தமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்!
(அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-2)
இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமானது. அந்த யுத்தத்தை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது. இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.
அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறுநாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்;, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.
பிரபாகரன் அவர்கள் அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்குப் பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியச் சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.
1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகை (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம்.
போர் மூண்டது.
இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம்.
நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காகப் போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிடப் போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது.
இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.
You too India? (இந்தியா.. நீ கூடவா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது:
விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது. இந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம் என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நன்பன். அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.
அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.
இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.
இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்.
விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.
பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.
கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள் தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள்.
புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.
யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன:
18வது காலாட் படைப்பிரிவு.
41வது காலாட் படைப்பிரிவு.
72வது காலாட் படைப்பிரிவு.
91வது காலாட் படைப்பிரிவு.
115வது காலாட் படைப்பிரிவு.
65வது கவச வாகனப் பிரிவு.
831வது இலகு மோட்டார் படைப்பிரிவு.
25வது படைப்பிரிவு
10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு
என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்னிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது.
ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில்; பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.
தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை.
அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.
தலைவரைக் கைதுசெய்யும் திட்டம்:
இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டுத் திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.
முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கணித்திருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.
இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.
புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை மாற்றுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.
போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கொமாண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்படுகின்றது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளின் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.
இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.
அடிப்படைத் திட்டங்கள்:
அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.
1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்;க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.
2. குறைந்தது ஒரு விநியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.
3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.
4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.
5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.
இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.
ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.
உண்மையிலேயே இது நல்லதொரு திட்டமும் கூட.
இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
கவனத்தில் எடுக்கமறந்த விடயம்:
உண்மையிலேயே புலிகளை ஒழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.
ஆனாலும், புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுணுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான் இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது.
அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது விடுதலைப் புலிகளுடன் என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.
தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையும், அவனால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.
இவ்வாறு சில அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில்; பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
அந்த அவலங்களின் அத்தியாயங்களை அடுத்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
தொடரும்...
No comments:
Post a Comment