கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்
கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது.
கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.
எவ்வாறு கைது நடந்தது:
கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை சிறிலங்கா அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது.
கைது செய்தது யார் ?
ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?
மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்மை
ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று சிறிலங்கா அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக சிறிலங்கா இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை சிறிலங்காவுக்கு அழைத்துவர ஏற்றது என சிறிலங்கா அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் சிறிலங்கா கொண்டு சென்றனர்.
சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. சிறிலங்காவுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்காவுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.
இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:
சிறிலங்கா இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் சிறிலங்கா அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.
எது எவ்வாறு இருப்பினும் கே.பியை சிறிலங்கா நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த சிறிலங்கா அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment