Saturday, October 29, 2011

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா?

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா?

ஒக்டோபர் 28-ஆம் தேதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 22-ஆவது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள், தங்களின் பொது நலன்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர். இதற்கு காமன்வெல்த் என்கிற பொதுநலவாய அமைப்பு என பெயர் சூட்டப்பட்டது. தற்போது 53 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம்.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே அடுத்த இரு ஆண்டு காலப்பகுதிக்கும் அமைப்பைத் தலைமை தாங்கும். காமன்வெல்த் அமைப்பு தற்காலத்திற்குப் பொருத்தமான அமைப்பில்லை என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து நாட்டினால் அடிமைகளாகப் பார்க்கப்பட்ட குறித்த நாடுகளின் மக்கள் இன்று 250 கோடி மக்கள் தொகையென அதிகரித்துள்ளது. இவ்வமைப்பின் பெரும்பான்மையான நாடுகளில் வதியும் மக்கள் வறுமையே வாழ்க்கை என்று வாழ்கிறார்கள்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வம்சாவளி இன நாடுகள் செல்வம் செழிக்க வாழ்கிறார்கள். இவர்களுடைய வாழ்கை உயர்வுக்கு இன்றும் காரணமாக இருப்பது பல வறுமையான நாடுகளே. இந்நாடுகளின் அரிய வளங்களை இன்றும் பிரித்தானிய மற்றும் பல மேற்கத்தைய நாடுகளே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குறித்த காமன்வெல்த் அமைப்பினால் இதனுடைய பெரும்பான்மை உறுப்பு நாடுகளில் வதியும் மக்கள் எவ்வித பலனையும் அனுபவிக்கப் போவதில்லை. எனவே, இவ்வமைப்போ தற்காலத்திற்கு பொருத்தமானதில்லை என்று வாதாடுகிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

நல்லது நடந்தால் நல்லதே
2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு காமன்வெல்த் அமைப்பைத் தலைமை தாங்க சிறிலங்கா ஏக்கத்துடன் நாட்களை எண்ணுகிறது. அடுத்த மாநாடு எங்கே நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டபோது, சிறிலங்கா தனது நாட்டில் நடத்த வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இங்கிலாந்து, கனடா உட்பட பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இறுதிக்கட்டப் போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த சிறிலங்காவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

போர்க்காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், சிறிலங்காவில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை சிறிலங்காவில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை சிறிலங்காவில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப்போகின்றது என்ற நிலையில், கூட்டம் சிறிலங்காவில் நடத்தப்படுவது கவலை தருவதாகும். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதாக இருந்தால் அதற்கு முன்பு வன்னியில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூர் மற்றும் அனைத்துலக விசாரணை நடத்த சிறிலங்கா அரசை காமன்வெல்த் நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும்."

கனேடியப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் கடந்த செப்டம்பர் ஆரம்பத்தில் கனேடியப் பல்கலாச்சாரத் தொலைக்காட்சியொன்றுக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்பேட்டியின் போது சிறிலங்கா அரசானது பின்வரும் விடயங்களைக் கடைப்பிடித்து அரசியல் ஜனநாயகப் பாதைக்கூடாக முன்னேறாத பட்சத்தில் சிறிலங்காவில் 2013-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா சார்பில் தான் பங்குகொள்ளமாட்டேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், சிறிலங்கா அரசானது, சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை அகற்றி அரசியல்ரீதியான சமரச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசானது சனநாயக நெறிமுறைகளையும், பொறுப்புணார்வையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தல் வேண்டும். அத்துடன், ஐ.நா. சபையின் போர்க்குற்றம் குறித்த சுயேச்சையான விசாரணைக்கான அழைப்பைத் தான் வரவேற்பதாகவும் கூறியிருந்தார் ஸ்டீபன் கார்ப்பர்.

மகிந்த ராஜபக்சே சந்திக்கவிருக்கும் களம்
சிறிலங்கா அரசினது மனித உரிமை செயற்பாடு குறித்துத் தான் ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் காமன்வெல்த் மாநாட்டில் வைத்து கேள்வி கேட்கப்போவதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் சில வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார். காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பொறுப்பையேற்க தகுதியான நாடா சிறிலங்கா என்பது குறித்துப் பலமாக கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

அடுத்த தலைவர் பொறுப்பை எப்படியேனும் தனதாக்குவதனூடாக, தான் எதிர்நோக்கும் அனைத்துலக விசாரணை குறித்த வேண்டுகோள்களை மழுங்கடித்து விடலாம் என்று மனப்பால் குடித்து செயற்படுகிறார் மகிந்தா. தனது கனவை நனவாக்க, தானே நேரடியாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்கிற ரீதியில் அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளார் மகிந்தா. இதனை எதிர்கொள்ள உலகத்தமிழர்களும் காத்திருக்கிறார்கள்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைகள் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் ஆஸ்திரேலிய சமஷ்டி காவல்துறையினரிடம் வன்னியில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தி வாக்குமூலம் வழங்கியிருக்கிறார் என ஆஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அத்தொலைக்காட்சி ஒன்பது நிமிட செய்தி விமர்சனத் தொகுப்பொன்றை சிறிலங்கா ஜனாதிபதி விசாரணையை எதிர்நோக்குகிறார் என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவு செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சமஷ்டி காவல்துறை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தி, வைத்தியர் சாம்பவி ஆகியோர் சாட்சியங்களாகப் பதவி செய்துள்ளனர். தற்போது சிறிலங்காவின் ஆஸ்திரேலியத் தூதுவராக இருக்கும் அட்மிரல் திசார சமரசிங்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிறிலங்கா இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் பாலித கோகன்ன, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆகியோர் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவு சமஷ்டி காவல்துறையைக் கேட்டுள்ளது.

மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தான் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கடலில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்தியது வரை இவர் விவரித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்துப் பிரதான ஊடகங்களும் சிறிலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் காமன்வெல்த் மாநாடு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

லண்டன் சென்று மூக்குடைபட்டு திரும்பியது போதாதென்று, அமெரிக்கா வரை சென்று வைத்திய சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். மீண்டும் வைத்திய சிகிச்சை அமெரிக்காவில் பெற வேண்டுமென்று கேட்டபோது...அய்யோ எங்களது நாட்டை விட்டு சென்றுவிட்டாலே போதும் என்று சொல்லி நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்கள் அமெரிக்க அதிகாரிகள். இவைகள் அனைத்தும் போதாது மீண்டும் களம் காணுவேன் என்கிற அகங்காரத்தில் ஆஸ்திரேலியா செல்லத் தயாராகிறார் மகிந்தா. எவ்வாறான அனுபவத்தை அவுஸ்திரேலியாவில் சந்திக்கப் போகிறார் மகிந்தா என்பதை பத்து நாட்களுக்குள் தெரிந்து விடும். அதுவரை காத்திருப்போமாக

No comments:

Post a Comment