திலீபன்
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்
Saturday, June 22, 2013
மணிவண்ணன் - தமிழ் சமூகத்தின் தவிர்க்க முடியாத கலைஞன்
Sunday, March 25, 2012
அயோக்கியதனம் எது? யோசித்துப் பாருங்கள்
அயோக்கியதனம் எது? யோசித்துப் பாருங்கள்
அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.
கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்: ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?
----------------------
தந்தை பெரியார், "குடிஅரசு" 28.10.1944
****
யோசித்துப் பாருங்கள்
மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் `பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால், மிருகம், பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு, பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும், கொத்தியும் துரத்தி விடுகின்றன.
அவற்றைப்பற்றிய கவலையோ, ஞாபகமோ கூட அவற்றுக்குக் கிடையாது.
மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம்; இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால், அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.
ஆகவே, மனிதனின் நடப்பையும், கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும், கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு, இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
செல்வவான் (சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
----------------------
தந்தை பெரியார் "உண்மை", 14.8.1971
ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி?
இந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் கொடுமை! கொடுமை!! கொடுமை!!! மயமாகவே செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் எரிமலை வெடித்துத் தீப்பொறிகளும், தீக்குழம்புகளும் புகைகளும் கிளம்பி அநேக கிராமங்களைச் சாம்பலாக்கி விட்டதென்றும் அதனால் அநேக பொருள்களுக்கும் உயிர்களுக்கும் நஷ்டமேற்பட்டு விட்டதென்றும் நியூசிலாண்டிலும், ஆஸ்டீரியாவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு அநேக கட்டடங்கள் இடிந்து விழுந்து அநேக உயிர்கள் மடிந்தும் பலத்த சேத மேற்பட்டு வருகின்றதென்றும், இங்கிலாந்திலும் லண்டனிலும் புயல் காற்றும் மழையும் வெள்ளமும் அடித்து அநேக பட்டணங்களும் உயிர்களும் சாமான்களும் தொழிற்சாலைகளும் அழிந்து சேதமும் நஷ்டமுண்டாய் விட்டதென்றும், வங்காளம், அஸாம் சைல்சாட் பிரதேசங்களில் அய்நூறு சதுர மைல்கள் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு அநேக கிராமங்களையும் அநேக மனித உயிர்-களையும், ஏராளமான கால்நடை ஜீவன்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டதென்றும், திருவாங்கூரிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதென்றும் பம்பாய், சைனா முதலிய இடங்களில் நெருப்பு பிடித்து அநேகக் கட்டடங்களும் பொருள்களும் வெந்து சாம்பலாகி விட்டதென்றும், மற்றும் பல பெரிய பட்டணங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் இடிந்து விழுந்து மக்களை அழுத்திக் கொன்று விட்டதென்றும், இவைகளாலும் மற்றும் பல காரணங்களாலும் பல இடங்களில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமல் பட்டினியால் வாடி மயங்கி செத்துப் பொத்தென்று விழுந்து சாகின்றார்கள் என்றும் மற்றும் இவை போன்ற கொடுமையும் பரிதாபகரமானதுமான செய்திகள் தினப்படி வந்த வண்ணமாயிருக்கின்றன.
இது நிற்க, முகரம் பண்டிகைக் கொண்டாட்டத்தால் பல இடங்களில் இந்து, முஸ்லிம் கலகங்களும், அடிதடிகளும் கொலைகளும் நடந்து பலர் காயப்பட்டதாகவும், பலர் உயிர் துறந்ததாகவும் செய்திகள் ஒருபுறம் வந்த வண்ணமாயிருக்கின்றன.
இவைகள் தவிர பல இடங்களில் முதலாளிமார்கள் கொடுமையால் தொழிலாளர்கள் வயிற்றுக்குப் போதாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை நிறுத்தம் செய்து பட்டினி கிடப்பதாகவும் செய்திகள் மற்றொரு புறம் வந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்றும் சுதேசி, பரதேசி என்றும், வெள்ளையர், கறுப்பர் என்றும் ஜாதிமத தேச பிரிவுகளால் ஒருவரையொருவர் துன்புறுத்துவதும் ஒருவொருக்கொருவர் கலகம், அடிதடி, கொலை கொள்ளை முதலியவைகள் செய்து கொண்டு இறப்பதும் கஷ்டப்படுவதாயிருப்பதாகவும் சமாச்சாரங்கள் பறந்த வண்ணமாயிருக்கின்றன.
மற்றும் பெண்ணை ஆண் துன்பப்படுத்தினான்: ஆணைப் பெண் துன்பப் படுத்தினாள், இதனாலும் மற்ற காரணங்களாலும் உலக வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கின்ற செய்திகளும், ஒருவனுடைய மனைவி மற்றொருவனை இச்சிக்கிறதனாலும், ஒருவன் மனைவியை மற்றொருவர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும் நடைபெறும் கொலைகளின் விவரமும் இடையறாமல் வந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் புருஷன் பிடிக்காமலும், விதவை, புருஷனை வேண்டியும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக உலகறிந்த ரகசியங்கள் எங்கும் பேசிய வண்ணமாக இருக்கின்றது.
மற்றும் மழையில்லா கொடுமையால் உஷ்ணத்தாக்கு ஏற்பட்டு டில்லியில் 125 பேர்கள் இறந்ததாகவும், மழையில்லாததாலும் வெய்யில் கொடுமையாலும் சில இடங்களில் கிணறுகளில் குடிக்கக்கூட தண்ணீரில்லாமல் வறண்டு போனதாகவும், வேளாண்மை விளையாமல் கருகிப் போனதாகவும், கஷ்டப்-படுவதாகவும், மற்றொரு இடத்தில் அதிக மழை பெய்து வேளாண்மை நாசமாய்ப் போய் விட்டதாகவும், குளிரினால் நடுங்குவதாகவும், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதைப் போல் ஒரு இடத்தில் கால்நடைகளுக்குத் தீவனமில்லாமல் கஷ்டப்பட்டு பட்டினியால் இறப்பதாகவும், மற்றொரு இடத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தாராளமாய் இருந்தும் கால்நடைகள் தொத்து வியாதியால் தினம் நூற்றுக்கணக்காய் மடிவதாகவும் மற்றும் கடவுள் கோவில்களில் நெருப்புப் பற்றிக் கொண்டதாகவும், அம்மன் நகைகள் திருட்டுப்போய் விட்டதாகவும் சமாச்சாரங்கள் வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க ஒரு நாட்டில் நூற்றுக்கு 90 பேர் படித்திருக்கின்றார்களென்றும் ஒரு நாட்டில் நூற்றுக்கு 5 பேர் படித்திருக்கின்றார்களென்றும் நமக்குச் சந்தேகமறத் தெரியவருகின்றது.
ஒருநாட்டில் பெரும்பான்மையான மக்கள் தினம் நான்கு வேளை சமைத்துச் சாப்பிடுகின்றார்களென்பதையும், ஒரு நாட்டில் தினம் ஒரு வேளைக்குச் கூட மார்க்கமில்லாமல் கஷ்டப்படுகின்றார்களென்பதையும் பார்க்கின்றோம்.
ஒரு நாட்டில் ஜீவஇம்சை என்பது ஜீவன்களுக்குச் சிறிது கூட சரீரப் பிரயாசையோ, மனநோயோ இருக்கக் கூடாதென்பதும் மற்றொரு நாட்டில் ஜீவகாருண்யம் என்பது உயிருடன் ஜீவனைக் கட்டிப்போட்டு வாயையும், கால்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, பலமணி நேரம் விரைகளைப் பிடித்து நசுக்கிக் கொல்வதாக இருப்பதாகப் பார்க்கின்றோம். அதையே வேதக் கட்டளை கடவுள் பிரீதி என்று சொல்லுவதையும் காதால் கேட்கின்றோம்.
ஒரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (பாதிரிகள்) என்பவர்கள் பிரபுக்களிடமும் படித்தவர்களிடமும் பணம் வாங்கி ஏழைகளுக்குச் சாப்பாடு, தொழில், படிப்பு முதலிய உதவிகளுக்குச் செலவு செய்வதும், மற்றொரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (சங்கராச்சாரி) ஏழைகளின் பணத்தை மதத்தின் பேரால் கொள்கையடித்து, தம் இனத்தார், உயர்ந்த ஜாதியார், படித்தவர்கள் என்பவர்களுக்கே உபயோகப் படுத்துவதும் நேரிலேயே பார்க்கின்றோம்.
ஒரு பக்கம் மக்கள் கஞ்சிக்கில்லாமல் வாடி வதங்குவதும், மற்றொரு பக்கம் சீரங்கம் ரங்கநாத சாமிக்கு ஒரு நெய்க்கிணறு வெட்டுவதும் மட்டும் ஒரு வேளை அதிகப் பூஜைக்கு நெல்விளையும் கிராமங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிவிடுவதும் பார்க்கின்றோம். எனவே, இவைகளுக்கு யார் பொறுப்பாளி? இந்த விஷயங்கள் கடவுளால் நடக்கின்றனவா? அல்லது தானாக நடக்கின்றதா? இவை கடவுளுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? ஒரு சமயம் தெரிந்தும் சாட்சியமாய் சும்மா இருக்கின்றாரா? அல்லது இவைகளைக் கவனித்து தக்கது செய்ய தமக்குச் சக்தியில்லையா? அல்லது இவைகள் கடவுளுக்குத் திருவிளையாடலா? அல்லது இச்செயல்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லையா?
ஒரு சமயம் அந்தந்த தேசத்தினுடை-யவும், அந்தந்த தேச மக்களுடையவும் அல்லது நெருப்பு, நீர், காற்று, மண்ணினுடையவும் (இயற்கை) கர்மபலனா? கடவுள் கவலைக்காரர்களே! இவற்றிற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள். இதில்தான் எல்லாம் கடவுள் செயல் என்றும் அவனன்றி ஓரணுவு மசையாது என்றும் திண்ணை ஞானம் பேசி ஏழைகளை வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும்
சோம்பேறிகளுடையவும், ஏமாற்றுக்காரர்களுடையவும் யோக்கியதை வெளியாகும்.
ஒரு மனிதன், தனக்கு மற்றவர்களைவிட அதிகமான பகுத்தறிவு இருப்பதாய் ஒப்புக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பாளி என்கின்ற உணர்ச்சியுடன் தன் அறிவின் படியே காரியங்களைச் செய்ய ஒவ்வொரு வினாடியும் முயன்று கொண்டிருக்கும்போதே அதற்கு நேர்மாறாய் வாயால் எல்லாம் கடவுள் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது, என்று சொல்லிக் கொண்டு திரிவானானால் மற்றபடி அறிவற்ற நிலையிலிருக்கும் பாமரமக்களுக்கு எப்படி பொறுப்பும் தன் முயற்சியும் உண்டாகும்? எனவே இனிமேலாவது நமது நாட்டில் கடவுள் கவலை கொண்ட பெரியோர்கள் உலகத்தை இனியும் அதிகமான கடவுள்களை உற்பத்தி செய்து அவைகளைக் கொண்டு நிரப்பாமலும் இன்னும் கடவுளுக்கு புதுப்புதுக் குணங்களைக் கற்பிக்காமலும், இன்னும் புதுப்புது மதங்களை உற்பத்தி செய்யாமலும் இப்போது உள்ளதாகக் கருதும் மதங்களுக்கும் புதுப்புதுக் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களையும் வியாக்கியானங்களையும் செய்யாமல் இருக்கும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ஏனெனில் இன்றைய தினமே இந்தியாவில் இந்துக்கள் ஜனத் தொகை 22 கோடி என்றால் இவர்களுக்குள்ள கடவுள் தொகை 33 கோடி தேவர்களாகும். இந்தக் கணக்குப்படி பார்த்தால், குழந்தை குஞ்சு முதல், கிழடு கிண்டு வரை உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரி (உருப்படி ஒன்றுக்கு) ஒன்றரை கடவுள் வீதமாகின்றது. மேலும் நாட்டின் அழகான பாகங்களையெல்லாம் கடவுள்கள் தங்கள் குடியிருப்புக்கென்று கைப்பற்றி அவைகளை அசிங்கமும் அக்கிரமமும் நடப்பது-மான இடங்களாக்கிவிட்டன. மற்றும் அக்கடவுள்கள் வெளிப்-போக்குவரத்தானது தெருக்களில் வண்டிகளும், மக்களும், தாராளமாய் நடமாடுவதற்குக்கூட இடமில்லாமல் நெருக்கடி உண்டாக்கித்
தடைப்படுத்தப்பட்டு வருகின்றது. அக்கடவுள்களின் உற்சவங்கள் சுகாதாரங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு தொத்து நோய்கள் பிறப்பிக்கும் பருவமாகின்றது.
அக்கடவுள்களின் தீர்த்த தல யாத்திரைகளெல்லாம் வழிப்பறிக் கொள்ளைகள் நடக்கும் பாதை பிரயாணமாயிருக்கிறது. இவ்வளவும் போதாமல் இனியும் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன பலன் உண்டாக வேண்டும் என்று இந்த கடவுள் கவலைக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களென்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் கடவுளைப் பரப்புகின்றவர்கள் எங்கும் கடவுள் இருக்கின்றாரென்று சொல்லுவதும், ஆனால் அதை வணங்க வேண்டுமானால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் போய் வணங்க வேண்டுமென்பதும், எல்லா வஸ்துக்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று பிரசங்கிப்பதும், பிறகு சிலை, கல் அல்லது உலோகம் ஆகியவைகளில்தான் இருக்கின்றார் என்பதும், பிரசங்கிக்கும் போது கடவுள் எல்லா ரூபமாயும் இருக்கின்றாரென்பதும், காரியத்தில் வரும்போது அவர் மனித ரூபமாய்தான் இருக்கிறார் என்றும், பிரசங்கிக்கும் போது எல்லா மக்களும் கடவுள் பிறப்பு என்றும், எல்லா மக்களும் சகோதரர்கள் என்றும், சொல்லுவதும் காரியத்தில் வரும்போது எட்டி நில்! தொடாதே! நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்பதும், இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும் படியான மதத்தையும் கடவுள்களையும் பரப்புவது யோக்கியதையா என்பதாகக் கடவுள் கவலைக்காரர்களைக் கேட்கின்றோம். அன்றியும், பொது ஜனங்களையும் இம்மாதிரி பொய்யும் பித்தலாட்டமுமான கடவுள்களையும் மதங்களையும் இனியும் நம்பாமலிருக்க வேண்டுகிறோம்.
---------------
சித்திர புத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “குடிஅரசு” - கட்டுரை - 23-06-1929
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா
செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை
உன்னுடைய கேலிச் சித்திரத்தில்
அவனுடைய கடவுள் ஒரு பெண்னோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
அவனுடைய கேலிச் சித்திரத்தில்
உன்னுடைய பெண் கடவுள் நிர்வாணமாயிருக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தின் சமுத்திர அலைகள்
கேலிச் சித்திரத்தின் கரைமீது மோதி சிதறுகிறது.
கரையில் ஒதுங்கும் பிணங்களில்
கடவுளின் அடையாளம் தேடி ஓடுகிறாய்
கையிலிருக்கும் காற்றை கடவுளின்
மூக்கில் செருக முயற்சிக்கிறாய்.
காற்றை உறிஞ்சும் கடவுள்கள்
நெடுங்காலம் பூமியில் உயிரோடிருப்பதில்லை.
எதிராளியிடம் கேட்கிறாய் உன் கடவுளால் வெறிநாய் கடிக்கு
மருந்து கண்டுபிடிக்க முடிந்ததாவென்று
அவன் திருப்பிக் கேட்கிறான்
உன்னுடைய கடவுள் மட்டும்
மின்சாரபல்பை கண்டு பிடித்தாரவென்று...
கடவுள்களை பூமியிலிருந்து வெளியேற்ற முடியாது.
மலைகளைப்போல வேர்பிடித்து விட்டார்கள்.
அவர்களுக்கு வேறுபோக்கிடம் கிடையாது.
அவர்களால் சனிக் கோள்களில் வசிக்க முடியாது.
சுயம்புவாக தோன்ற முடியாது.
செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை.
ஏனெனில் அங்கே மனிதர்களில்லை.
- கோசின்
கூடங்குளம் வீரமும் தியாகமும் வீணாய் போக திருவுளமோ தமிழினமே?
வியாழன், 22 மார்ச் 2012
ஆயுத வலுவே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற பாசிச அணிவகுப்பு.
கூடங்குளம் அணு உலை செயல்பட பச்சைக் கொடி காட்டிய செயலலிதா அரசு தமிழ் மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது. தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு நடந்து கொண்ட விதத்திலேயே செயா அரசின் உள்ளக்கிடக்கை இப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடிந்தது என்றாலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் சிலருக்கு [அணு உலை எதிர்ப்பு போராளி உதயகுமார் உள்ளிட்டு] செயாவின் ஆதரவை பெற்று போராட்டத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற நப்பாசை இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் எதிர்ப்பாளர்களை அழைத்து பொறுமையாக கருத்துக்களை கேட்பது உள்ளிட்ட நாடகங்களை திறம்பட நடத்தி வந்தார் செயா. உள்ளாட்சி தேர்தல்களும் அதனைத் தொடர்ந்து சங்கரன்கோயில் இடைத்தேர்தலும் செயாவின் தலைமையிலான் தமிழக ஆளும் கும்பல் பம்மி பதுங்கி இருக்கக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது தொலைவில் உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தவிர்த்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்ற நிலையில் தமிழ் மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது செயா அரசு. .
வெடிக்கக் காத்திருக்கும் அணு குண்டு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பேச்சு நடத்த அழைப்பு என்ற நாடகம் மூலம் உதயகுமாரை கைது செய்யும் நயவஞ்சகம் தோல்வியடைந்த நிலையில் உண்ணாநோன்பு நடைபெறும் இடத்துக்கு வந்து கைது செய்யப் போவது போன்று பாவலா காட்டியும் போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை ஒடுக்க வாகனங்களில் வருவதாகவும் வதந்திகளைப் பரப்பி அந்த மக்கள் மீது ஒரு உளவியல் யுத்தத்தை தொடுத்திருக்கிறது காவல்துறை. ஆனால் போராடும் அம்மக்களோ காவல் துறையின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.
தரை மார்க்கங்கள் அனைத்தையும் அரசு மறித்து விட்டாலும் கடல் வழியாக இடிந்தகரைக்கு வரும் மக்கள். ''உனது ஆயுத வலு எனக்கு கால்தூசு''என அடித்துச் சொல்கிறது அம்மக்களின் உடல்மொழி.
அணு உலை கூடாது, கூடங்குளம் அணு மின்சாரம் தமிழ் மக்கள் பயன்பாட்டுக்கு உதவாது என்று எடுத்துச் சொன்ன நியாயங்கள், விளக்கங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டிருக்கிறது
''போராடும் மக்கள் அந்நிய கைக்கூலிகள்'', ''கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கினால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது'' என்பன போன்ற கள்ளப் பரப்புரைகள் மூலம் கணிசமான மக்களை மூளைச் சலவை செய்வதில் ஆளும் கும்பல்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளன. நாட்டின் முதன்மர் மன்மோகன் துவங்கி ஆளும் கும்பல் வீசும் எலும்புத் துண்டை கடைசியாக கவ்வும் வாக்கு சீட்டு அரசியல் கட்சிகளின் கடைசித் தொண்டன் வரை அத்தனை துரோகிகளும் இந்த கள்ளத்தனத்தை செய்து வருகின்றனர். அதனால்தான் முல்லை-பெரியாறு விவகாரத்தில் இலக்கக்கணக்கான மக்கள் திரண்டு போராடியது போன்றதொரு எழுச்சியை எதிர்வினையை கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கும் என்ற அறிவிப்பு ஏற்படுத்தவில்லை. இந்த கள்ளப்பரப்புரையை முறியடிக்க அணு உலை எதிர்ப்புப் பரப்புரையை இன்னும் வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை குருதிச் சகதியில் மூழ்கடித்தேனும் ஒடுக்கிவிடும் முடிவோடு ஆயுதப்படைகளை கூடங்குளத்தைச் சுற்றி குவித்திருக்கின்றன மைய, மாநில அரசுகள். ஓரிரு சிறு கட்சிகள் தவிர்த்து தி.மு.க.,அ.தி.மு.க. என அனைத்துக் கட்சிகளும் கைவிட்ட நிலையில் முழுவதும் மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களத்தில் நின்று போராடுகின்றனர் கூடங்குளம் மக்கள். அம்மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டியதே இன்று நம் முன் உள்ள தலையாய பணி.
அன்று முள்ளிவாய்க்கால்… இன்று கூடங்குளம்…
முள்ளிவாய்க்காலில் எப்படி ஈழத்தமிழர்களை கடல், வான், தரை என்று மூன்று பக்கங்களிலும் நெருக்கி சிங்கள ராணுவம் வன்முறையை ஏவியதோ அதே போலவே கூடங்குளத்தில் அணு உலையைத் திறக்கின்றோம் என்ற போர்வையில் கூடங்குளம், இடிந்தகரை அதைச் சுற்றியுள்ள மக்களை காவல்துறை தரை வழியாகவும், கடலோர காவல்துறை கடல்வழியாகவும், கடற்படையின் உலங்கு வானூர்ந்திகள் வான்வழியாகவும் மக்களை நெருக்கி வன்முறையை ஏவ ஏதுவாக உள்ளன. கூடங்குளம், இடிந்தகரை கிராமங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அங்கு உள்ளே செல்லவோ, அந்த பகுதி மக்கள் வெளியே செல்லவோ முடியாதபடி சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால், உணவு பொருட்கள் கூட இந்த பகுதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, அடுத்து தண்ணீர் வழங்கலையும் துண்டிக்கத் திட்டமிட்டுவருகின்றனர் அதிகாரிகள். 144 தடையுத்தரவும் அங்கு அமலில் இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முள்ளிவாய்க்காலே நம் நினைவை விட்டு இன்னும் அகலாத நிலையில் இந்திய,தமிழக அரசுகள் அதே போன்றதொரு நிகழ்வை நிகழ்த்த இருக்கின்றன.
இனப்படுகொலை இலங்கை அரசு தமிழர்களை படுகொலை செய்ய பிரயோகப்படுத்திய அதே “மாதிரி வடிவம்” இன்று ஒரு அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருவதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மத்திய அரசு தொடக்கம் முதலே இந்தப் போராட்டத்தின் மீது பலவிதமான பொய்க்குற்றச்சாட்டுகளை வீசி, போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்த தொடர்ந்து முயன்றது. அதன் நீட்சியாகத் தான் “அந்நிய நிதி”, “அந்நிய சதி” போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாரயணசாமி தொடங்கி பிரதமர் மன்மோகன் வரை கூறி, போராடும் மக்களை இந்திய மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள். ஆனால் இன்று வரை இதற்கு எந்தவொரு ஆதாரமும் மக்கள் மன்றத்தின் முன்னால் வைக்கப்படவில்லை. தமிழக அரசோ செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி போராடும் மக்களை தமிழக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியது.
தமிழகம் இருளில் மூழ்கியிருப்பதற்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தான் காரணம் என்ற சித்திரம் தமிழக மக்களின் பொது புத்தியில் நன்கு பதியவைக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஊடகங்களின் இராஜ விசுவாசம் மிக முக்கியமான காரணமாகும். இந்த நிலையில் தான் நேற்று கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்கு தமிழக அமைச்சரவை அதாவது முதல்வர்.செயலலிதா ஒப்புதல் கொடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் செயலலிதா அதிகமாக மாறிவிட்டார், முன்னர் நேருக்கு நேர் மக்களின் எதிரியாக இருந்தவர், இப்பொழுது கூடிக் கவிழ்க்கும் துரோகிகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டார். ஒப்புதல் கொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தனக்குத் தோதான அதிகாரிகளை அங்கு பணியமர்த்தினார்.
இப்பொழுது நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள எல்லா மீனவ கிராமங்களிலும் முழுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமமும் வேலி வைத்து கிராமத்திற்கு உள்ளே வரவோ, வெளியோ செல்லவோ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டிலேயே அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள எல்லா மீனவ கிராமங்களும் முள்ளிவாய்க்காலைப் போல காவல் துறையால் சூழப்பட்டுள்ளது. பால், தண்ணீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இக்கிராமங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை (மருந்து பொருட்களையும், உணவுப் பொருட்களையும் போர்க்கருவிகளாக கொண்டு எப்படி ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது). மேலும் இங்கு 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. இப்பொழுதுவரை 15,000 காவல்துறையினர் இக்கிராமங்களைச் சுற்றிவளைத்துள்ளனர். இடிந்தகரை கிராமம் காவல்துறை, கடலோர காவற்படை, உலங்கு வானூர்தி என எல்லாபுறங்களிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த மறுநொடி போராடும் மக்களில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் 11பேர் மீது இந்திய ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுத்த பிரிவிலும், தேசத் துரோக பிரிவிலும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்றுகூடுதல் பிரிவில் பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதும் 2 பெண் மாணவிகள் உட்பட 43 பேர் பெண்களாவர். இவர்களனைவரையும் திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்த செய்திகள் எதையுமே 'மக்களாட்சியின் நான்காவது தூணான' ஊடகங்கள் ஒரு சிலவற்றைத் தவிர வேறெதிலும் வெளிவரவில்லை. மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளையும், வாகனங்களையும் மக்கள் தாக்குகின்றனர் என்ற காவல்துறையின் வதந்தியை தொடர்ந்து ஒளிபரப்பி இம்மக்களின் மீது வன்முறையை பிரயோகிப்பதற்கான பொது புத்தியை உருவாக்கி தொடர்ந்து தங்களது இராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
காவல் துறை அதிகாரியான இராஜேஸ்குமார் சன் செய்திகள் தொலைக்காட்சியில் பேசியது, கோத்தபயாவை நினைவூட்டியது. உதயகுமாரும், ஒரு சிலருமே அங்கு போராடிவருவதாகவும், மற்றவர்களெல்லாம் அணு உலைக்கு ஆதரவாக இருப்பது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குகின்றார், இதையே தான் கோத்தபயாவும் சொன்னார். பிரபாகரனாலும், புலிகளாலும் மட்டுமே பிரச்சனை என்றும் அவர்கள் மக்களை பணயமாக பிடித்து வைத்துள்ளார்கள் என்றும் மக்களை மீட்கும் மனிதாபிமான போரை நடத்துவதாகவும் கூறினார். அதுவே தான் இங்கும் நடைபெறுகின்றது. மனிதாபிமானப் போர்களில் மனிதர்களைத் தான் காணவில்லை.
உதயகுமாரை தனியே உங்களிடம் ஒப்படைக்க மாட்டோம், 200 பேருந்துகளையும், இரண்டு காவல்துறையினரையும் அனுப்பி வையுங்கள் நாங்களும் கைதாகின்றோம் என்பது அங்குள்ள மீனவ மக்களின் கோரிக்கை.
மின்சாரம் இல்லாததால் எல்லா மீனவ கிராமங்களும் இருளில் மூழ்கியுள்ளன. இடிந்தகரையில் குண்டு மட்டும்தான் வீசப்படவில்லை. குறிப்பிட்ட மொழி, மதம், அல்லது இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது அரசோ, அதிகாரபீடங்களோ காட்டும் பாரபட்சமான நடவடிக்கை, துவேசம் அல்லது தாக்குதல் இதில் எந்த ஒன்று நடந்தாலும் அது இனக்கொலைக்கு சமம். இப்பொழுது சொல்லுங்கள் இடிந்தகரை இப்பொழுது முள்ளிவாய்க்கால் தானே.. நாளை இடிந்தகரை என்னவாக இருக்கும்?
ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்கு இலங்கை உபயோகித்த மக்களை தனிமைப்படுத்துதல், பின்னர் பயங்கரவாதி அல்லது வெளிநாட்டில் காசு வாங்கிக்கொண்டு இங்கு போராடுகின்றார்கள் என்று முத்திரை குத்துவது, ஊடகங்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவது, மற்ற பகுதியினரை அந்தப் பகுதிக்குள் வரவிடாமல் தடை செய்வது, மக்களின் மீது மிகவும் கடுமையான வன்முறையை ஏவுவது என்ற வழிமுறையைத தான் இந்திய/தமிழக அரசுகள் அமைதிவழியில் போராடிவரும் மக்களின் மேல் பயன்படுத்திவருகின்றது.
இன்று கூடங்குளம் மக்களின் மேல் ஏவப்பட்டிருக்கும் வன்முறை, மனித உரிமை மீறல்கள், நம்மை நோக்கி நீள்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது, மேலும் கூடங்குளத்தால் கிடைக்கும் மிகக்குறைந்த பட்ச மின்சாரம் கூட மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கோ, விவசாயத்திற்கோ, வீட்டு உபயோகத்திற்கோ கொடுக்கப்படப் போவதில்லை, வழமை போல முதலில் கவனிக்கப்படுவது பன்னாட்டு நிறுவனங்களும், வணிக வளாகங்களுக்குமே. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளாவிற்கு ஆதரவாகவும், தென் பெண்ணையாற்று பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் இதே போன்றொரு தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படலாம். இதை தடுக்கவேண்டுமென்றால் இன்றே நாம் போராடும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் நாளை நம் மீது வன்முறை ஏவப்படும் பொழுது நமக்கு ஆதரவு கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரிழப்பிற்கான நீதிக்காக போராடி வரும் நாம் நம் கண்முன்னே கூடங்குளம் மக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதையும், குழந்தைகளுக்கான பால் கூட உள்ளே செல்லமுடியாமல் தடுக்கப்பட்டிருப்பதையும் கண்டும் காணாமல் இருக்கப்போகின்றோமா? அம்மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கப்போகின்றோமா? இல்லை ஐ.நா போன்றதொரு அமைப்பு கூடங்குளத்தில் நடைபெற்று வரும் இந்த அடக்குமுறையை விசாரித்த பிறகோ, சேனல் 4 போன்ற செய்தி நிறுவனங்கள் இது குறித்த ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பின்னரோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு மட்டும் நாம் போராடப் போகின்றோமா?
“எமது நிலத்தைக்
காக்கும் இந்த போராட்டத்தில்
நாம் வென்றாக வேண்டும்
இல்லையேல்
நாம்
கொல்லப்படுவோம்
ஏனெனில் தப்பியோடுவதற்கு
எமக்கு வேறு நிலங்களில்லை”…… கென் சரோ விவா
கூடங்குளம் நிலவரம் காலை 11.25
உதயகுமார் அவர்களின் பள்ளிக்கூடம், கணிப்பொறி, பள்ளி பேருந்து போன்றவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. நேற்றிலிருந்தே குடிநீர், உணவு போன்றவை கூடங்குளத்திற்குள்ளே செல்வது காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளதால், உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் காட்டு வழி, கடற்கரையோர வழிகள் மூலமாக அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று உணவுப் பொருட்களை சேகரித்து வருகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மருந்து பொருட்கள் கையிருப்பும் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு வலி ஏற்பட, ஒரு வயதானவருக்கு சில மருந்து தேவை ஏற்பட இவர்கள் இருவரும் அப்பகுதியை விட்டு மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஊடகங்கள் இன்று இடிந்தகரை பகுதியினுள் அனுமதிக்கப்படவில்லை.
அதிகமான பெண் காவல்துறையினர் விஜயாபுரம் பகுதியில் வந்து குவிந்து கொண்டே உள்ளனர்.
- நற்றமிழன்.ப, சேவ் தமிழ்சு இயக்
க
இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்
இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்
அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது.
கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடும்.
ஏனென்றால் அந்த வீரர்களை நாம் எங்களின் பிள்ளைகளாக, எமது சகோதரங்களாக, எங்கள் உயிர்த்தோழர்களாக, எல்லாவற்றையும்விட எமது தேசத்தின் காவல் தெய்வங்களாக நினைத்திருந்தோம். எங்களின் விடுதலைக்காக எண்ணற்ற களங்களில் எதிரிக்கு மரண அடிகொடுத்தவர்கள் அவர்கள்.
கடந்துபோன காலங்களில் பெரும் எடுப்புடன் மிகப்பெரும் படையணியாக வந்த எதிரிகளை மிகச்சிறிய படையணிகளைக்கொண்டே சுற்றி வளைத்து தாக்கி துரத்தியவர்கள் இவர்கள். எமது விடுதலைப் போராட்டத்தின் நம்பிக்கைத் தூண்கள் இவர்கள். அப்படியானவர்கள் வெற்று உடலகங்களாக, உடம்பு முழுதும் இரத்தத்துடன் கிடக்கும் காட்சியை பார்க்கும்போது மனம் மெதுவாக சுருளத்தொடங்கிவிடும்.
ஆனால் இப்படியான உள்ளக்குமுறல்களுக்குள்ளாக சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியதும், ஆராய்வதும் தேவையாக இருக்கின்றது. அந்தப்புகைப்படத்தின் கோரங்கள் நடந்து முடிந்து மூன்று வருடமாகின்றது. 2009ம் ஆண்டின் மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் அது நடந்திருக்கின்றது. அப்படியானால் இந்தப் புகைப்படங்களை மூன்று வருடம் கழித்து இப்போது வெளியிடவேண்டிய காரணங்கள் எவை..? இந்தப் புகைப்படங்களை வெளியிட்ட எல்லா இணையங்களைவிட இந்த புகைப்படங்களை இணையங்களுக்கு வழங்கியவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எவை..?
போர்க்குற்ற ஆதாரம் என்ற வெற்றுக்காரணம் வெளிப்படையாக சொல்லிக்கொண்டே வெளியிடப்படும் இந்த புகைப்படங்களின் உண்மைநோக்கம் ஒரு வகையான உளவியல் தாக்குதல்தான். இத்தகைய உளவியல் தாக்குதல் இன்று நேற்று சிங்களத்தால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது எங்களுக்குள் பெரும் பயம் ஒன்று தோன்றி இருந்தால் அது அவர்களுக்கு வெற்றியே.
அந்தப் படங்களை பார்த்தபோது எமது உள்ளங்களுக்குள் சோர்வு எழுந்திருந்தால் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான். மன உறுதியை இலக்கு வைத்துதான் இப்படியான காட்சிபடுத்தல்கள் நடாத்தபடுகின்றன். தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் இதே வழியினுடாகவே மனங்களுக்குள் பயத்தையும், சோர்வையும் புகுத்துவார்கள்.
இது நேற்று முன்தினம் தோன்றிய ஒரு உத்தி அல்ல.1983ல் லெப்.சீலனும், வீரவேங்கை ஆனந்தும் மீசாலையில் வீரமரணமாகியபோது குருநகரிலிருந்து வந்திருந்த, இராணுவத்தினரிடம் அவர்களின் உடலங்கள் அகப்பட்டுக்கொண்டன. தமிழீழ வரலாற்றிலேயே மிகச் சிறந்த தளபதியான சீலனின் உயிரற்ற உடலில் இருந்த ‘சாரம்’ அகற்றப்பட்டு வெறும் உள்ளாடையுடன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் போடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு வரிசையாக காண்பிக்கப்பட்டு அதன் ஊடாக வெளியில் இருந்த போராளிகளுக்கு போராடி மடிந்தால் இப்படித்தான் கேவலமாக சவக்கிடங்கில் கிடப்பீர்கள் என்று அச்சுறுத்தலுடன்கூடிய செய்தி போராட்ட மனங்களுக்குள் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் 85ல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களுக்கும், நிதிக்கும் பொறுப்பானவரும், மத்தியகுழு உறுப்பினருமான கப்டன பண்டிதர் அச்சுவேலியில் நிகழ்ந்த சிங்களப்படை முற்றுகை ஒன்றுக்குள் போராடி மரணித்தபோது அவனின் வெற்றுடலை எடுத்து சிங்கள அரச தொலைக்காட்சியான ரூபவாகினியில் மணிக்கொருதரம் காட்டியதற்கு பின்னால் ‘உங்களின் மிகமூத்த உறுப்பினரும், பெரும் தளபதியுமான பண்டிதருக்கே இந்த நிலைதான்’ என்ற உளவியல் செய்திதான் இருந்தது.
90களின்போது மண்கிண்டிமலைத் தாக்குதலுக்கு சென்ற போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டபோது 200க்கும் அதிகமான போராளிகள் வீரமரணமாகினர். அவர்களின் உடலங்கள் அனைத்தும் மீட்கப்படமுடியாமல் சிங்கப்படைகளிடம் சிக்கியபோது இப்போது போலவே ஆண், பெண் போராளிகளின் உடலங்களையும் உடையையும் சிதைத்து, கிழித்து மோசமாக புகைப்படங்களாக சிங்களத்தின் தொலைக்காட்சியிலும், அச்சு ஊடகங்களிலும் படம் காட்டப்பட்டதும் வெறுமனே சிங்கள முகாம் மீதான தாக்குதல் முறியடிப்பு என்பதற்கு அப்பால் ‘அனாதைப் பிணங்களாக, சிதைந்து கிடப்பீர்கள்’ என்ற தகவல் இருந்தது.
94ம் ஆண்டில் சந்திரிகா பிரதமாக வந்தபோது நல்லெண்ண அறிகுறியாக விடுதலைப்புலிகள் அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியில் லெப்.கேணல் மல்லிமீது தாக்குதல் நடாத்தி அவன் வீரச்சாவு அடைந்த பின்பும் அவனின் தலையை வெட்டி எடுத்துவிட்டு வெறும் பிண்டத்தை மட்டும் அந்த இடத்திலேயே விட்டுசென்றதற்கு பின்னுக்கு என்ன செய்தி கிடந்து. தளபதி மல்லி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் இரண்டாவது நிலைத் தளபதிகளில் ஒருவர். முக்கியமானவர். அப்படியான முக்கியத்துவம் மிகுந்த புலனாய்வுத் தளபதியின் தலையையும் வெட்டிச்செல்லமுடியும் என்ற உளவியல் செய்திதான் அந்த தலையற்ற உடலை விட்டுசென்றவர்கள் சொல்லாமல் சொன்னது.
அநுராதபுரம் விமானத்தளத்துக்குள் சென்று சிங்களத்தின் நெஞ்சுக்குள் தீவைத்த போராளிகளின் உயிரற்ற உடல்களை நிர்வாணப்படுத்தி உழவு இயந்திரத்தின் பெட்டியில் அடுக்கி வைத்து தெருதெருவாக ஊர்வலம் நடாத்தியது சிங்கள மக்களுக்கான காட்சி காட்டுதல் அல்ல. உங்களின் சாவுகள் உங்களுக்கு உன்னதமானவைஆக இருக்கும். ஆனால் உங்கள் உடல்களை இப்படித்தான் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டுபோவோம் என்ற செய்திதான் சொல்லப்பட்டது.
இப்போது இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படங்களுக்கு பின்னுக்கு தெரிந்தும் தெரியாமலும் நிற்பவர்கள் யார் என்றும் அவர்களின் பிண்ணணியும் நன்கு தெரிகிறது.
முள்ளிவாய்க்காலின் மூன்றம் ஆண்டு நினைவு அண்மிக்கும்போது இவை வெளியிடவேண்டிய தேவைகள் எவை..?
அந்த தேவைகள் யாருக்கு சாதகமானவை?
அவற்றால் பயன்பெறபோகிறவர்கள் யார் யார்..?
காலகாலமாக சிங்களம் செய்துவரும் மனோவியல் தாக்குதலை இம்முறை பொறுப்பெடுத்து நடாத்தும் ஏஜன்டுகள் யார்..?
போர்க்குற்றங்களாகவே இவற்றை வெளியிடுகிறோம் என்கிறார்கள். அப்படியானால் ஏன் போர்க் குற்றத்ததை விசாரித்த நிபுணர் குழுவுக்கு இந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை. போர்க்குற்றத்தில் சிங்களம் ஈடுபட்டது என நிபுணர் குழு உறுதியாக தெரிவித்து இருக்கும் இந்த பொழுதில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிங்களம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும்படி புலம்பெயர் தமிழர்கள் எழுச்சி கொள்ளவேண்டிய நேரத்தில் இந்த புகைப்படங்கள் வெளிவந்த காரணம் என்ன..?
மூன்று வருடமாகியும் இன்னும் உயிர்ப்புடன் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருவகையான இறுதித்தாக்குதல் இது. நாம் அறிந்தவரையில் இது ஒரு பகுதிதான். கட்டம் கட்டமான உளவியல் தாக்குதல்கள் இனிவரும் சில நாட்களில் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
புலம்பெயர் தமிழர்களை மிக அதிர்ச்சிக்குள்ளும், அந்த அதிர்ச்சிக்கூடாக மௌனத்திலும் புதைந்துபோக வைக்க இதைவிட சில காட்சிகளை வெளியிடும் திட்டங்களும் அவர்களிடம் உள்ளன. அவர்களின் தேவையும் சிங்களத்தினதும், வல்லாதிக் கசக்தியினது தேவையும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை இனம்கண்டு அவற்றை நிராகரிப்பதுதான் இப்போதைய தேவை.
அவர்கள் எமது வீரர்களின் சிதைந்துபோன உயிரற்ற உடல்களை காட்டி எமது மன உறுதியை உடைக்க நினைக்கிறார்கள்.! ஆனால் எமது வீரர்கள் உயிரோடு இருந்து போராடிய நீண்ட வருடங்களில் அவர்கள் காட்டிய வீரத்தையும், விடுதலை மீதான பற்றுதலையும், உறுதியையும் என்றும் எஙகள் நினைவில் மீண்டும் மீண்டும் வரட்டும்.
எல்லாவற்றையும்விட, மரணித்த பின்னரும் உங்களின் நினைவை சொல்லி நிற்கும் எதையும் விட்டுவைக்க மாட்டோம் என்ற செய்திதான் மாவீரர் துயிலகங்களை சிதைத்துவிட்டு சிங்களம் போராளிகளுக்கும், இனி போராடவரப்போகின்றவர்களுக்கும் சொல்லி வைத்த செய்தி
நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!
நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!
காக்கைக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம்
இன்று ஒருவேளை சோற்றுப் பருக்கைக்கு
வழியில்லாமல் கிடக்கிறதடா..! பசிக்கு உணவிட்டு
உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின்
கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா.!
பாலுக்கு அழுகிறதடா குழந்தை..! தாய்க்கே
பால் ஊற்றுகிறதடா இலங்கை..!! கற்புக்கு
இலக்கணமாய் கண்ணகியை குறிபபிட்டாயடா
தமிழா.! இன்று கண்ணிமைக்கும் நேரத்தில்
கற்பழிக்கப்படுகிறார்களடா நம் ஈழக் கண்மணிகள்.!!
புத்தகம் சுமக்க வேண்டிய வயதினிலே
சிங்களவனின் கருவை சுமக்கிறார்களடா.!!
ஆடைகாட்டி வாழ்ந்த நம்மினம் -இன்று
அம்மணமாய் நிற்கிறதடா-அரைவயிறு
கஞ்சியும் இல்லாமல் நித்தம் நித்தம் துடிக்கிறதடா.!!
கூடிவாழ்ந்த நம்மினம் இன்று கூண்டோடு
அழிந்துபோகிறதடா.!! ஆளப் பிறந்த
நம்மினம் இன்று அடிமையாய் கிடக்கிறதடா..!!
தமிழா..! உன்இனம் மொத்தமும் ஈழத்திலே
கொன்று புதைக்கப்பட்டதடா.!! இத்தனை
துயரும் ‘தமிழர்’ என்பதனாலடா -தாயகத்தமிழா.!!
அது உன்மீது விழுந்த அடி தானடா..!
‘ஈழம்’- உன் சொந்தநாடு தானடா..!
ஈழமென்றால் ஏனடா வேற்றுக்கிரகவாசிகளாய் பார்க்கிறாய்.!
உனக்கும் சேர்த்துதானடா தலைவர் நாடு
கேட்டார்.! தமிழகமும்-தமிழீழமும் இடம்தானடா
வேறு.! நம்மினம் ஒன்றுதானடா.!!!
ஆறரைகோடி பேர் இருந்தும் -அங்கு
அனாதையாக செத்தார்களடா நம்உறவுகள்.!
அழுதபோதும் துடித்தலறியபோதும் கூக்குரலிட்டது
நம்மைத்தானடா.! கைவிட்டது நாம்தானடா..!!
தமிழா..! இன்னும் ‘கை’யை நம்பியிருக்க போகிறோமா..???
வெறும் கையை மட்டும் பிசைந்து நிற்க போகிறோமா..???
அழுதது போதும்.! அடிபட்டது போதும்.! நம் உரிமைகளை
பறிகொடுத்தது போதும்.! நம் உறவுகளை
பலிகொடுத்தது போதும்..! தமிழா..!
வெகுண்டெழுந்து வா.! தலைவரின் மொழியே
நம்மை வழிநடத்தட்டும்.! மாவீர்களின் ஆவியே
நமக்கு வழிகாட்டட்டும்.!! எழுந்து வா.!
தமிழராய்..! சாதி மறந்து மதம் துறந்து..!!
ஒன்றுகூடு நாம் தமிழராய்..!!
இனியொரு விதி செய்வோம்.!
நாம் தமிழராய் புரட்சி செய்வோம்..!!