
ஆச்சரியப்படுத்தியது. இனி இது போல் என்னை ஆச்சரியப்படுத்தும் அற்புதமான
மனிதர்களை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்வி
என்னுள் எழுகிறது. அந்த மதுரை கலை இரவில் திரையில் தோன்றும் நடிகர்களை
நேரில் பார்ப்பதையே அதிசயமாக நினைக்கும் மனநிலைதான் என்னிடம் இருந்தது.
அப்போது எனக்கு வயது 12. ஆனால் சமீபத்தில் அவரை சந்தித்த போதும் அதே
பிம்பம்தான் எனக்கு இருந்தது. சினிமா குறித்தும் நடிகர்கள் குறித்தும்
எனக்கிருந்த மாய பிம்பம் உடைந்திருந்த இந்த காலகட்டத்திலும் அவர் என்னை
முழுமையாக வசியபடுத்தி இருந்தார் என்பது நான் மறுக்கமுடியாத உண்மை.
ஏனென்றால் இயக்குனர், நடிகர் என்கிற நிலையைத் தாண்டி அற்பதமான மனிதராக அவர்
இருந்தார் என்பதை நான் உணர்ந்து கொண்ட அனுபவம்.
அமைதிப்படை திரைப்படம் வந்த புதிதில்தான்
மணிவண்ணனைப் பற்றிய பிம்பத்தை எனக்கு என் அப்பா (ஏபி.வள்ளிநாயகம்)
கொடுத்தார். மதுரை மதி திரைஅரங்கில் ஒரு இரவுக் காட்சி அந்த திரைப்படத்தை
குடும்பத்துடன் பார்த்தோம். சத்யராஜ் அந்த படத்தில் பெரியாரின் வசனத்தை
பேசுவார். அந்த வயதில் அந்தக் காட்சி ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது.
மிகவும் பிற்காலத்தில் அந்த படத்தை பார்க்கும் போதுதான் தீண்டாமை கொடுமை,
நாத்திக பிரச்சாரம், அரசியல் நையாண்டி என பல்வேறு கருத்துக்கள் அந்த
படத்தில் இருப்பது புரிந்தது. இப்பேர்பட்ட கலைஞனுக்கான அங்கீகாரத்தை
திரையுலகம் கொடுக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.
பாரதிராசா போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த
இயக்குனர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் வார இதழில் மணிவண்ணன்
குறித்து பேசியது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது. முதல் மரியாதை, வேதம்
புதிது எடுத்த பாரதிராசாவா இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை
பயன்படுத்தியிருக்கிறார் என்பது நெஞ்சைப் பிளக்கும் கேள்வியாக இருக்கிறது.
பாரதிராசாவே உங்க படத்தை பார்த்துட்டு நாங்க கரையேறிட்டோம் நீங்க
கரையேறலையா? அலைகள் ஓய்வதில்லை, காதல் ஒய்வதில்லை, வேதம் புதிது,
கருத்தம்மா என உங்களின் பல படங்கள் உடைமை சமூகத்தையும் சாதிய சமூகத்தையும்
கேள்விக்குட்படுத்திய காவியங்கள்தான். அதற்காக தமிழ் திரைச் சூழலில்
உங்களுக்கு ஒப்பற்ற இடத்தை மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் கொடுத்து
வைத்திருந்தார்களே, அதற்கு நீங்கள் கொடுத்த பரிசு இதுதானா?
மணிவண்ணன் என்கிற மனிதன் வறுமையில்
பிறந்திருக்கலாம்; வலியுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்காக மணிவண்ணன்
வருத்தப்பட்டிருக்க மாட்டார். ஆனால் தன் வாழ்நாளில் கடைசி தருணங்களில்
ஏற்பட்ட மன வலியை அவரால் தாங்கியிருக்க முடியாது. பாரதிராசாவே கடுமையான
வார்த்தைகளில் பேசியிருந்தாலும் பத்திரிக்கை தர்மத்தை கருத்தில் கொண்டு
விகடன் பத்திரிக்கை அந்த வார்த்தைகளை தணிக்கை செய்திருக்கலாம்.
மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில்
வரும் இயல்பான தந்தை போலவே நிஜ வாழ்க்கையிலும் அற்புதமான மனிதராகவே
மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார். பணம் இல்லாதபோது கம்யூனிசமும் சாதி ஒழிப்பு
சிந்தனையுடன் படம் எடுத்த பல பேர் இன்று உடைமை சமூக உணர்வுடனும் சாதி
உணர்வுடனும் இருப்பதை நாம் கண்கூடாய் காண்கிறோம். இது போன்ற சந்தர்பவாத
சமூகத்தில் இறுதி வரை தான் கொண்ட கொள்கைகளே தனக்கான அடையாளம் என்று வாழ்ந்த
அற்புதமான மனிதர் மணிவண்ணன். அந்த படைப்பாளியின் கொங்கு நாட்டு கிண்டலை
நம்மால் மீண்டும் கேட்கமுடியுமா? ஈழப்பிரச்சனைக்கும் பெரியாரிய
மேடைகளுக்கும் வலிய வந்து உதவி செய்யும் கொள்கையாளரை மீண்டும் சந்திக்க
முடியுமா என்கிற கேள்விகள் எழும் போதே இந்த இழப்பின் வலியை நம்மால் உணர
முடிகிறது.
கார்ப்பரேட் கலாச்சரத்தை மய்யப்படுத்திய
மேட்டுக் குடி பாணி இயக்குனர்கள் மய்யம் கொண்டிருக்கும் இந்தச் சூழலில்
காரல் மார்க்ஸின், பெரியாரின் கருத்துக்களை திரைஅரங்குகளில் பேச வைத்த
எளியவர்களின் இயக்குனரை, அரசியல் விமர்சகரை நாம் இனி எங்கு காணப் போகிறோம்?
பகுத்தறிவுவாதியாக மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆனால் பாமர
ரசிகனாக என்னால் எதுவும் பேச முடியவில்லை.