Tuesday, November 1, 2011

வெற்றி யாருக்கு? ‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’ - ச. வி. கிருபாகரன்

இதுவரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில, வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம்.

இதேவேளை ஏன் தமிழ் தலைமை காரணமாக இருந்தது என ஆராயுமிடத்து, தமிழர் தலைமை என்றும் பொதுநலத்தைவிட சுயநலமாக வாழ்ந்தார்கள் என்பது வெளிப்படையானது.

மந்திரிப்பதவி, மகளுக்கும் மகனிற்கும் தூதுவர் பதவி, மைத்துனனிற்கு செயலாளர் பதவியென சுயநலத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, திம்பு பேச்சுவார்த்தை மூலம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட வேளையில், ஆயுதப் போராட்டம் ஓர் முழுவடிவத்தை அடைந்தது மட்டுமல்லாது சிறீலங்கா அரசும் சிங்கள இராணுவமும் பெற்றுவந்த அரசியல் வெற்றிகள் யாவும் தவிடுபொடியாக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் போராளிகளின் இராணுவ வெற்றிகள் உலகை வியக்கவைக்கும் வகையில் நடைபெற்று, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் சர்வதேசத்தின் அங்கீகாரம் மட்டு இல்லாது சகல கட்டமைப்புக்களும் அடங்கிய ஓர் தமிழீழ அரசு இருந்தது என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிலர் நேரில் விஜயம் செய்து தமிழீழ அரசின் முன்னோடிகள், மூதாதையர், தலைவர்களை கண்டு வாழ்த்தியும் வந்தனர்.

துரதிஸ்திவசமாக பொதுநலத்திலும் சுயநலத்துடன் வாழ்ந்த சிலர் தமிழீழ போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதாக் கூறி கபடத்தமான வாழ்க்கை வாழ்ந்ததினால் ஈழத்தமிழர் இன்று நிலத்திலும், புலத்திலும் பெரும் ஏமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இவ் அரசியல் விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவைச் சுருக்கமாக கூறுவதானால் சர்வதேச அங்கீகாரத்திற்கு காத்திருந்த நாம் இன்று யாவற்றையும் இழந்து எமக்குள்ளிருந்த சந்தோசம், சகோதரத்துவம், பாசம், நட்பு யாவற்றையும் இழந்ததுடன், எம்மில் பலர் எமது இனத்தின் பொது எதிரி சிறிலங்கா அரசு என்பதையும் மறந்து தமது தோழர்கள், நண்பர்கள், சகாக்களுடன் தினமும் சர்ச்சைப்பட்டு சிறீலங்கா அரசின் கபடமான திட்டங்கள் சரியான வகையில் செயல்பட துணை நிற்கின்றனர்.

வெட்கம், ரோசம், மானம்

பொது நலத்திலும் சுயநலம் இருந்தாலும் தமிழர்கள் வெட்கம் ரோசம் உள்ளவர்கள் என நமது மூதாதையர் கூறுவது வழக்கம்.

உண்மையில் கூறுவதானால் புலம் பெயர்வாழ் செயல்பாட்டாளர்கள் பலர் வெட்கம், ரோசம், மானம் பற்றி அறிந்துள்ளார்களா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

காரணம் எமது தமிழினத்தை அழித்து எமது நிலத்தை சிங்கள பௌத்த பிரதேசமாக பிரகடனம் செய்யும் சிங்கள அரசும், அதனுடைய புலனாய்வு பிரிவின் செயல்பாடுகளுக்கு துணைபோவோர்களாக புலம் பெயர்வாழ்வில் சில சங்கங்களும், செயற்பாட்டாளர்களும், காடையர்களினால் நிர்வாகிக்கப்படும் தொழில்சார் அற்ற சில ஊடகங்களும் செயல்படுவது மிகவும் மன வேதனைக்குரியது.

‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’.

முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தொல்லைகள் கொடுத்து தண்டிக்கபட்டவர்களும், விடுதலைப் போராட்டத்திற்கு திரைமறைவில் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, செல்லாக்காசுகளாக தமிழீழ சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சந்திக்கு சந்தி கடை தெருக்களில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வசைபாடியவர்களுடன் சில சங்கங்களும், செயற்பாட்டாளர்களும் ஏன் தற்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்?

இவ் செல்லாக் காசுகள், காடையர்கள் கொள்கையற்றவர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருடனும் வருமானத்தின் அடிப்படையில் கூட்டுச் சேரும் பச்சோந்திகள்.

காரணம் ‘பூவுடன் சேர்ந்த வாழை நார் போல்’ கௌரவம் அற்ற தமக்கு, கௌரவத்தையும் பிரபல்யத்தை, முன்பு தாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வசைபாடியதற்கு பாவமன்னிப்பையும் பெறுவதே இவர்களின் திட்டம், செயல, நோக்கம் இதுவே யதார்த்தம்.

இருவருக்கிடையில் அல்லது இரு சங்கங்களுக்கிடையில் அல்லது இரு தலைவர்களுக்கிடையில் சர்ச்சைகள் உருவானால் அவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எரியும் நெருப்பில் நன்றாக எண்ணை ஊற்றுபவர்கள் தான் இவர்கள்.

குழப்ப வாதிகள் யாரும் சங்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதையோ, நட்பு ஏற்படுவதையோ அனுமதிக்கமாட்டார்கள். காரணம் சங்கங்கள் ஒற்றுமைப்பட்டால் தங்களின் வண்டவாளங்கள் வெளியாவது மட்டுமல்லாது, தமக்கு ஓர் முக்கிய இடம் இல்லாமல் போய்விடுமெயென பயப்படுபவர்கள் இவர்கள்.

உதாரணமாக இரு சங்கங்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தால, இச் சங்கங்கள் ஒற்றுமைப்படக் கூடாது என்ற கருத்துக் கொண்ட பிரிவுகள் இரு பகுதியிலும் உள்ளனர்.

அத்துடன் வேறுபட்ட புலனாய்விற்கு தகவல் கொடுப்போரும் இரு பகுதியிலும் இருப்பார்கள். இவ் அடிப்படையில் இரு சங்கங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படும்பொழுது எல்லாமாக ஆறு பிரிவுகள் ஏற்படுகின்றன. இவற்றை தமக்கு சதாகமாக காடையர்களினால் நிர்வாகிக்கப்படும் தொழில்சார் அற்ற ஊடகங்கள் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்த் தேசியம்

தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள எந்த தமிழனும் சிங்கள அரசை சந்தோசப்படுத்தும் எந்த வேலைத்திட்டங்களிலும் ஈடுபடமாட்டார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது, தமிழீழத்திற்கான இலட்சியத்துடன் இணைந்து பயணிப்பது. நமது முன்னோர் கூறியது போல் பாதைகள் மாறலாம், நிலைமைக்கு ஏற்ற முறையில் தரித்தும் நிற்கலாம், ஆனால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

தமிழ் மக்களின், தமிழீழ மக்களின் ஒற்றுமையை குலைக்காது பயணிப்பவர்கள், தமிழ் தேசியவாதிகள். மற்றவர்கள் வியாபாரிகள், தமிழ்த் தேசியத்தை சூறையாடுபவர்கள்.

ச. வி. கிருபாகரன்

No comments:

Post a Comment