இந்தியப் படையினரில் கணிசமான அளவு படைவீரர்கள் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிவிட, தமது அடுத்த கட்ட நகர்வை மிகவும் நிதானமாகவே அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
அப்பிரதேசத்தின் ஒரு வீட்டிலிருந்த ராஜா என்பவரையும், அவரது மருமகனான குலேந்திரன் என்பவரையும் தமக்கு வழி காண்பிக்கவென அழைத்துக்கொண்டு, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.
ராஜாவின் வீட்டில் இருந்து ஒரு ஒழுங்கை வழியாக ஒரு தொகுதி இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட அதேவேளை, பெரும்பாலான இந்தியக் கொமாண்டோக்கள் அந்த ஒழுங்கையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த வீட்டு வளவுகளினூடாகவே தமது நகர்வினை மேற்கொண்டார்கள். வேலிகள், மதில்கள் போன்றனவற்றில் ஏறிக் குதித்து அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடம் அமைந்துள்ளதாக கூறப்பட்ட பிரம்படி வீதிக்கு வந்துசேர்ந்ததும், அவர்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அப்பகுதியில் உள்ள பனங்காணி ஒன்றிலிருந்தே முதலில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. முதலாவது துப்பாக்கி வேட்டிலேயே மூன்று இந்தியப் படை வீரர்கள் தாக்கப்பட்டு தரையில் வீழ்ந்தார்கள்.
இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஒரு அதிகாரி, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட பனங்காணிக்கு அருகில் அமைந்திருந்த வீட்டைக் குறிவைத்து செல் தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்தியக் கொமாண்டோக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்திய இராணுவத்தினர் செல் தாக்குதல் நடத்துவதற்கென்று தமது மோட்டார் லோஞ்சரை குறிவைத்திருந்த அந்த வீடு பொன்னம்பலம் என்ற இளைப்பாறிய சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது.
ஆரவாரங்கள் அதிகமானதைத் தொடர்ந்து அவர் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முற்பட்டபோதுதான், தனது வீட்டைக் குறிவைத்து இந்தியப் படையினர் மோட்டார் லோஞ்சரை நிலைப்படுத்திக் கொண்டிருப்பதை அவர் அவதானித்தார்.
உடனே தனது குடும்பத்தினரை தரையில் விழுந்து படுக்கும்படி உரக்கக் கத்திவிட்டு, இளைய மகளையும் இழுத்துக் கொண்டு தானும் தரையில் விழுந்து படுத்தார். அடுத்த வினாடி அவரது வீடு இந்தியப் படையினரின் செல் தாக்குதலுக்கு இலக்கானது.
மறுநாள் காலைவரை அவரும் குடும்பத்தினரும் ஒரு கட்டிலின் கீழே தரையில் படுத்தபடி கிடந்தார்கள். அந்த வீட்டின் கூரை முழுவதும் முற்றாகச் சேதமாக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் இருப்பிடம் ஒன்றைத் தாம் வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டதாக இந்தியப் படை கொமாண்டோக்கள்; தமது மேலதிகாரிகளுக்கு தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தியப் படையினர் ஆடிய கோர தாண்டவம்:
இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் அப்பிரதேசத்தில் இருந்த அனைத்துமே அவர்களுக்கு எதிரிகளின் இருப்பிடமாகத்தான் தென்பட்டன. அங்கு இருந்த அனைவருமே எதிரிகளாகவே அவர்களுக்கு தென்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு ஏற்பட்டிருந்த தோல்வியும், இயலாமையும், அச்சமும் அவர்களை அவ்வாறே சிந்திக்கவும் வைத்தது.
தம்மை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்த ஆரம்பித்ததும், அவர்கள் சகட்டுமேனிக்கு திருப்பிச் சுட ஆரம்பித்திருந்தார்கள். தம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட திசையை நோக்கி மட்டுமல்லாமல், அனைத்து திசைகளை நோக்கியும் அவர்கள் சுட ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தியப் படையினருக்கு வழி காண்பிக்கவென்று அழைத்துச் செல்லப்பட்ட ராஜா, பனங்காணியில் இருந்து புலிகள் தாக்குதலை ஆரம்பித்த மறுகணமே அருகில் இருந்த வீட்டின் ஊடாகப் பாய்ந்தோடி, தனது வீட்டை வந்தடைந்துவிட்டார்.
ராஜாவுடன் அழைத்து செல்லப்பட்ட அவரது மருமகனான குலேந்திரன் இந்தியப் படையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சண்டைகள் அரம்பித்துவிட்டதை உணர்ந்த ஜீவா என்ற பல்கலைக் கழக மாணவன், கிருபா என்ற தனது நன்பனுடன் அவனது சகோதரி ஒருவருடைய வீட்டில் இருந்து பின்புற வழியாக வெளியேற முற்பட்டபோது, அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.
தனபாலசிங்கம் என்ற விரிவுரையாளர் தனது குடும்பம் சகிதமாகவும், அயலவர்கள் சிலருடனும் தனது வீட்டினுள் மிகுந்த அச்சத்துடன் அமர்ந்திருந்தார். அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தச்சுத் தொழிலாளியான கோபாலக்கிருஷ்னன் என்பவரும் நிலமை பற்றி அறிந்து கொள்வதற்கு அங்கு வந்திருந்தார்.
சண்டைகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து வெளியே நகர முடியாதபடிக்கு அங்கேயே தங்கிவிட்டிருந்தார். அருகில் அதிகரிக்க ஆரம்பித்திருந்த துப்பாக்கிவேட்டுச் சத்தங்கள், அவர்களைப் பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தன.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் இருந்த மற்றவர்களுக்கு தனபாலசிங்கம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தார். ~~இந்தியப் படையினர் ஸ்ரீலங்கா இராணுவத்தைப் போன்று பொதுமக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.
விடுதலைப் புலிகளுடன் மட்டும்தான் அவர்களுடைய சண்டைகள் இருக்கும். அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் நிச்சயம் நேசிப்பார்கள். எனவே நாம் ஒன்றும் அதிகமாகப் பயப்படத் தேவையில்லை.|| என்று கூறிக்கொண்டிருந்தார்.
இந்தியப் படையினர் அந்த விரிவுரையாளரின் நம்பிக்கையை சிறிது நேரத்திலேயே சிதறடித்திருந்தார்கள்.
அவரது வீட்டிற்குள் புகுந்த சில இந்தியப் படை வீரர்கள், தனபாலசிங்கத்தையும், அவரது மனைவி, ஒரு குழந்தை போன்றவர்களை சுட்டுக் கொன்றார்கள். தனபாலசிங்கத்துடன் அவரது வீட்டில் தங்கியிருந்த அயல்வீட்டுக்காரரான கோபலகிருஷ்னனும் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றொரு பெண்மணி, அவருடைய ஒன்பது வயது மகன் உட்பட அங்கு தங்கியிருந்த வேறு ஆறு பேரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த வீட்டில் தங்கியிருந்தவர்களுள் ஏழு வயது நிறம்பிய ஒரு சிறுவன் மட்டுமே பலத்தகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.
மற்ற அனைவரையும் இந்தியப் படையினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாகச் சுட்டுத்தள்ளியிருந்தார்கள்.
பராக் கொமாண்டோக்கள் அமைத்த தளம்:
இவ்வாறு கோர தாண்டவமாடியபடி தமது அமைதிகாக்கும் பணியினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் உடனடியாக அப்பிரதேசத்தில் ஒரு தளத்தினை அமைத்து நிலை கொள்ள வேண்டி இருந்தது.
இரகசியமாக நகர்ந்து புலிகளின் தலைவரைப் பிடிக்கும் தமது திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மிகுந்த சங்கடமான ஒரு நிலை அங்கு உருவாகி இருந்தது. அதாவது அங்கு தரையிறங்கியிருந்த இந்தியக் கொமாண்டோக்கள் பத்திரமாக திரும்பவேண்டும் என்ற கவலை பிரதானமாக அவர்களைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
அவசர அவசரமாகத் தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் சற்று பெரியதும், மதில்களுடன் கூடியதும், இலகுவாக நிலை எடுக்கக்கூடியதுமான ஒரு வீட்டை தமது தற்காலிக தளமாக மாற்றிக் கொள்ள இந்தியப் படையினர் தீர்மானித்தார்கள்.
அவர்கள் தமது தளத்தை அமைத்துக்கொள்வதற்கு ஏற்றாற்போன்று ஒரு வீடு அப்பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருமதி விஸ்வலிங்கம் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடே அவ்வாறு இந்தியப் படை அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை கைப்பற்றுவதற்காக இந்தியப் படை அதிகாரிகள் சில கொமாண்டோக்களை அங்கு அனுப்பினார்கள்.
திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டினுள் நுழைந்த இந்தியப் படையினர், அங்கிருந்த பத்து பேரையும் ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொண்றார்கள். தாம் அந்த வீட்டினுள் முகாம் அமைக்கும் விடயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.
திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டை தலைமையகமாகக் கொண்டு, ஒரு பக்கத்தில் ரெயில் பாதையையும், கிழக்கே ஒரு வெட்ட வெளியையும் எல்லையாகக் கொண்டு ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியப் படையினர் தமது தளப் பிரதேசமாக மாற்றி நிலையெடுத்து நின்றார்கள்.
அவர்கள் அமைத்திருந்த தளப் பிரதேசத்தினுள் இருந்த, அந்தத் தளப் பிரதேசத்தினுள் நுழைந்த, அந்தத் தளப் பிரதேசத்தைக் கடந்து சென்ற அனைவரையும் அவர்கள் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றார்கள். அவ்வாறு செய்வதற்கான உத்தரவும் அவர்களுக்கு அவர்களது மேலதிகாரிகளினால் வழங்கப்பட்டிருந்தது.
திருமதி விஸ்வலிங்கத்தினுடைய வீட்டின் முன் அறையை அவர்கள் காயப்பட்ட தமது வீரர்களுக்கு சிகிட்சையளிப்பதற்கு ஏற்றாற்போன்று ஒரு சிறு மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள்.
தமது முகாம்களில் இருந்து அவர்களுக்கு மேலதிக உதவிகள் வந்து சேரும் வரைக்கும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்படியான எத்தனங்களை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் அவர்கள் நிலை கொண்டிருந்த பிரதேசத்தினை பாதுகாக்கும் நோக்குடன் யாழ் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
விடுதலைப் புலிகளின் நிலைகள் அமைந்திருந்த இடங்கள் என்று இந்திய பராக் கொமாண்டோக்களினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட இடங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றபடியே இருந்தன.
தமிழ் மக்கள் அனைவருமே இந்தியப் படைக் கொமாண்டோக்களுக்கு புலிகளாகவே தென்பட்டதால், அவர்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த வீடுகளையும் புலிகளின் இருப்பிடமாகவே அறிவித்திருந்தார்கள்.
இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் குடாமீது ஷெல் தாக்குதல்களை நடாத்துவதற்கு இந்தியப் படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடமும் உதவி கோரி இருந்தார்கள்.
மிகவும் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் ஸ்ரீலங்காப் படையினர் அந்த உதவிகளை தாராளமாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
தொடரும்..
No comments:
Post a Comment