Monday, June 29, 2009


நம் சொந்தங்களின் வாழ்வுரிமைக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?
29/06/2009
"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" - மகிந்த ராஜபக்சேயிடம், ஜூன் 9 ஆம் தேதியன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள்தாம் இவை.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளைநிலங்களை எதற்கும் உதவாத தரிசுநிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளிய சூத்திரதாரியான எம்.எஸ்.சுவாமிநாதனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவார்த்தமான வாக்கியத்தை முதன்முதலில் கூறியவர் டாக்டர்.ஜோசப் மெங்கெல் (Joseph Mengele) என்ற ஜெர்மானியர்.
பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை கலாநிதிப் படிப்பிற்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர். மானுடவியலிலும், மருத்துவத்திலும் பட்டம் பெற்ற ஜோசப் மெங்கெல், ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார்.
1943 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்திரவதைக் கொட்டடியில் இருந்த "நாடோடிகளுக்கான முகாமில்" (Gypsy Camp) மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1945 ஜனவரி 25 ஆம் திகதிவரை அம்முகாமில் பணியாற்றினார். அந்தக் காலத்தில் அவரால் சிறைக் கைதிகளின் மீது மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட வதைகள் கேட்போர் நெஞ்சம் கலங்கும் குரூரத்தன்மை பொருந்தியவை.
உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டையர்கள் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவரது பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவரது ஆய்வுக்காக சுமார் 1500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர்.
தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார். "மெங்கெல் மாமா.... மெங்கெல் மாமா....!" என்று குழந்தைகள் அவரை வளைய வளைய வரும் ஒரு நாளில் அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்வார். மயக்கமேற்படுத்தும் சாக்லேட்டைக் கொடுத்து அவர்களை மயக்குவார்.
மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இருதயத்தில் அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசியின் மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் அவயங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.
இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார். குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இதற்காக, பல்வேறு ரசாயனப் பொருட்களை ஊசிமூலம் அவர்களின் கண்களுக்குள் அவர் செலுத்திப் பார்த்தார்.
அதன் விளைவுகளை அவர் ஊன்றிப் படித்தார். இப்படிப்பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்திரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில் அவரது உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளே " "ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" என்பது.
யூத இனத்திற்கு மெங்கெல் செய்த கைங்கரியத்திற்குச் சற்றும் குறையாத அன்றேல் அதற்கிணையான ஒன்றை ஈழத் தமிழினத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஜூலையில் இருந்து செய்யவுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளுக்கு சோதனைச்சாலை எலிகளாகப் பலியாகவிருக்கும் வன்னிப் பெருநில மக்களின் நிலைதான் என்ன?
வட ஈழ மக்களும், அவர்தம் அவலமும்:
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப்போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டுவிடுகிறது.
2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெரு நிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சத்து 3 ஆயிரம் ஆகும். இவர்களில் சுமார் 38% பேர் வேளாண் தொழிலையும், 18% பேர் உற்பத்தித் துறையையும், 45% பேர் சேவைத் துறையையும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டின்போது வன்னிப் பெருநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்தி மதிப்பில் (Gross Domestic Product - GDP) வேளாண் துறையில் ஈடுபட்டிருந்த 38% மக்கள் 24.5% பொருள் உற்பத்தி மதிப்பிற்குக் காரணமாயிருந்தனர். உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த 18% மக்கள் 7% மதிப்பிற்கும், சேவைத் துறையில் ஈடுபட்டிருந்த 45% மக்கள் 68% மதிப்பிற்கும் காரணமாக இருந்தனர்.
போர் தொடங்கும் முன்பு - அதாவது 2004 ஆம் ஆண்டில் - வன்னிப்பெருநிலத்தின் 38% குடும்பங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 13 % நெல்லை விளைவித்தன. இலங்கையின் 20% வெங்காயம் அவர்களால் விளைவிக்கப்பட்டது. 7% மிளகாய் உற்பத்தி அவர்களிடம் இருந்தே வந்தது. சுமார் 1000 டன் புகையிலையையும் அவர்களே அந்த ஆண்டில் உற்பத்தி செய்திருந்தனர்.
இலங்கையில் இருந்த ஒட்டுமொத்த செம்மறி ஆடுகளில் சுமார் 20% வன்னிப் பெருநிலத்திலேயே இருந்தன. 60% வெள்ளாடுகள் அங்குதான் இருந்தன. சுமார் 2 கோடி லிட்டர் பால் (இலங்கையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10%) இங்கு உற்பத்தியானது. 6 கோடி முட்டைகள் உற்பத்தியாயின.
போர் முடிந்த இன்றைய தேதியில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2,62,632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35% பேருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.
கடந்த 13 மாதங்களில் 1,40,368 பேர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பதற்குத் தெளிவான விடையில்லை. மே 27 ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட ஐ.நா.சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2,90,130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,77,000 ஆகக் குறைந்து போயிருந்தது. ஜூன் 15 ஆம் தேதியன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,62,632 என மேலும் குறைந்து போயிருந்தது.
மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27,498 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இல்லாமலடிக்கப்படுவதென்பதன் பின்னணியிலுள்ள பயங்கரம் உறையவைப்பதாக இருக்கிறது. இன்று முகாம்களில் உள்ளவர்களில் 11,873 பேர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். 3,968 பேர் ஊனமுற்றோர்.
இவர்களுள் 57, 293 பேர் குழந்தைகள். அவர்களில் 7,894 பேர் தம் தந்தையரை இழந்தவர்கள். சுமார் 3,100 பெண்கள் கர்ப்பிணிகள். சுமார் 700 பேர் 70 வயதைத் தாண்டிய வயோதிகர்கள்.
எனவே, முகாம்களில் உள்ள மக்களில் 76,934 பேரினால் எவ்விதப் பணியிலும் ஈடுபட முடியாது. 1,85,698 பேரினால் மட்டுமே பணியில் ஈடுபட முடியும். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை 1,34,464 ஆகும். கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை இதிலிருந்து கழித்து விட்டால் பணியில் ஈடுபடக்கூடிய பெண்களின் எண்ணிக்கை 1,31,364 ஆகும். வேலை செய்யக்கூடிய வலு நிலையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை வெறும் 51,234 மட்டுமே.
அவர்களில் பலர் இன்றும் இராணுவத்தால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்கள் பட்டினியாலும், நோய்களாலும் கடுமையான துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மே 23 ஆம் திகதியயன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா.சபையின் தலைவர் திரு.பான் கீ மூன் சந்தித்தார். "என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை" என்று கூறி அவர் பெரிதும் வருந்தினார்.
சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி திரு. சரத் நந்தா சில்வா " இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். ஐ.நா.சபைத் தலைவர் மெனிக் முகாமுக்கு சென்ற மே 23 ஆம் திகதியன்றே, வவுனியாவில் உள்ள செட்டிகுளம் முகாமில் 66 பேர் மரணமடைந்தனர்.
அவர்களில் 60 பேர் வயோதிகர்கள். 6 பேர் குழந்தைகள். மே 25 ஆம் திகதியில் இருந்து ஜூன் 9 ஆம் திகதிவரை முகாமில் இருந்து வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 62 பேர் மரணமடைந்தனர்.. இவர்களில் 51 பேர் வயோதிகர்கள்.. 11 பேர் பச்சிளம் குழந்தைகள்.செட்டிகுளம் முகாமில் மட்டுமே ஜூன் 7 ஆம் திகதியன்று 14 பேரும், ஜூன் 8 ஆம் திகதியன்று 7 பேரும் இறந்து போயினர்.
இவ்வாறு இறந்தவர்களனைவரையும் பொதுச் சவக்குழியில் புதைப்பதை இலங்கை இராணுவம் தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த அவலம் ஏற்படக் காரணம் என்ன?
மக்களை கிராமங்களில் இருந்து விரட்டியடித்த இராணுவம்:
2007 இறுதியில் வன்னிப் பெருநிலத்தை ஆக்கிரமிப்பதற்கான போரை இலங்கை இராணுவம் தொடங்கியது. போர் தொடங்கிய நாளிலிருந்தே மக்களையும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளையும் அவர்தம் ஊர்களில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நோக்கி விரட்டுவதே இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையின் போர் உபாயமாக இருந்திருக்கிறது.
2008 ஜூன் மாதத்திற்குள்ளாக மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களை கிளிநொச்சியை நோக்கி விரட்டி அடிப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி கண்டது. வட ஈழத்தின் கீழிருந்த வவுனியா மாவட்டத்தின் ஒருபகுதியின் மக்களும் கிளிநொச்சியை நோக்கி விரட்டியடிக்கப் பட்டனர். இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்கு முற்றுமுழுதான பொறுப்பாளிகளான நிலைக்கு இதன்வழியாக விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.
புலிகள் தங்கள் பலத்தின் பெரும்பகுதியைத் தமது மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது உணவுத்தேவைக்கும் இருப்பிடத்திற்கும் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அவர்களைத் தள்ளுவதன் மூலமாக நெருக்கடியை அதிகரித்து, புலிகளின் போரிடும் வலுவைக் குறைப்பதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று கிளிநொச்சி வீழ்ந்தது. வன்னிப் பெருநில மக்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளும் இலங்கை இராணுவத்தால் வெற்றிகரமாகத் துரத்தி அடைக்கப்பட்டிருந்தனர்.
தென்னிலங்கையில் இருந்து வட ஈழத்திற்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்களும், மருந்துகளும் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. உணவுப் பற்றாக்குறை காரணமாக இந்த மக்களுக்கு இலைக் கஞ்சியைத் தவிர வேறு எதையும் கொடுக்க இயலாத நிலைக்கு விடுதலிப்புலிகள் நிர்வாகம் தள்ளப்பட்டது.
அப்பாவி மக்களின் மீதான இராணுவ எறிகணை மழை:
கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையே உள்ள உடையார்கட்டு கிராமத்தில் கிளிநொச்சியின் மருத்துவமனை இயங்க வேண்டி வந்தது. இந்த மருத்துவமனை மீதும், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்து 20 விநாடிகளில் 40 எறிகணைகளை வீசும் திறனுள்ள பல்குழல் எரிகணை பீரங்கிகளைக் கொண்டும், மிக், கிபிர் மற்றும் எப்-7 விமானங்களைக் கொண்டும் 2009 பிப்ரவரி மாதத்தில் இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
அப்பாவி மக்களின் மீதான இந்தத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிப் பல்வேறு சர்வதேச நாடுகளும், ஐ.நா.சபையும் கேட்டுக்கொண்ட பின்னரும் இலங்கை அரசு நிறுத்தவில்லை. இதனைத் தடுக்க இந்திய அரசும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அகதிகள் முகாம் உருவாக்கமும், வெளியான இராணுவ உண்மைகளும்
போரில் தான் வெற்றி அடைவது உறுதி என்பதை இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதத்தில் உறுதி செய்துகொண்டது.. இதன் பிறகே விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்துவந்த வன்னிப் பெருநில மக்களுக்கு அகதிகள் முகாம் அமைப்பது என்ற பேச்சை இலங்கை அரசு எடுத்தது.

இதன் பிறகே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற அது அனுமதி அளித்தது. இலங்கை இராணுவத்தின் இந்த ந்டவடிக்கையில் இருந்து, அது போரின் போது அப்பாவி மக்களை எவ்வாறு கையாளுவது என்பதற்காக வகுத்திருந்த திட்டம் வெட்ட வெளிச்சமானது:
1.. அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குள் விரட்டியடிப்பது
2.. விரட்டியடிக்கப்பட்ட மக்களைப் புலிகளைக் கொல்லும் சாக்கில் குண்டுவீசி அழிப்பது; தான் வீசிய குண்டுகளால் இறந்துபோன மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொன்று விட்டார்கள் என்று பரப்புரை செய்வது.
3.. குண்டுவீச்சில் இருந்து தப்பிய மக்களைப் போரின் இறுதி நாட்களில் புலிகளின் 'பயங்கரவாதத்திலிருந்து' மீட்கிறோம் என்ற சாக்கில், முதல் முறையாக வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பது
4.. வெளியேறிய மக்களை முகாம்களில் அடைத்து வைப்பது.
5.. அவர்களில் பணியாற்றும் வலுவுள்ள ஆண்கள் அனைவரையும் புலிகளெனக் குற்றஞ்சாட்டி வதை முகாம்களில் அடைப்பது.
6.. இவ்வாறாக, போரினுள் சிக்கிய தமிழினத்தை ஆண்களற்றதொரு சமூகமாக மாற்றுவது
7.. பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் அவரவர் ஊர்களில் மீளக் குடியமர்த்தி, உலகத்திடம் நற்பெயர் பெறுவது.
ஏப்ரல் 24 ஆம் தேதியன்று, அகதிகள் முகாம்களுக்குத் தலைவராக, 2006-2008 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவ சேனையின் தலைவராக இருந்த- யாழ் குடா மக்களைத் துன்புறுத்துவதில் பெயர்போன மேஜர்.ஜெனரல்.சந்திரஸ்ரீ நியமிக்கப்பட்டார்.
முடிந்தவரையில் தமிழர்களை வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வைத்தே அழித்துவிடுவதன் மூலம் அகதிகளாக வெளியேறுபவர்களைக் குறைத்துவிடலாமென்று இலங்கை அரசும் இராணுவமும் திட்டமிட்டன. அத்திட்டத்திற்கிணங்க, ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து, அப்பாவி மக்களின் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் பன்மடங்காக்கி அழித்தொழிப்பைத் துரிதப்படுத்தியது.
இந்த வெறித்தனமான தாக்குதலில் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்படுவதைக் கண்ட விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஏப்ரல் 26 இல் போர் நிறுத்தத்தை தானே முன்வந்து அறிவித்தது. இலங்கை அரசு அதையும் நிராகரித்தது.
போரை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாமல் அதை மறைமுகமாக நடத்திய இந்திய அரசு, இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் உதவியை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் பின்னரே - அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து மே 6 ஆம் தேதிவரை உள்ள கால கட்டத்தில்தான் - வரலாறு காணாத எறிகணைத் தாக்குதல் வன்னிப் பெருநில மக்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.. பல்லாயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டனர். ஊனமாக்கப்பட்ட, படுகாயப்படுத்தப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களுக்கு மருத்துவம் செய்யத்துணிந்த மருத்துவமனைகளும் இலங்கை இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.
முதன்முறையாக, போர்ப்பகுதியில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேற இலங்கை இராணுவத்தால் இதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களை நோக்கி இதுவரை புலிகளின் பிரதேசத்தை நோக்கி இராணுவத்தால் விரட்டப்பட்டிருந்த அப்பாவி மக்கள் செல்லத் தொடங்கினர்.
வவுனியாவில் இயங்கும் பன்னாட்டு மருத்துவ இயக்கமான " எல்லைகளுக்கு அப்பாலான மருத்துவர்" இயக்கத்தின் இந்த கலகட்டத்திற்கான மருத்த்துவ அறிக்கைகளை படித்தால் இந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்:
மே 7ஆம் திகதியன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவிற்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும், சகோதரரும், இனவாதக் கருத்துக்களை அள்ளிவீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்சே தலைவராக நியமிக்கப்படடார்..
மீதமுள்ள 18 பேர்களில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டுவீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளியவரும், இலங்கை இராணுவத்தின் செயலாளருமாகிய கோத்தபாயா ராஜபக்சேவும் ஒருவராவார்.
உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவார்களாகவும் ( இதில் இலங்கை இராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம் ), 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார்
1. Senior Presidential Advisor Basil Rajapaksa - Chairman of the Taskforce
2. S.B.Divarathne - the Secretary
3. Secretary to the President, Lalith Weeratunge,
4. Secretary, Defence, Public Security Law and Order, Gotabaya Rajapaksa,
5. Secretary, Ministry of Finance and Planning, Sumith Abeysinghe,
6. Secretary, Ministry of Resettlement and Disaster Relief Services, U L M Haldeen,
7. Secretary, Ministry of Nation Building and Estate Infrastructure Development, W.K..K.Kumarasiri,
8. Secretary, Ministry of Highways and Road Development, S.Amarasekera,
9. Secretary, Ministry of Power and Energy, M M C Ferdinando,
10. Secretary Ministry of Land and Land Development, J R W Dissanayake,
11. Secretary, Ministry of Health Care and Nutrition, Dr. Athula Kahandaliyanage,
12. Chief of Defence Staff, Air Chief Marshal G D Perera,
13. Commander of the Army Lt.Gen.Sarath Fonseka,
14. Commander of the Navy, Vice Admiral Wasantha Karannagoda,
15. Commander of the Air Force, Air Marshall, W D R M J Gunatillake,
16. Inspector General of Police, Jayantha Wickremarathne,
17. Director General\Department of Civil Defence, Rear Admiral S P Weerasekera,
18. Chief of Staff of the Sri Lanka Army\Competent Authority for the Northern Province Maj.Gen..G A Chandrasiri, and
19. Former Director General\National Planning Dept. B.Abeygunewardena .
வன்னிப் பெருநிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்திற்கு இவர்கள் இட்ட பெயர் 'வடக்கின் வசந்தம்'. தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
இலங்கை தலைமை நீதிபதி சில்வாவின் நேர்மை:
ஜூன் 5 ஆம் திகதியன்று இலங்கையின் தலைமை நீதிபதியான திரு. சரத் நந்தா சில்வா அவர்கள் அகதிகள் முகாமில் உள்ள மக்களின் உரிமைகளைப் பற்றி பேசியது உண்மை நிலையை உணர்த்துவதாக இருந்தது: "நம் நாட்டில் உள்ள சட்டப் பாதுகாப்புகளுக்கு அப்பாற்பட்டே அந்த மக்கள் உள்ளார்கள்.
அவர்கள் மீது இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்து அவர்களால் இலங்கை நீதிமன்றங்களில் நீதி கேட்க முடியாது. இதன்மூலம் அந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இவ்வாறு கூறுவதற்கான விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்று அவர் கூறினார்.
ஏதுமற்ற மக்களும், இந்திய அரசின் வஞ்சகமும் :
இலங்கையின் தலைமை நீதிபதியின் இந்தக் கூற்றுக்குப் பிறகும் கூட இந்திய அரசு இலங்கை அரசுடன் தான் இதுவரை கொண்டிருந்த உறவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. மாறாக, உறவுகளையும், உடலின் பாகங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் மக்களிடம் கடைசியாக மிஞ்சி நிற்கும் மானத்தையும் பறிக்க முயலும் ராஜபக்சேவின் கொடுங்கோல் திட்டத்தை ஆதரிக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லவுமே அது முனைந்து நிற்கிறது.
ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அகதிகளின் மறுவாழ்விற்காக 100 கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளிக்க முன்வந்த பின்னரே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணைகளுக்குப் பலியாகினர். இதற்கு இந்திய அரசு எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மே 7ஆம் திகதியன்று "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வட ஈழத்தின் மீளுருவாக்கத்திற்காக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட- தமிழர் தரப்பில் பிரதிநிதிகளைக் கொண்டிராத - 'கொடுங்கோல்' குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை.
மாறாக, மே 27 ஆம் திகதியன்று, இந்திய அரசு அதிரடி அறிவிப்பொன்றினை வெளியிட்டது. அதாவது, அகதிகள் மீள்வாழ்வுத் திட்டங்களுக்காக, இலங்கை அரசுக்கு வழங்குவதாகச் சொன்ன 100 கோடி ரூபாவை 500 கோடியாக அதிகரித்திருப்பதாக அறிவித்து இலங்கை அரசினைக் களிகொள்ளவைத்தது.
மே 22ஆம் திகதி அறிவிப்புக்கும் 27ஆம் திகதி அறிவிப்புக்கும் இடையில் பெருகிய கோடிகளை, வன்னிப் பெருநிலத்தை மீளுருவாக்கம் செய்யப்போகும் கொடுங்கோல் குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அளித்திருக்கும் அங்கீகாரமாகவே கருத முடியும்.
வடக்கின் வசந்தத்திற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்துள்ள 'போல் போட்' வேளாண் திட்டம்
'அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாத துவக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க, 'அதற்குத்தான் நான் இருக்கிறேனே' என்று நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பிணந்தின்னிக் கழுகாக, இலங்கை அதிபரின் இரட்சகனாக முன்வந்திருக்கிறார்.
ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை அதிபர் ராஜபக்சாவை இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். அவர்கள் 'வடக்கின் வசந்தம்' திட்டம் குறித்து கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தின் வேளாண் துறையைச் சீரமைப்பது குறித்து விவாதித்தனர். அப்போது, "இலங்கையின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை வலுவாக்க இந்தியாவின் உதவி இன்றைய காலத்திற்கு இன்றியமையாதது. இந்த உதவியை இலங்கை உடனடியாக எதிர்பார்க்கிறது.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களால் இவ்வளவு துரிதமாக செயல்படமுடியுமா என்பது சந்தேகமே," என்று இலங்கை அதிபர், சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். "இதுகுறித்து இந்தியாவும் இலங்கையும் ஜூலை மாதமே கலந்துரையாட வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார். "வடக்கின் வசந்தத் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படவுள்ள வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்" என்பதே ராஜபக்சே, சுவாமிநாதனிடம் கூறிய கூற்றின் சாரம்.
ராஜபக்சேவின் கூற்றை எம்.எஸ்.சுவாமிநாதன் அப்படியே ஏற்றுக்கொண்டார். "தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்படவேண்டும். என்றாலும் கூட இன்றைய உடனடித் தேவை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுதான்" என்று அவர் கூறியிருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை. வேளாண் மீட்டுருவாக்கத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் அவர் முன்வைத்திருக்கிறார்
.

No comments:

Post a Comment