கூடங்குளம் வீரமும் தியாகமும் வீணாய் போக திருவுளமோ தமிழினமே?
வியாழன், 22 மார்ச் 2012
ஆயுத வலுவே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற பாசிச அணிவகுப்பு.
கூடங்குளம் அணு உலை செயல்பட பச்சைக் கொடி காட்டிய செயலலிதா அரசு தமிழ் மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது. தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு நடந்து கொண்ட விதத்திலேயே செயா அரசின் உள்ளக்கிடக்கை இப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடிந்தது என்றாலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் சிலருக்கு [அணு உலை எதிர்ப்பு போராளி உதயகுமார் உள்ளிட்டு] செயாவின் ஆதரவை பெற்று போராட்டத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற நப்பாசை இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் எதிர்ப்பாளர்களை அழைத்து பொறுமையாக கருத்துக்களை கேட்பது உள்ளிட்ட நாடகங்களை திறம்பட நடத்தி வந்தார் செயா. உள்ளாட்சி தேர்தல்களும் அதனைத் தொடர்ந்து சங்கரன்கோயில் இடைத்தேர்தலும் செயாவின் தலைமையிலான் தமிழக ஆளும் கும்பல் பம்மி பதுங்கி இருக்கக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது தொலைவில் உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தவிர்த்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்ற நிலையில் தமிழ் மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது செயா அரசு. .
வெடிக்கக் காத்திருக்கும் அணு குண்டு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பேச்சு நடத்த அழைப்பு என்ற நாடகம் மூலம் உதயகுமாரை கைது செய்யும் நயவஞ்சகம் தோல்வியடைந்த நிலையில் உண்ணாநோன்பு நடைபெறும் இடத்துக்கு வந்து கைது செய்யப் போவது போன்று பாவலா காட்டியும் போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை ஒடுக்க வாகனங்களில் வருவதாகவும் வதந்திகளைப் பரப்பி அந்த மக்கள் மீது ஒரு உளவியல் யுத்தத்தை தொடுத்திருக்கிறது காவல்துறை. ஆனால் போராடும் அம்மக்களோ காவல் துறையின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.
தரை மார்க்கங்கள் அனைத்தையும் அரசு மறித்து விட்டாலும் கடல் வழியாக இடிந்தகரைக்கு வரும் மக்கள். ''உனது ஆயுத வலு எனக்கு கால்தூசு''என அடித்துச் சொல்கிறது அம்மக்களின் உடல்மொழி.
அணு உலை கூடாது, கூடங்குளம் அணு மின்சாரம் தமிழ் மக்கள் பயன்பாட்டுக்கு உதவாது என்று எடுத்துச் சொன்ன நியாயங்கள், விளக்கங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டிருக்கிறது
''போராடும் மக்கள் அந்நிய கைக்கூலிகள்'', ''கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கினால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது'' என்பன போன்ற கள்ளப் பரப்புரைகள் மூலம் கணிசமான மக்களை மூளைச் சலவை செய்வதில் ஆளும் கும்பல்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளன. நாட்டின் முதன்மர் மன்மோகன் துவங்கி ஆளும் கும்பல் வீசும் எலும்புத் துண்டை கடைசியாக கவ்வும் வாக்கு சீட்டு அரசியல் கட்சிகளின் கடைசித் தொண்டன் வரை அத்தனை துரோகிகளும் இந்த கள்ளத்தனத்தை செய்து வருகின்றனர். அதனால்தான் முல்லை-பெரியாறு விவகாரத்தில் இலக்கக்கணக்கான மக்கள் திரண்டு போராடியது போன்றதொரு எழுச்சியை எதிர்வினையை கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கும் என்ற அறிவிப்பு ஏற்படுத்தவில்லை. இந்த கள்ளப்பரப்புரையை முறியடிக்க அணு உலை எதிர்ப்புப் பரப்புரையை இன்னும் வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை குருதிச் சகதியில் மூழ்கடித்தேனும் ஒடுக்கிவிடும் முடிவோடு ஆயுதப்படைகளை கூடங்குளத்தைச் சுற்றி குவித்திருக்கின்றன மைய, மாநில அரசுகள். ஓரிரு சிறு கட்சிகள் தவிர்த்து தி.மு.க.,அ.தி.மு.க. என அனைத்துக் கட்சிகளும் கைவிட்ட நிலையில் முழுவதும் மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களத்தில் நின்று போராடுகின்றனர் கூடங்குளம் மக்கள். அம்மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டியதே இன்று நம் முன் உள்ள தலையாய பணி.
No comments:
Post a Comment