Sunday, March 25, 2012

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி?

இந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் கொடுமை! கொடுமை!! கொடுமை!!! மயமாகவே செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் எரிமலை வெடித்துத் தீப்பொறிகளும், தீக்குழம்புகளும் புகைகளும் கிளம்பி அநேக கிராமங்களைச் சாம்பலாக்கி விட்டதென்றும் அதனால் அநேக பொருள்களுக்கும் உயிர்களுக்கும் நஷ்டமேற்பட்டு விட்டதென்றும் நியூசிலாண்டிலும், ஆஸ்டீரியாவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு அநேக கட்டடங்கள் இடிந்து விழுந்து அநேக உயிர்கள் மடிந்தும் பலத்த சேத மேற்பட்டு வருகின்றதென்றும், இங்கிலாந்திலும் லண்டனிலும் புயல் காற்றும் மழையும் வெள்ளமும் அடித்து அநேக பட்டணங்களும் உயிர்களும் சாமான்களும் தொழிற்சாலைகளும் அழிந்து சேதமும் நஷ்டமுண்டாய் விட்டதென்றும், வங்காளம், அஸாம் சைல்சாட் பிரதேசங்களில் அய்நூறு சதுர மைல்கள் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு அநேக கிராமங்களையும் அநேக மனித உயிர்-களையும், ஏராளமான கால்நடை ஜீவன்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டதென்றும், திருவாங்கூரிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதென்றும் பம்பாய், சைனா முதலிய இடங்களில் நெருப்பு பிடித்து அநேகக் கட்டடங்களும் பொருள்களும் வெந்து சாம்பலாகி விட்டதென்றும், மற்றும் பல பெரிய பட்டணங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் இடிந்து விழுந்து மக்களை அழுத்திக் கொன்று விட்டதென்றும், இவைகளாலும் மற்றும் பல காரணங்களாலும் பல இடங்களில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமல் பட்டினியால் வாடி மயங்கி செத்துப் பொத்தென்று விழுந்து சாகின்றார்கள் என்றும் மற்றும் இவை போன்ற கொடுமையும் பரிதாபகரமானதுமான செய்திகள் தினப்படி வந்த வண்ணமாயிருக்கின்றன.

இது நிற்க, முகரம் பண்டிகைக் கொண்டாட்டத்தால் பல இடங்களில் இந்து, முஸ்லிம் கலகங்களும், அடிதடிகளும் கொலைகளும் நடந்து பலர் காயப்பட்டதாகவும், பலர் உயிர் துறந்ததாகவும் செய்திகள் ஒருபுறம் வந்த வண்ணமாயிருக்கின்றன.

இவைகள் தவிர பல இடங்களில் முதலாளிமார்கள் கொடுமையால் தொழிலாளர்கள் வயிற்றுக்குப் போதாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை நிறுத்தம் செய்து பட்டினி கிடப்பதாகவும் செய்திகள் மற்றொரு புறம் வந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்றும் சுதேசி, பரதேசி என்றும், வெள்ளையர், கறுப்பர் என்றும் ஜாதிமத தேச பிரிவுகளால் ஒருவரையொருவர் துன்புறுத்துவதும் ஒருவொருக்கொருவர் கலகம், அடிதடி, கொலை கொள்ளை முதலியவைகள் செய்து கொண்டு இறப்பதும் கஷ்டப்படுவதாயிருப்பதாகவும் சமாச்சாரங்கள் பறந்த வண்ணமாயிருக்கின்றன.

மற்றும் பெண்ணை ஆண் துன்பப்படுத்தினான்: ஆணைப் பெண் துன்பப் படுத்தினாள், இதனாலும் மற்ற காரணங்களாலும் உலக வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கின்ற செய்திகளும், ஒருவனுடைய மனைவி மற்றொருவனை இச்சிக்கிறதனாலும், ஒருவன் மனைவியை மற்றொருவர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும் நடைபெறும் கொலைகளின் விவரமும் இடையறாமல் வந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் புருஷன் பிடிக்காமலும், விதவை, புருஷனை வேண்டியும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக உலகறிந்த ரகசியங்கள் எங்கும் பேசிய வண்ணமாக இருக்கின்றது.

மற்றும் மழையில்லா கொடுமையால் உஷ்ணத்தாக்கு ஏற்பட்டு டில்லியில் 125 பேர்கள் இறந்ததாகவும், மழையில்லாததாலும் வெய்யில் கொடுமையாலும் சில இடங்களில் கிணறுகளில் குடிக்கக்கூட தண்ணீரில்லாமல் வறண்டு போனதாகவும், வேளாண்மை விளையாமல் கருகிப் போனதாகவும், கஷ்டப்-படுவதாகவும், மற்றொரு இடத்தில் அதிக மழை பெய்து வேளாண்மை நாசமாய்ப் போய் விட்டதாகவும், குளிரினால் நடுங்குவதாகவும், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதைப் போல் ஒரு இடத்தில் கால்நடைகளுக்குத் தீவனமில்லாமல் கஷ்டப்பட்டு பட்டினியால் இறப்பதாகவும், மற்றொரு இடத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தாராளமாய் இருந்தும் கால்நடைகள் தொத்து வியாதியால் தினம் நூற்றுக்கணக்காய் மடிவதாகவும் மற்றும் கடவுள் கோவில்களில் நெருப்புப் பற்றிக் கொண்டதாகவும், அம்மன் நகைகள் திருட்டுப்போய் விட்டதாகவும் சமாச்சாரங்கள் வருகின்றன.

இவை ஒருபுறமிருக்க ஒரு நாட்டில் நூற்றுக்கு 90 பேர் படித்திருக்கின்றார்களென்றும் ஒரு நாட்டில் நூற்றுக்கு 5 பேர் படித்திருக்கின்றார்களென்றும் நமக்குச் சந்தேகமறத் தெரியவருகின்றது.

ஒருநாட்டில் பெரும்பான்மையான மக்கள் தினம் நான்கு வேளை சமைத்துச் சாப்பிடுகின்றார்களென்பதையும், ஒரு நாட்டில் தினம் ஒரு வேளைக்குச் கூட மார்க்கமில்லாமல் கஷ்டப்படுகின்றார்களென்பதையும் பார்க்கின்றோம்.

ஒரு நாட்டில் ஜீவஇம்சை என்பது ஜீவன்களுக்குச் சிறிது கூட சரீரப் பிரயாசையோ, மனநோயோ இருக்கக் கூடாதென்பதும் மற்றொரு நாட்டில் ஜீவகாருண்யம் என்பது உயிருடன் ஜீவனைக் கட்டிப்போட்டு வாயையும், கால்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, பலமணி நேரம் விரைகளைப் பிடித்து நசுக்கிக் கொல்வதாக இருப்பதாகப் பார்க்கின்றோம். அதையே வேதக் கட்டளை கடவுள் பிரீதி என்று சொல்லுவதையும் காதால் கேட்கின்றோம்.

ஒரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (பாதிரிகள்) என்பவர்கள் பிரபுக்களிடமும் படித்தவர்களிடமும் பணம் வாங்கி ஏழைகளுக்குச் சாப்பாடு, தொழில், படிப்பு முதலிய உதவிகளுக்குச் செலவு செய்வதும், மற்றொரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (சங்கராச்சாரி) ஏழைகளின் பணத்தை மதத்தின் பேரால் கொள்கையடித்து, தம் இனத்தார், உயர்ந்த ஜாதியார், படித்தவர்கள் என்பவர்களுக்கே உபயோகப் படுத்துவதும் நேரிலேயே பார்க்கின்றோம்.

ஒரு பக்கம் மக்கள் கஞ்சிக்கில்லாமல் வாடி வதங்குவதும், மற்றொரு பக்கம் சீரங்கம் ரங்கநாத சாமிக்கு ஒரு நெய்க்கிணறு வெட்டுவதும் மட்டும் ஒரு வேளை அதிகப் பூஜைக்கு நெல்விளையும் கிராமங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிவிடுவதும் பார்க்கின்றோம். எனவே, இவைகளுக்கு யார் பொறுப்பாளி? இந்த விஷயங்கள் கடவுளால் நடக்கின்றனவா? அல்லது தானாக நடக்கின்றதா? இவை கடவுளுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? ஒரு சமயம் தெரிந்தும் சாட்சியமாய் சும்மா இருக்கின்றாரா? அல்லது இவைகளைக் கவனித்து தக்கது செய்ய தமக்குச் சக்தியில்லையா? அல்லது இவைகள் கடவுளுக்குத் திருவிளையாடலா? அல்லது இச்செயல்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லையா?

ஒரு சமயம் அந்தந்த தேசத்தினுடை-யவும், அந்தந்த தேச மக்களுடையவும் அல்லது நெருப்பு, நீர், காற்று, மண்ணினுடையவும் (இயற்கை) கர்மபலனா? கடவுள் கவலைக்காரர்களே! இவற்றிற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள். இதில்தான் எல்லாம் கடவுள் செயல் என்றும் அவனன்றி ஓரணுவு மசையாது என்றும் திண்ணை ஞானம் பேசி ஏழைகளை வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும்
சோம்பேறிகளுடையவும், ஏமாற்றுக்காரர்களுடையவும் யோக்கியதை வெளியாகும்.

ஒரு மனிதன், தனக்கு மற்றவர்களைவிட அதிகமான பகுத்தறிவு இருப்பதாய் ஒப்புக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பாளி என்கின்ற உணர்ச்சியுடன் தன் அறிவின் படியே காரியங்களைச் செய்ய ஒவ்வொரு வினாடியும் முயன்று கொண்டிருக்கும்போதே அதற்கு நேர்மாறாய் வாயால் எல்லாம் கடவுள் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது, என்று சொல்லிக் கொண்டு திரிவானானால் மற்றபடி அறிவற்ற நிலையிலிருக்கும் பாமரமக்களுக்கு எப்படி பொறுப்பும் தன் முயற்சியும் உண்டாகும்? எனவே இனிமேலாவது நமது நாட்டில் கடவுள் கவலை கொண்ட பெரியோர்கள் உலகத்தை இனியும் அதிகமான கடவுள்களை உற்பத்தி செய்து அவைகளைக் கொண்டு நிரப்பாமலும் இன்னும் கடவுளுக்கு புதுப்புதுக் குணங்களைக் கற்பிக்காமலும், இன்னும் புதுப்புது மதங்களை உற்பத்தி செய்யாமலும் இப்போது உள்ளதாகக் கருதும் மதங்களுக்கும் புதுப்புதுக் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களையும் வியாக்கியானங்களையும் செய்யாமல் இருக்கும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் இன்றைய தினமே இந்தியாவில் இந்துக்கள் ஜனத் தொகை 22 கோடி என்றால் இவர்களுக்குள்ள கடவுள் தொகை 33 கோடி தேவர்களாகும். இந்தக் கணக்குப்படி பார்த்தால், குழந்தை குஞ்சு முதல், கிழடு கிண்டு வரை உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரி (உருப்படி ஒன்றுக்கு) ஒன்றரை கடவுள் வீதமாகின்றது. மேலும் நாட்டின் அழகான பாகங்களையெல்லாம் கடவுள்கள் தங்கள் குடியிருப்புக்கென்று கைப்பற்றி அவைகளை அசிங்கமும் அக்கிரமமும் நடப்பது-மான இடங்களாக்கிவிட்டன. மற்றும் அக்கடவுள்கள் வெளிப்-போக்குவரத்தானது தெருக்களில் வண்டிகளும், மக்களும், தாராளமாய் நடமாடுவதற்குக்கூட இடமில்லாமல் நெருக்கடி உண்டாக்கித்
தடைப்படுத்தப்பட்டு வருகின்றது. அக்கடவுள்களின் உற்சவங்கள் சுகாதாரங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு தொத்து நோய்கள் பிறப்பிக்கும் பருவமாகின்றது.

அக்கடவுள்களின் தீர்த்த தல யாத்திரைகளெல்லாம் வழிப்பறிக் கொள்ளைகள் நடக்கும் பாதை பிரயாணமாயிருக்கிறது. இவ்வளவும் போதாமல் இனியும் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன பலன் உண்டாக வேண்டும் என்று இந்த கடவுள் கவலைக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களென்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் கடவுளைப் பரப்புகின்றவர்கள் எங்கும் கடவுள் இருக்கின்றாரென்று சொல்லுவதும், ஆனால் அதை வணங்க வேண்டுமானால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் போய் வணங்க வேண்டுமென்பதும், எல்லா வஸ்துக்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று பிரசங்கிப்பதும், பிறகு சிலை, கல் அல்லது உலோகம் ஆகியவைகளில்தான் இருக்கின்றார் என்பதும், பிரசங்கிக்கும் போது கடவுள் எல்லா ரூபமாயும் இருக்கின்றாரென்பதும், காரியத்தில் வரும்போது அவர் மனித ரூபமாய்தான் இருக்கிறார் என்றும், பிரசங்கிக்கும் போது எல்லா மக்களும் கடவுள் பிறப்பு என்றும், எல்லா மக்களும் சகோதரர்கள் என்றும், சொல்லுவதும் காரியத்தில் வரும்போது எட்டி நில்! தொடாதே! நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்பதும், இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும் படியான மதத்தையும் கடவுள்களையும் பரப்புவது யோக்கியதையா என்பதாகக் கடவுள் கவலைக்காரர்களைக் கேட்கின்றோம். அன்றியும், பொது ஜனங்களையும் இம்மாதிரி பொய்யும் பித்தலாட்டமுமான கடவுள்களையும் மதங்களையும் இனியும் நம்பாமலிருக்க வேண்டுகிறோம்.

---------------

சித்திர புத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “குடிஅரசு” - கட்டுரை - 23-06-1929

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா


No comments:

Post a Comment