இராஜராஜசோழனதுஆட்சி: பார்ப்பனியத்தின்மீட்சி! அடிமைகளின்அவலம்!!
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரியகோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின்சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும்,ஆண்டைகளின்ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.
இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.
ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.
வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.
பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.
தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.
வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.
சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த நரசிம்ம பல்லவன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான், பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.
விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.
கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.
பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?
இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.
கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.
__________________