Thursday, October 27, 2011

அம்பலத்திற்கு வந்த இரகசிய இராணுவ நடவடிக்கை
- (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-3)

1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos)
2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry)

நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கிருந்ததாகக் கூறப்படும் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைப்பற்றும் பணி, 100 பராக் கொமாண்டோக்களிடம் (Para Commandos) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவரைக் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் பராக் கொமாண்டோக்களை ஹெலிக்காப்டர்களில் பத்திரமாக திருப்பி அனுப்பிவைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மைதானத்தை கைப்பற்றி, தளமாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பணி 13வது சீக்கிய மெது காலாட் படையினரிடம் (13 - Sikh Light Infantry) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி வீதியும், பிறவுன் வீதியும் இணையும் சந்திக்கு அருகே உள்ள கொக்குவில் கிராமசபைக்கு முன்பாக உள்ள வெட்டவெளியில் பராக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டார்கள்.
ஆனால், இந்தியப் படைத்துறை அதிகாரிகள் நினைத்தபடி தரையிறக்கம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.
இந்தியப் படையினர் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.
தரையிறக்கம் இடம்பெற்ற இடத்தினை வெகுவிரைவில் சூழ்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல முனைகளில் இருந்தும் தரையிறங்கிய ஹெலிகளைக் குறிவைத்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடியே இருந்தன.

ஐந்து தரையிறக்கங்களை மட்டுமே இந்தியப் படையினரால் அங்கு மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் எதிர்ப்பு அத்தனை கடுமையானதாக இருந்தது. இந்தியப்படையினரின் மூன்று ஹெலிகள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தரையிறக்கத்தை கைவிட்டு தளம் திரும்பவேண்டி ஏற்பட்டது.

பரசூட்டில் குதித்த சீக்கியர்கள்:
இதேவேளை, இந்தியப் படையினர் தமது முற்றுகைத் தாக்குதல் திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அண்டிய பகுதியில் 13வது சீக்கியப் படையணியினரைப் பரசூட்டுக்களின் மூலம் தரையிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எத்தனித்தார்கள்.
முன்னைய தரையிறக்க நடவடிக்கையைப் போலல்லாமல், இந்த தரையிறக்க நடவடிக்கையை மிகவும் இரகசியமாக மேற்கொள்ளுவதே இந்தியப் படையினரின் திட்டமாக இருந்தது.
கொக்குவில் பிரதேசத்தில் பராக் கொமாண்டோக்களை ஆரவாரத்துடன் தரையிறக்கி புலிகளின் கவனத்தை அங்கு முற்றாகத் திருப்பிவிட்டு, பல்கலைக்கழக மருத்துவபீட பிரதேசத்தில் சீக்கியத் துருப்பினரை பரசூட்டுக்கள் மூலம் இரகசியமாக தரையிறக்கி நிலை கொள்ள வைப்பதே இந்தியப்படையினரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு இரகசியமாக தரையிறங்கும் சீக்கியப்படையினர், யாழ் மருத்துவபீட வளாகத்தைத் தமது தளமாக ஆக்கிக் கொள்ளுவதுடன், தேவை ஏற்பட்டால் கொக்குவில் பிரதேசத்தில் தரையிறங்கிய பராக் கொமாண்டோக்களுடன் சண்டைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பின்புறம் இருந்து தாக்குதல்களைத் தொடுத்து, ஒரு அதிர்ச்சி நடவடிக்கையை மேற்கொள்ளுவதும் அவர்களது திட்டமாக இருந்தது.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம்தான்.
ஆனால் எதிர்காலத்தையும், எதிரியின் எந்த ஒரு நகர்வினையும் கச்சிதமாகக் கணிப்பிடவல்ல தலைவர் என்று அவரது எதிரிகளால் கூட பாராட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், இந்தியத் துருப்புக்கள் இவ்வாறுதான் தமது நகர்வினை மேற்கொள்ளக்கூடும் என்று தமது போராளிகளுக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அப்படி ஒரு நகர்வு மேற்கொள்ளப்படும் பொழுது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, யாழ் மருத்துவ பீட கட்டிடத்தின் மாடிகளிலும், அருகில் இருந்த மரங்களிலும் விடுதலைப் புலிப் போராளிகள் நிலை எடுத்திருந்தார்கள். பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொருப்பாளராக இருந்த பொட்டு அம்மாணின் தலைமையிலேயே இந்த தற்காப்புத் தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியப் படை வீரர்கள் பரசூட்டுக்களில் குதிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே நிலையெடுத்து பதுங்கியிருந்த விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

நள்ளிரவு.
காரிருளில் பரசூட்டுக்களில் தொடர்ச்சியாகக் குதித்துக்கொண்டிருந்த இந்திய படையின் சீக்கிய காலாட் படைப்பிரிவினருக்கு எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று புரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருந்து துப்பாக்கிச் சன்னங்களின் ஒளிகள் தம்மை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் அவதாணித்தார்கள். பரசூட்டுக்களில் தரையிறங்கிக்கொண்டிருந்த பல இந்திய வீரர்கள் தரையைத் தொடும் முன்னதாகவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக இறந்துவிட்டிருந்தார்கள்.

இதில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர். அத்தோடு தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவின் தொலைத்தொடர்பு இயக்குனரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்திய ஜவான்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்:

தரையிறங்கிக்கொண்டிருந்த சீக்கிப் படைவீரர்களுக்கும்சரி, தரையிறக்கத்தை பாலாலி இராணுவத் தளத்தில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கும் சரி, களமுனையில் என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.

சீக்கிய காலாட் படையினரை தரையிறக்கவெனச் சென்ற ஹெலிக்கப்டர்கள் சுமார் 30 படையினரை மட்டுமே தரையிறக்கிவிட்டு, துப்பாக்கிச் சூடு அதிகமாக இருப்பதாகவும், மற்றவர்களை தரையிறக்கமுடியாது என்றும் கூறிவிட்டு தளம் திரும்பிவிட்டன. தரையிறங்கியவர்களின் கதி என்னவென்று அறிவதற்கும் தளத்தில் இருந்தபடி தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தது.

தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்த படையினர் கதி அதைவிட மோசமானதாக இருந்தது. திரும்பிய பக்கமிருந்தெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் தம்மை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. கடும் இருளில் தமது சகாக்கள் எங்கிருக்கின்றார்கள், தாம் எங்கு நிலை எடுக்கவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. தமது அணிக்கு தலைமைதாங்கிவந்த அதிகாரியிடம் இருந்தும் எந்த வித உத்தரவும் வந்தபாடில்லை. தளத்துடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தமது தரப்பில் எத்தனை பேர் தப்பி இருக்கின்றார்கள்? யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள்? யார்யார் இறந்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கெங்கு நிலை எடுத்திருக்கின்றார்கள்? தமது தற்போதைய பலம் என்ன? தமக்கு வெளியில் இருந்து எதாவது உதவிகள் கிடைக்குமா? - எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காரிருள் அவர்களுக்கு எதனையும் தொடர்ந்து செய்வதற்கு அனுமதியளிக்கவும் இல்லை.

இரகசியமான நகர்வினை மேற்கொள்ளவென வந்த அவர்களது நடவடிக்கைகள் பகிரங்கமானது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இரகசியமாகத் தரையிறங்கி, அங்கு பாதுகாப்பு அரன்களை உருவாக்கி நிலையெடுப்பதற்கு ஏதுவாக இந்தியப் படையினர் தம்முடன் சிறிய சவள்களும், சாக்குப் பைகளும் கொண்டு வந்திருந்தார்கள். தரையில் படுத்திருந்தபடி தாம் உடன் கொண்டுவந்திருந்த சவள்கள் மூலம் மண்ணைத் தோண்டிய சீக்கியப் படை வீரர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. அந்தப் பிரதேசம் கடினமான தரையமைப்பைக் கொண்ட பிரதேசம் என்பதால், அவர்களுக்கு அதுவும் முடியவில்லை.

நிலத்தில் படுத்திருந்து நிலை எடுத்தபடி அனைத்து திசைகளை நோக்கியும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு இந்திய ஜவான்கள் தமது துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்ட நிலையில் தம்மைப் பாதுகாக்கவெனத் தமது துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்டிருந்த பையனைட் கத்திகள் (Bayonet) கொண்டு புலிகளை தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

விடிய ஆரம்பித்ததும், விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை இனங்கண்டு துல்லியமாகத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தினுள் தரையிறங்கிய 30 இந்திய சீக்கியப் படைவீரர்களுள் 29 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு ஜவான் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இதேவேளை, கொக்குவில் பிரதேசத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்டிருந்த 100 பாராக் கொமாண்டோக்களும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்.

1 comment:

  1. Casinos Near Washington, DC - Mapyro
    Find Casinos 속초 출장안마 Near Washington, DC in real-time 익산 출장마사지 and 수원 출장안마 see activity. Zoom in or zoom in real-time. Casinos 양주 출장샵 Near 구리 출장샵 Washington, DC.

    ReplyDelete