Sunday, July 19, 2009


ஸ்பெஷல் ரிப்போட் : இந்தியா மீது போர் தொடுக்குமா சீனா?
வெள்ளிக்கிழமை, 17, ஜூலை 2009 (14:33 IST)
‘‘இன்னும் மூன்றே ஆண்டுகளில், அதாவது2012ம் ஆண்டுக்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கப் போகிறது’’ என்று அடித்துச் சொல்கிறார்பரத் வர்மா. ‘இண்டியன் டிஃபென்ஸ் ரிவ்யூ’ என்ற புகழ்பெற்ற பாதுகாப்புத்துறை பத்திரிகையின்ஆசிரியரான இவர், தேசத்தின் முக்கியமான பாதுகாப்பு நிபுணரும்கூட!
எதிர்காலம் பற்றிய கணிப்புகள் கலவரமூட்டுபவை.அந்தக் கணிப்பில் கசப்பு மருந்தும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. இந்தியாவின்113 கோடி மக்களையும் தூக்கமிழந்து, துக்கத்தில் தவிக்கவிடும் ஒரு கணிப்பைச் செய்திருக்கிறார்பரத் வர்மா. இதற்கு வர்மா பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். எல்லாமேசரியாக இருப்பதுதான் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவோடு சீனப்புரட்சியை சாத்தியமாக்கினார் மாவோ. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியில் அந்ததேசம் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வளர்ச்சியை கிடப்பில் போட்டுவிட்டு,நகர்ப்புறங்களை தொழில்மயம் ஆக்குவதில் ஆர்வம் காட்டியது அரசு. இந்த தொழில்புரட்சி விஸ்வரூபம்எடுத்ததன் விளைவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என எந்த வித்தியாசமும்இன்றி, எல்லா நாடுகளின் மார்க்கெட்டையும் சீனப் பொருட்கள் நிறைத்தன. ‘மேட் இன் சைனா’என்ற முத்திரை கொண்ட பொருள், மலிவான விலையில் கிடைக்காத நாடே இல்லை என்கிற அளவுக்குசீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக இருந்தது.
இப்போது உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும்நிலையில், சீன பொம்மைகளையும் எலெக்ட்ரானிக் அயிட்டங்களையும் சீந்துவாரில்லை. ஏற்றுமதிவர்த்தகம் அதலபாதாளத்துக்குச் சரிந்துவிட, சீன நிதிச்சந்தையிலிருந்து கோடிக்கணக்கானடாலர் அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. அந்நியச் செலாவணி கையிருப்புபெரிதும் குறைந்துவிட, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.இன்னொருபக்கம் கிராமப்புற விவசாயிகள் மத்தியில் எழுந்த கசப்புணர்வு, அரசுக்கு எதிரானபோராட்டமாக ஆங்காங்கே வெடிக்கிறது.
எப்போதும் இல்லாதபடி இனக்கலவரங்களும் புதிய முரண்பாடுகளைஉருவாக்க, சீன சமுதாயத்தின் மீது அரசின் பிடி தளர்ந்து வருகிறது. அரசின் எந்த முடிவையும்கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிற இரண்டு தலைமுறைகளை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு,இந்த திருப்திகளை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. போருக்கு இது முதல் காரணம்!
இரண்டாவது காரணம் பாகிஸ்தான்... இந்தியாவின்ஸ்திரத்தன்மையை குலைக்கும்விதமாக பாகிஸ்தான் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சீனாவின்ஆசி உண்டு. தீவிரவாத முகாம்களை அமைத்து, பயிற்சி கொடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைக்கும் குழப்பங்களுக்கும், வங்க தேசம்,நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தலைவலி தரும் தீவிரவாத இயக்கங்களுக்கும் பாகிஸ்தான்நேரடிக் காரணமாக இருக்கிறது என்றால், சீனா மறைமுகக் காரணம்! இப்போது தாலிபன் அமைப்புபாகிஸ்தானிலேயே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானின் முழு கவனமும் அங்கு குவிந்துவிட்டது.அமெரிக்காவும் அங்கேயே பார்த்துக்கொண்டிருக்க, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இப்போதுபெரிய அளவில் எதுவும் செய்யமுடியாத நிலை.
மூன்றாவது காரணம் அமெரிக்கா... அணுசக்திஒப்பந்தத்தில் ஆரம்பித்து, ராணுவக் கூட்டுப்பயிற்சி வரை அமெரிக்காவும் இந்தியாவும்ரொம்பவே நெருங்கி வருவது சீனாவின் கண்களை உறுத்துகிறது. ஆசியாவின் வல்லமை பெற்ற சக்தியாக,சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் நோக்கமோ என்ற சந்தேகம்அவர்களுக்கு எழுந்திருக்கிறது.
இதுபோன்ற சூழலில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி,அவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தவும், ஆசியாவின் ‘சூப்பர் தாதா’ எப்போதும் சீனாதான்என்பதை நிரூபிக்கவும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்கிறார் பரத் வர்மா.‘‘வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவி செய்வது சீனாதான்.வடகொரியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் கண்டித்துவரும் வேளையில் அந்தநாடுகளில் ஏதோ ஒன்றின்மீது சீனா போர் தொடுக்கலாமே என்ற கேள்வி எழலாம். பொருளாதார மந்தநிலைநிலவும் வேளையில், இந்த நாடுகளை பகைத்துக்கொண்டால் பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகளால்சீனா இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்தியா மாதிரியான தன்னைவிட பலம் குறைந்ததேசத்துடன் போரிடவே அது விரும்பும். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை அபகரித்துக்கொள்ளவும்இந்தப்போர் உதவும். இப்படி ஒருபுறம் சீனாவும், இன்னொருபுறம் பாகிஸ்தானும் போருக்குவந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்’’ என்கிற பரத் வர்மா, ‘‘இப்போதையநிலையில் இப்படி ஒரு சூழ்நிலைக்கு இந்தியா தயாராக இல்லை’’ என வருத்தத்துடன் சொல்கிறார்.

இமயமலைக்கு இருபுறமும் இருக்கும் இந்தஇரண்டு தேசங்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க எத்தனையோ முயற்சிகளை இந்தியா எடுத்திருந்தாலும்,இமயமலை அளவுக்கு நம்பிக்கையின்மை இருதரப்பிலும் வளர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை.இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் சீனாவில் புரட்சி தீவிரமாக இருந்தது. தேசியவாதிகள்பக்கமோ, புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் பக்கமோ சாயாமல் இந்தியா நடுநிலை வகித்தது.கம்யூனிச தேசமாக சீனா உதயமானபோது அதை அங்கீகரித்த, கம்யூனிச ஆட்சியற்ற இரண்டாவது நாடுஇந்தியா. (முதல் நாடு பர்மா). ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைவதற்கும் இந்தியா ஆதரவளித்தது.பரஸ்பரம் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மதித்து, அடுத்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிடாமல்இணைந்து செயல்பட வேண்டும்; எல்லை பிரச்னை போன்ற விஷயங்களை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்என ‘பஞ்சசீலக் கொள்கை’ 1954ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. சீனபிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வந்து நட்புறவுடன் நேருவோடு கைகுலுக்கினார்.
ஆனால் உதட்டளவிலான இந்த நட்பை நீண்ட நாட்கள்நீடிக்க விடவில்லை சீனா. 58&ம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் வடபகுதியை தங்கள் தேசத்தின்ஒரு பகுதியாக சேர்த்து சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மேப் வெளியாக, இந்தியா கடும்ஆட்சேபம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரின்லடாக் பகுதியிலுமாக சேர்த்து சுமா 40 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள பகுதியை, ‘இவை எல்லாமேசீனாவின் அங்கம்’ என வெளிப்படையாக சொந்தம் கொண்டாடினார் சூ என் லாய். அடுத்த ஆண்டேதிபெத்தில் சீனர்களின் ஆக்கிரமிப்புப் படை நிகழ்த்திய அட்டகாசங்களைத் தாங்கமுடியாமல்இந்தியா வந்து தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. அவருக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுக்க,சீன - இந்திய உறவில் வெளிப்படையான விரிசல் ஆரம்பித்தது.
லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளுக்குவிடுதலை வாங்கித் தருவோம் என சர்வதேச வட்டாரங்களில் அவதூறு பிரசாரங்களை ஆரம்பித்த சீனா,1962ம் ஆண்டு திடீரென எல்லையில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தலைப்பகுதியாக இருக்கும்காஷ்மீரில் இரண்டை கொண்டைகள் போலத் தெரியுமே... அதில் வலதுபுறக் கொண்டை ஏரியா ‘அக்சாய்சின்’ பகுதி. ஆக்கிரமித்த திபெத்தோடு சாலைத் தொடர்புகளை ஏற்படுத்த, சீனாவுக்கு இந்தஏரியா தேவை. இதற்காகவே போர் ஆரம்பித்தது. தன் லட்சியம் நிறைவேறியதும், ஆறே மாதங்களில்போர் முடிந்துவிட்டதாக சீனாவே அறிவித்தது.
காஷ்மீர் மாநிலத்தில் 38 ஆயிரம் சதுரகிலோமீட்டர் பகுதியை இப்படி வசப்படுத்தி வைத்திருக்கிறது சீனா. இது போதாதென்று, இன்னும்கொஞ்சம் இடங்களை அது பாகிஸ்தானிடமிருந்து வாங்கியது. ஏற்கனவே சுதந்திரம் வாங்கிய கையோடு,காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான், காஷ்மீரின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
அதிலிருந்து 5120 சதுர கிலோமீட்டர் பகுதியை அது 63ம் ஆண்டு, சீனாவுக்கு தானமாக வழங்கி,தன் நட்பை பலப்படுத்திக் கொண்டது. கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக,இப்படிப் போன இடங்களில் ஒரு கையகல நிலத்தைக்கூட நம்மால் திரும்பிப் பெறமுடியவில்லைஎன்பதுதான் நிதர்சனம்!
இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் அக்கறைகொண்டிருப்பது போல சீன தலைவர்கள் அவ்வப்போது டெல்லி வந்து நடிக்கிறார்கள்; நம் பிரதமரோ,ஜனாதிபதியோ பெய்ஜிங் போகும்போதும் நடிக்கிறார்கள். ஆனால் சீன பொருட்கள் அதிக அளவில்இந்தியாவில் இறக்குமதி ஆகுமாறு பார்த்துக்கொள்வதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது.என்ன இருந்தாலும், 113 கோடி மக்கள் கொண்ட உலகின் பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யாமல்இருக்கமுடியாதே!
அதேசமயம், ‘எல்லை பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொள்வோம்’என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, வேட்டியை உருவும் கலையை நன்றாகவும் செய்கிறார்கள் அவர்கள்.அருணாசல பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை தங்கள் நிலம் என்று சொந்தம்கொண்டாடும் சீனா, அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரசாரம் செய்துவருகிறது.
‘தெற்கு திபெத்’ என அருணாசல பிரதேசத்தை சீனா அழைக்கிறது. கடந்த ஏப்ரலில் அருணாசல பிரதேசத்தில்சில நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டது இந்தியஅரசு. ‘அது சர்ச்சைக்குரிய பகுதி. எங்கள் இடம். அதில் இந்தியா எப்படி அணைகளும் மின்நிலையங்களும் கட்டலாம்?’ என்று எதிர்கேள்வி கேட்டு, நிதியுதவி கிடைக்காமல் தடுத்துவிட்டதுசீனா.
இந்த ஏரியாவில் அடிக்கடி விளையாட்டுத்தனமாக சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் சிரித்துக்கொண்டே திரும்பிப் போய்விடுவதும்அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்புஅமைச்சகத்தின் ஆண்டறிக்கை, ‘காஷ்மீரில் தாங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும்இந்தியப் பகுதிகள் வழியாக சீனாவும் பாகிஸ்தானும் சாலை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக’தெரிவிக்கிறது.
அதாவது இந்திய நிலத்தை ஆக்கிரமித்து, ரோடு போட்டு, ஆயுதங்களையும் தீவிரவாதிகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்திய எல்லையை ஒட்டி, தனது படைப்பிரிவில்30 டிவிஷன்களை சீனா குவித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி ஊடுருவல்நிகழ்த்துவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. 30 டிவிஷன் என்பது கிட்டத்தட்ட 3 லட்சம்ராணுவ வீரர்கள். இந்திய & சீன எல்லை கிட்டத்தட்ட 4050 கிலோமீட்டர் நீளமானது. இந்தஎல்லையின் சீனப்பகுதியில் சாலை வசதிகளும் ராணுவத்துக்குத் தேவையான கட்டிட வசதிகளும்சமீப ஆண்டுகளில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.
திடீரென போருக்குத் தேதி குறித்தால்,ஒரே நாளில் பல படைப்பிரிவுகளை இங்கே கொண்டுவந்து இறக்க சீனாவால் முடியும். நம் பகுதியில்மண் ரோடுகள்தான் அதிகம். மாட்டுவண்டிகளில் ராணுவ வீரர்கள் போவது சாத்தியம் என்றால்நாமும் இதே ‘வேகத்தில்’ படைகளைக் குவிக்கலாம்!
பிரச்னை இதோடு முடியவில்லை... பாகிஸ்தானுக்குநீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை போன்ற பல ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் சீனா, பாகிஸ்தானின்குவடார் துறைமுகத்தை நவீனப்படுத்துவதில் ஏகப்பட்ட பணத்தைச் செலவிடுகிறது. அநேகமாக இதற்குப்பிரதிபலனாக அங்கு சீனா கடற்படை தளம் அமைத்துக்கொள்ள பாகிஸ்தான் அனுமதி வழங்கக்கூடும்.
இதேபோல வங்க தேசத்துக்கு போர் விமானங்களைவழங்கியிருக்கும் சீனா, அந்த நாட்டுக்கு அணு உலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதிகொடுத்திருக்கிறது. இதற்கு கைமாறாக, சிட்டகாங் துறைமுகத்தில் தனது கடற்படை கப்பல்களைநிறுத்திக்கொள்ள சீனா அனுமதி வாங்கப்போகிறதாம்!
இலங்கையிலும் இதே கதைதான்... புலிகளுக்குஎதிரான யுத்தத்தில் பயன்படுத்த எஃப் 7 ரக விமானங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை அளித்தசீனா, அங்கிருக்கும் ஹம்பந்தோடா துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. அநேகமாக இங்கும்அதன் கடற்படை முகாமிட வாய்ப்பிருக்கிறது.
நேபாளத்தில் மட்டும்தான் சீனா மேற்கொள்ளும்முயற்சிகளை இந்தியாவால் முறியடிக்க முடிந்திருக்கிறது. பிரசாந்தா தலைமையில் அமைந்தமாவோயிஸ்ட் அரசு, இந்திய - நேபாள ஒப்பந்தத்தை முறிக்க முயன்றது. பிரசாந்தாவுக்குசீனாவுன் முழு ஆசி உண்டு. ஆனால் நேபாள காங்கிரஸ் கட்சி சீனாவை எதிரியாகவும், இந்தியாவைநண்பனாகவும் பார்க்கும் கட்சி என்பதால், அங்கு சீன முயற்சிகள் ஜெயிக்கவில்லை.
இருந்தபோதிலும் இந்தியாவைச் சுற்றி கண்காணிப்புமற்றும் படை வளையங்களை குவிப்பதில் சீனா வெற்றிபெற்று விட்டதாகவே தோன்றுகிறது. ஏற்கனவேநடந்த இந்திய & சீனப் போரில் விமானப்படையோ, கப்பற்படையோ பயன்படுத்தப்படவில்லை.காரணம், அது டெக்னாலஜி வளராத காலத்தில் மலைமுகடுகளில் நிகழ்ந்த யுத்தம். இப்போது நவீனபோர்க்கப்பல்களும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளுமே போர் வெற்றிகளை தீர்மானிக்க வல்லவைஎனும்போது, அந்த சக்தியில் சீனாவை மிஞ்சும் திறன் நமக்கு இல்லை என்பது கவலை தரும் உண்மை!
இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் எல்லைப்பிரதேசத்தில்பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அமைத்து வருகிறது என்ற செய்தியும்வருத்தம் தருகிறது. ‘‘மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் அதிகமாகிஇருக்கிறது. நாங்கள் எத்தனையோ ஆட்சேபங்கள் தெரிவித்தும் அவர்கள் தரப்பில் எந்த மாற்றமும்இல்லை’’ என இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் யு.கே.பன்சால் தெரிவித்திருக்கிறார்.
பரத் வர்மாவின் ஜோதிடம் பலிப்பதற்கு இப்படிஏராளமான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது பலிக்காமல் போகக் கடவது என்றே நினைப்போம்.சீன பாதுகாப்பு நிபுணர்களும் அப்படித்தான் ரீயாக்ட் செய்திருக்கிறார்கள். ‘இப்படி பாதுகாப்புநிபுணர்களை பேசவிட்டு, ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது’என குற்றம் சாட்டுகிறார்கள் சீன நிபுணர்கள்.
சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைவிடராணுவத்துக்கு பல மடங்கு அதிகம் செலவிடுவது என்பது இந்தியா போன்ற வறிய நாடுகளுக்குசாபம்! அந்த சாபம் பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திலிருந்தே நம் காலைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அது இன்னும் மோசமாவதற்கு சீனா காரணமாவதுதான்வருத்தம் தருகிறது.
- நாடோடி

No comments:

Post a Comment