Monday, August 17, 2009

கட்டுரை
தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு மேற்கொள்ளும் சதி முயற்சிக்கு, சர்வதேசம் ஆதரவு; தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு: பருத்தியன்
[ திங்கட்கிழமை, 17 ஓகஸ்ட் 2009, 08:23.38 AM GMT +05:30 ]
ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதை விட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப் பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது.

இவை தற்செயலாகவோ அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த கே.பி அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவமும் மிகத்தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.

கடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்து விட்டிருக்கின்றது. இவ்வளவு இழப்புக்களின் பின்னரும் தமது பொறுமையினை கடைப்பிடித்துவரும் தமிழர் தரப்பின் நியாயப்பாட்டினை சர்வதேசம் உணர்ந்துகொள்ளத் தவறி வருகின்றது.

ஆயுதங்களை கைவிட்டு அரசியல் இராஐதந்திர ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க முனைந்த தமிழினத்தின் தலைமையை அழித்தொழிப்பதற்கு சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதி முயற்சிகளுக்கு சர்வதேசம் வழங்கிய, வழங்கிவரும் ஆதரவுகளையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தியும், மிகுந்த கோபமும் அடைந்திருக்கின்றனர்.

சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் மிகத் தெளிவு பெற்றிருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஏனெனில், அவ்விடயத்தினை அவர்கள் தந்திரமாக கையாளும் முறைலிருந்து அவர்களின் தெளிவுத்தன்மையை புரிந்துகொள்ள முடிகின்றது.

இலங்கை இனப்பிரச்சனையில் தமிழர்களின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டுள்ள போதிலும், தத்தமது நாடுகள் சார்ந்த, தனிப்பட்ட செயற்பாடுகள் சார்ந்த, பிராந்திய வல்லாதிக்கம், பழிவாங்கல் நடவடிக்கைகள்,வர்த்தகப் போட்டிகள், கொள்கை வகுப்புகள் என பெயர் குறிப்பிடப்படும் சுயநல நோக்கங்களை முன்னிட்டு அவர்களின் எதிர்மறையான முன்னகர்வுகள் அமைகின்றன.

சிங்கள அரசும் அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தினைக் கையாண்டு வருகின்றது. ஆனால் இவையெல்லாம் சிங்கள அரசின் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் ஒரு இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்த சர்வதேசம் உணராமல் இருப்பதானது, இந்த உலகத்தில் "மனிதநேயம்" என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு தமிழனையும் கொண்டு செல்கின்றது.

இவ்வாறான நிலை தொடருமானால் அதன் விளைவுகளாக தமிழர்களின் பொறுமை சீர்குலைக்கப்படுவதுடன், அரசியல் ரீதியான அகிம்சைவழிப் போராட்டம் மீதுள்ள நம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிடும் என்பதுவே எதிர்கால யதார்த்தம். இழப்புக்களும், துரோகங்களும் தமிழினத்திற்கு புதியதொன்றுமில்லை. தியாகங்களினூடு வளர்ந்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் இவ்வாறான இழப்புக்கள், துரோகங்களைக் கண்டு துவண்டுவிடப் போவதுமில்லை. ஆயினும், சர்வதேசத்தின் இவ்வாறான எதேச்சைத்தனமான போக்கிற்கும், சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதிவேலைகள் மற்றும் விஷமப் பிரச்சாரங்களிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் தமிழர்கள் முன் காத்திருக்கின்றது.

இது எவ்வாறு சாத்தியப்படும்?

01] சுயநலங்களைத் துறந்து, கருத்து வேற்றுமைகளை மறந்து உலகம் பூராவுமுள்ள தமிழர்கள் அனைவரும் "நாம் தமிழர்" என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்றிணையவேண்டும்.

02] விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டும்,நெறிப்படுத்தும் தலைமையை, கே.பி அவர்களின் கைதிலிருந்து பெற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறான ஒரு தவறு மீண்டும் நிகழ்ந்து விடாதபடி மிகவும் செயற்திறன் மிக்கதாகவும் அனைத்து மக்களினதும் ஏகோபித்த ஆதரவு பெற்றதானதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

03] "எமது விடுதலைப் போராட்ட உணர்வினை எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்பதனை சர்வதேசத்திற்கு தெட்டத் தெளிவாக வலியுறுத்தி உணர்த்தவேண்டும். அதற்கான வழிமுறைகளாக எமது எதிர்கால போராட்டங்கள் காத்திரமானதாகவும் காட்டமானதாகவும் அமையவேண்டும்.

04] இலங்கை அரசின் சதிவேலைகளை முறியடிக்கும் வகையிலான கட்டமைப்புக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கப்படல் வேண்டும்.

05] உலகம் பூராவுமுள்ள வேற்றினத்து ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் இயன்றவரைக்கும் எதிர்கால போராட்டங்களில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுவதுடன் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தவும் தமிழர்களின் நிலைப்பாடுகள் குறித்த கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவும் வேண்டும்.

06] தமிழ் ஊடகங்களின் பங்களிப்புகள் முற்றுமுழுவதுமாக பெறப்படுவதுடன் இயன்றளவுக்கு வேற்றுமொழி ஊடகங்களின் ஆதரவையும்,பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவற்றின் மூலம் தமிழர்களின் அவலங்களும், போராட்டத்தின் நியாயப்பாடுகளும் சர்வதேசத்திற்கு வெளிக்கொணரப்படல் வேண்டும்.

07] தமிழர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே தம்மால் இயன்ற பங்களிப்பினை ஏதாவது வகையிலேனும் செய்வதற்கு முன்வர வேண்டும். ஒதுங்கி நிற்கும் மனப்பான்மையைக் களைந்து நானும் ஒரு "விடுதலைப் போராளி" என்ற போராட்ட உணர்வுடன் இனவிடுதலைக்காக உழைக்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும். இவ்வாறான காத்திரமான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிங்கள அரசினதும், சர்வதேசத்தினதும் எதேச்சைத்தனமான நடவடிக்கைகளையும், சிங்கள அரசின் எல்லைகடந்த அத்துமீறல்களையும்,சதிவேலைகளையும் முறியடிக்கலாம்.

தற்போது தமிழர்களின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையான விடயமே. ஆனால், ஏன் பின்னடைவைச் சந்தித்தது? அதற்கான காரணங்கள் எவை? என ஆராய்ந்து பார்ப்போமானால், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளும், சர்வதேச நாடுகள் பலவற்றின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நேரடியான மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளும் பின்னடைவுக்கான காரணங்களில் முக்கிய பங்கு வகிப்பதனை தெரிந்துகொள்ள முடியும்.

போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பெரும் தடைக்கற்களாக இவையே இருந்து வந்துள்ளன. இன்றும் இவையே பெரும் தடையாக இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவம், அடைபட்டுக் கிடக்கும் வன்னி மக்களின் அவலம் என அனைத்தினையும் மூடி மறைத்து, இப்போது கே.பி அவர்களின் கைது மூலம் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தினை நசுக்கும் சதி முயற்சியையும் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது சிங்கள அரசு.
இவற்றை சர்வதேசம் கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. சர்வதேசத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் அனைத்துலக நாடுகள் மீதிருந்த நம்பிக்கையை முற்றாக இழந்த நிலையில் கடுஞ்சினத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர் தமிழர்கள். பொறுமையின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழினம் தனது போராட்ட வழிமுறையினை மாற்றியமைக்க முற்படலாம். கே.பி அவர்களின் கைதின் பிற்பாடு அம்மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளன. இனி அமையப்போகும் தமிழர் தலைமையும், தமிழர்களின் பொறுமையின் எல்லையும்தான் எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் போராட்ட வடிவங்களை நிர்ணயிக்கப் போகின்றன.
ஆனாலும் சில சமயங்களில் பொறுமையாக பொறுத்திருப்பது, எதிர்காலத்தில் சாதகமான அல்லது பாதகமான விளைவுகளைத் தரலாம். ஆகவே, உலக நியதி மாற்றங்களை அவதானித்து தமிழர் பிரச்சனையில் இரு வேறுபட்ட கோட்பாடுகளுடன் மாறிவரும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் நகர்வுகளை கருத்தில் கொண்டு தமிழர்களினது போராட்ட நகர்வுகளும் அமைவது அவசியமாகின்றது.

தமிழர் விடயத்தில் ஓரளவு ஆதரவுக் கொள்கையினை கடைப்பிடித்து வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா,கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் நடுநிலைமையில் நிற்கும் நாடுகளையும் நமது பக்கம் மாற்றி அவற்றின் முற்றுமுழுதான ஆதரவினைப் பெறுவதும், எதிராக செயற்படும் நாடுகளின் எதிரான நிலைப்பாட்டை மாற்றி அவர்களினதும் ஆதரவினை பெற்றுக் கொள்ளுவதும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்ட முன்னகர்வுகளின் குறியாக அமைதல் வேண்டும்.

தமிழர்களின் பொறுமையென்பது அவர்களது பொறுமைக்கும், இராஐதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சைவழிப் போராட்டத்திற்கும் மதிப்பளித்து அவர்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியதுமாக சர்வதேசம் எவ்வாறு செயற்படும்? என்ற விடயத்திலேயே தங்கியுள்ளது. மாறாக அவர்கள் காக்கும் பொறுமையை அவர்களின் பலவீனம் எனக் கருதி அவர்களின் போராட்டங்களை மேலும் நசுக்க சிங்களமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து சர்வதேசமும் முயலுமானால் அதன் விளைவுகளை சிங்களத்தோடு சேர்ந்து சர்வதேசமும் அனுபவிக்க நேரிடும்.

இனிமேல் அமையப்போகும் தமிழர் தலைமையைப் பொறுத்தவரையில்..அவர்கள் தமிழர்களை நெறிப்படுத்துபவர்களாகவும், ஒருங்கிணைப்பவர்களாகவும், போராட்டத்தினை நமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய வழிநடத்துபவர்களாகவும் மாத்திரமே அமையவேண்டும் என்பது பெரும்பாலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
ஏனெனில், ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் தமது "தலைவர்" என்ற உன்னத ஸ்தானத்தினை தேசியத் தலைவர் அதிமேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள். எப்பொழுதுமே ஈழத்தமிழினத்தின் தலைவர் அவர்தான் என்ற அனைத்துத் தமிழர்களின் விருப்பத்தினையும் மதித்து தமது போராட்டத்தினை முன்னெடுக்க இனிவரும் தலைமையை ஏற்பவர்கள் முன்வருவார்களானால் உலகத்தமிழர்கள் அனைவரினதும் பூரண ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.
இதன்மூலம் நமது தாயக விடுதலைப் போராட்டப் பாதையில் கருத்து வேற்றுமைகளின்றி ஓரணியாக உறுதியுடன் பயணிக்க முடியும். எதிரிகளின் சவால்களை முறியடிக்கவும் இயலும். சிங்களம் அப்பாவித் தமிழர்கள் மீதான தனது அடக்குமுறைகளை அடக்கும் வரைக்கும், சர்வதேசம் தனது இரட்டை வேடத்தினைக் கலைத்து ஈழத் தமிழர்களுக்கான நீதியினை கொடுக்கும் வரைக்கும் தாயக விடுதலைக்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை எவ்வகையிலும் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது.

தமிழர்களின் போராட்டம் உருவானதற்கான அடிப்படைக் காரணங்களையும் , அவர்களது நியாயத்தன்மையையும் புரிந்துகொண்டு தமிழருக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் இறுதியாக வன்னி அவலம் வரைக்கும் ஏற்பட்ட துயர வடுக்களோடு சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை தமிழருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் "தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

- பருத்தியன்

No comments:

Post a Comment