Friday, November 4, 2011

எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும் ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக் காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும் ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.

வெட்கத்தையும் பரிகசித்தவர்களின் பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம் ஈழத்து யுவதிகளது கூக்குரலின் ஆதாரம் இது.

காலை பத்து மணி இருக்கும், அயலூரில் இருந்து என் வருகை தெரிந்து என்னைச் சந்திக்க வந்தபோது. தன்னை அறிமுகம் செய்துகொண்டு தன் தோழிகளுடன் முன்னிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். மற்றவர்களும் சற்றுத் தயக்கமும் கண்களில் கலக்கமுமாக என் முன் தோழிகளுக்குத் துணையாக ஆசுவாசமாக அமர்ந்தார்கள்.

1987, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஃபிரண்லைன் மற்றம் இந்து இதழ்களுக்கு கொடுத்த பேட்டியில் தமிழினத் தலைவர் வே.பிரபாகரன், “எமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை எங்கள் இதயங்கள் மிக ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார் (ஃபிரண்லைன் 04.09.1987). தாங்கமுடியா வெப்பத்துடன் அதே உணர்ச்சிகளின் தகிப்புடன் என் முன்னே அமர்ந்திருந்தார்கள். வெப்பத்தின் வீச்சு கதிர் வீச்சு போல அரித்தது.

அவள் பேச ஆரம்பித்தாள். பாசமும் கண்டிப்பும் இரண்டு கண்களாக பூசிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் நான். என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் பிள்ளை. அதனாலேயே செல்லமாக வளர்க்கப்பட்டேன். கனிவுடன் கற்பிக்கப்பட்டேன். இளமை தமது அழைப்பிதழை நீட்டிய பிறகு கலை ஞாயிறென ஒளிர்ந்திருந்தேன்.

இள மொட்டுக்கள் நாங்கள் கூடிய நேரங்களில் எமது நாட்டின் நிலைமைகளையும் பேசியிருக்கின்றோம். “நில மீட்புக்காகவே இந்தப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழீழம் எமக்கு சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம். இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 1999-ஆம் ஆண்டு மாவீர்ர் தின உரை முழக்கத்தையும் சிலிர்ப்புடன் சிலாகித்திருக்கின்றோம்.

பல யுவதிகள் போராட்டத்திற்கு தற்கையளிப்பு செய்தபோது, எனக்குள்ளும் ஆர்வம் இருந்தது. நான் இல்லை என்று சொல்லவில்லை. என் நாட்டிற்கா போராட வேண்டும் காடையரின் கங்கறுக்க வேண்டும் காலத்திற்கும் தமிழீழம வாழ வேண்டும் என்ற வேகம் இருந்தது. ஆனால் ஏனோ சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. வீட்டிலும் ஒரே கவலை. பாசம் தானே. அவர்களும் என்னதான் செய்வார்கள். ஒரே பிள்ளையாயிற்றே.

எனவே யாராவது வந்து கூப்பிட்டால் கூட நான் போய்விடக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால், காலத்தின் சூத்திரம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2008-ஆம் ஆண்டு சிங்களவனின் கொடூர முகம் குண்டுகளாய் விழ ஆரம்பித்தது. அவனது அகங்காரச் சிரிப்பு நெருப்புப் பிழம்புகளாய் பற்றி எரிந்தது. தப்பிக்க வழிதேடி எல்லோரும் ஓடியது போல, நாங்களும் கையில் அகப்பட்டதை கக்கத்தில் அடைத்துக் கொண்டு ஓடி ஒளிய ஆரம்பித்தோம். வானத்தையும் அதில் ரீங்காரமிடும் விமானத்தையும் பார்த்து அழுதபடி ஓடிக்கொண்டே இருந்தோம். நடந்து மூச்சு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். என்னால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. எனவே என் பெற்றோர் என்னைப் பாதுகாக்கும் வழி தேடினார்கள். தேவிபுரம் காட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு என் சித்தப்பா என்னை மட்டும அழைத்துச் சென்றார்கள்.

அந்த வீட்டிலும் மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இங்கு ஓர் உறவினர் இருக்கிறார் என்ற எந்த அறிமுகமும் அதுநாள் வரை என் பெற்றோர் சொன்னதில்லை. காரணம், அவர்கள் எங்களது ரத்த சொந்தமோ மத்த சொந்தமோ இல்லை. ஈழச் சொந்தம் மட்டுமே.

அச்சொந்தம் யாரையும் ஏமாற்றாது என்பது எம் சித்தப்பாவின நம்பிக்கை. அதன்படி என்ன அவர்களது வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். நம்பிக்கை பொய்க்கவில்லை. தமது பிள்ளைகளில் ஒருத்தியாகவே என்னை பராமரித்து வந்தார்கள். நாள் கணக்கு இல்லை.... வாரக் கணக்கும் இல்லை....மாதக் கணக்கு. ஆம், நான் ஆறு மாதங்கள் அந்த வீட்டிலே இருந்தேன். வெளியார் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தேன்.

ஒரே கவலை. எங்கே போனார்கள் தாயும் தந்தையும் என் குடும்பத்தினரும். எந்த பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே... வேளாவேளைக்கு சாப்பிட்டார்களா.... ஓய்வாக உறங்கினார்களா ... அதற்கெல்லாம் தான் வாய்ப்பிருக்காதே... பிறகு என்ன ஆயிருக்கும்...? நாமாவது ஒரே இடத்தில் இருப்பதால் உண்ண உணவு, உறங்க வீடு இருக்கிறது. பதுங்கிக்கொள்ள பங்கர் இருக்கிறது. பெற்றோருக்கு....

என் பெற்றோர் காயத்துடன் எங்காவது ஆதரவின்றி கிடப்பார்களோ... ஒரு வேளை உணவும் இன்றி, தப்பிக்க வழியுமின்றி சிங்களவனின் குண்டு பாய்ந்து செத்துப் போயிருப்பாங்களோ...? நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சம் விம்மியது. குரல் கம்மியது. எப்படி தூங்கினேன். எப்பொழுது தூங்கினேன் என்பதெல்லாம் தெரியாது. ஒருவேளை அழுது வீங்கிய கண்களுக்கேது தெரியுமோ இல்லையோ!

எதிர்பார்த்திராத வேளையில் ஒருநாள் என் பெற்றோர் என்னைத் தேடி வந்தார்கள். இனியும் காலம் தாழ்த்தி என்ன செய்ய என நினைத்தவர்கள் என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். நாங்கள் அதுவரை இருந்த இடம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை காவு வாங்கிய சிங்களவனின் குரூரத்தை வெளிக்காட்டிய முள்ளிவாய்க்காலுக்கு அருகில் இருந்த இடம். அது 2009, மே 29 ஆம் தேதி நடந்தது. நாங்கள் பிப்ரவரி மாதம் அங்கிருந்து கிளம்பினோம்.

என்ன கையில் கிடைக்கிறதோ அதைக் கொண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதியாக கையில் அகப்பட்டதைக் கொண்டு சென்றோம். கடல் வழியாகப் பயணித்தோம். கரையிரங்கும் வரை கதிகலங்கிப் போயிருந்தோம். அதோ கரை தெரிகிறது. அந்த இடம் தான் பருத்தித் துறை என மெதுவாகப் பேசிக்கொண்டோம்.

ஏனென்றால் அது, கட்டுப்பாடு இல்லாத சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பருத்தித்துறையில் வந்து இறங்கினோம். துப்பாக்கியின் குரூர வாசத்தில் சுகம் காணும் வீரர்கள் இருவர் எங்களை வழி நடத்தினார்கள். இல்லை இல்லை “வலி”காட்டினார்கள்.

அவர்கள் குறித்திருந்த இடத்தில் நிறுத்தப்பட்டோம். சுற்றிலும் இராணுவ வீர்ர்கள் நின்றார்கள். வீடியோ கேமராக்கள் தயார் நிலையில் இருந்தன. எமக்கு விடுதலை அளித்து அதை வெளி உலகுக்கு அறிவிக்கப் போகிறானோ என நினைத்துக் கொண்டிருந்த போது, எல்லோரும் உங்கள் உடுப்புக்களை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நில்லுங்கள் என்ற மானங்கெட்ட குரல் இடியென இறங்கியது. நாங்கள் அதிர்ந்து போனோம்.

முகத்தில் கைபொத்தி விம்மி விம்மி அழுதோம். வெடி ஓசைக்குப் பழக்கப்பட்டவனின் காதில் விம்மல் புரியாமலே போனது. கறிக்கடைக்காரனிடம் ஜீவகாரூண்யம் பேசினது போல் இருந்தது.

எம்மைச் சுற்றி என் தந்தை நின்றார். என் தாய் நின்றார். எம்மோடு கடல் பயணத்தில் உயிர் மூச்சின் அனலோடு வந்த சகோதர சகோதரிகள் நின்றார்கள். அவமானமும் வெட்கமும் எல்லோரையும் ஆட்சி செலுத்தியது.

யாரும் யாரையும் காப்பாற்ற முடியாமல் நின்றோம். ஆறுதல் கூற முடியாமல் தவித்தோம். ஒரு வீட்டில் இறப்பு நடந்தால் ஊரே திரண்டு ஆறுதல் சொல்லும். ஊர் முழுவதும் இறப்பு என்றால் யார்தான் யாருக்காக அழ முடியும். அதே நிலையில்தான் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். ஆனால் வீடியோ கேமராக்கள் தயாராயின. காமப் பார்வையின் கண்கள் வழி காட்சிகள் கரைந்து விழுந்தன.

சில நாட்களுக்கு முன் யுவதி ஒருத்தி கருத்தாங்க வேண்டிய வயிற்றின் மீது வெடிகுண்டு சுமந்து வந்தாராம். தான் பிறந்த மகிழ்வின் அடையாளத்தை தாயின் வயிற்றின் மேல் கோட்டோவியமாய் தீட்டி மகிழ்வார்கள் பிள்ளைகள். ஆனால், அந்த ஓவிய மொழியைப் புரிந்து ஆனந்திக்கும் வாய்ப்பை புறந்தள்ளி ஈழத்தாயின் வயிற்றில் கோட்டோவியம் தீட்ட அந்த பெண் பிள்ளை வந்திருக்கிறாள். சிங்களவனின் சோதனையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறாள்.

எனவே, பருத்தித்துறைக்கு வந்திறங்கும் அனைவரையும் அவிழ்த்துப் பார்த்தார்கள். அதனைப் படமாக்கினார்கள். அவர்களது கெடுபிடிக்கும் கேமராவுக்கும் தப்பமுடியாததால், எல்லாம் முடிந்த பிறகு வெட்கத்துடன் எல்லோருடனும் நடந்தேன்.

“பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை” என்ற எம் தமிழினத் தலைவருடைய பெண்ணுரிமைச் செயல்பாட்டின் வைர வரிகளை நினைத்தபடி வந்தேன்.

யார் முகத்தையும் யாராலும் அதன் பிறகு பார்த்து பேசமுடியவில்லை. மனதில் இருந்த ரணம் முகத்திலும் தெரிந்தது.

இன்னும் வரும்...

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
ஈழநேசன்

No comments:

Post a Comment