Saturday, November 5, 2011

ஈழத்தில் ஆழம் அறிய முடியாத காலப் பெரு வேர்கள்!

இப்போது கார்த்திகை மாதம்!
கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி
எம் கண்ணீரில் வறண்டு போன
தேசத்திற்கு மழை பொழிந்து
காலப் பெரு வெளியில்
தமிழர் தம் வாழ்விற்காய்
கல்லறையுள் துயில் கொள்ளும்
ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை
நினைவு கூர்ந்து
குளிர்விக்கும் நன் நாள் இது!
அடிமைத்தளையுள் சிக்கி
தமிழன் உணர்வை தொலைத்து
வம்சம் தனை இழந்து
வாழ்வை பறி கொடுத்து
வந்தேறு குடி என சிங்களரால்
வழங்கப்படும் நாமத்தை பெற்று
வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து
உலகறியா இனமாக ஈழத் தமிழன்
உருமாறிச் சிதைந்திடுவான்
என இறுமாப்போடு
எமை அழிக்க வந்தோர்க்கு
தமிழர் தம் வீரம் உணர்த்தி
துயில் கொள்ளும்
குழந்தைகளை
நினைவு கூறும் நன் நாள் இது!

பேசும் தெய்வங்களும்
காவல் தெய்வங்களும்
எங்கே என அடி முடி தேடிய
தமிழர் தலை முறைக்கு
நும் அருகே இருக்கிறார்கள்
காவல் தெய்வங்கள்-
உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்
கல்லறையினுள் துயில்கிறார்கள்
என சேதி சொல்லி எமை நிமிர்ந்து
நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது!

வீழும் தமிழர் இனம்;
தமைக் காக்க வழி தெரியாது
தம் எதிர் கால வாழ்வை
தொலைத்து சாகும் தமிழர் இனம்
என இனவழிப்பு நடனம் ஆடிய
இனவாதப் பேய்களுக்கு
ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என
உணர்த்த ஒரு தானைத் தலைவனை
தந்ததும் இந்த மாதம் தான்!

கல்லறையை அழித்தோம்;
கருமமே கண் எனவாகி
தமிழர் தம் உணர்வுகளை
நீறாக்கி பொசுக்கி விட்டோம்;
போரில் பின்னடையை வைத்தோம்;
ஊரில் இருந்த உணர்வுள்ள
மனிதர்களையும் உருத் தெரியாதோர்
ஊடாக உருவம் அழித்தோம் - என
இறுமாப்பு கொண்டு நிற்கும்
இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு
மக்கள் தம் மனதில்
இன்றும் இவர்கள் இருக்கிறார்கள்
எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!
நீங்கள் வாழும் தெய்வங்கள்!
எம் வாசல் வந்த பகையை
அழித்து எமை காத்து நின்ற
நடமாடும் செல்வங்கள்!
கண் முன்னே தரிசித்தோம்!
பகை கண்டு அஞ்சற்க
எனச் சொல்லி நின்றவர்கள்!

என மண் முன்னே நிற்கையிலும்
மன்னவனின் மொழியினை
மனதில் நிறுத்தி
தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று
வேரென எம்மோடு தொடரும்
பெரு விருட்சங்கள் நீவிர்!

கார்த்திகைப் பூவும்
கதிரவன் ஒளியும்
பார்த்திருக்கப் புலியானோர்
சேதிகளும்
உம் பாதம் தொடர்ந்தனவே!
வார்த்தைகள் கொண்டு உமை
எப்படிப் பாடி
கவிப் பா ஆக்கிடலாம் என
எண்ணினாலும் தமிழில்
ஏதும் சிக்கலையே எம் தேவரீரே!

நும் நினைவுகள்
எம் மனக் கனவுகள்!
கல்லறையை அழித்தோம்
என கூப்பாடு போடுவோர்
மனக் கல்லறையை
திறந்து பார்க்கா
இனத்துவேச மனிதர்களுக்கு
இன்றும் மக்கள் மனங்களில்
வாழ்கிறோம் யாம் என
சேதி உரைத்து நிற்கிறீர்களே!
உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்
எனும் உணர்வோடு
நாமும் நடக்கிறோம்!
**********************************************************************************************************

No comments:

Post a Comment