Friday, July 3, 2009

பிரபாகனின் மகள் - மகன் - இறுதி நிமிடங்கள்
காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.

முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்குகள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண்டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந்திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்துவது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது. "பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?' "பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்', "பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்' பிரபாகரனது கண்களுக்கு முன் அவரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்'' என்றெல்லாம் வரத் தொடங்கியிருக்கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப்போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழ் ஈழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, ""உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?'' எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. ""அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்'' என்று கூறிய அவர், ""உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை'' என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன். அவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேதனையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் ""என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்'' என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன். தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள்ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக்கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே "நீ போய் படுத்துக்கோ தம்பி' என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் "அப்பா, மாமா, அண்ணே... என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள். துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். "எனது தேவதை இந்தப் பிள்ளை' என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி "மாலதி படையணி'யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா... எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை... முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்... உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும். உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக் கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.ஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான். ""தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு "போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்' என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்'' என்றிருக்கிறார். ""அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்'' என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை. தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.காலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், ""என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா...'' என்றிருக்கிறார்.விடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.(நினைவுகள் சுழலும்)
நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment