Monday, August 17, 2009

தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் கொடுக்க மாட்டார்
சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன?

'இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட 14 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதால் பல பத்திரிகையாளர்கள் தொழிலை விட்டே ஓடிவிட்டார்கள். சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்குமென யாருக்கும் தெரியாது.'
கடைசிக் கட்ட சண்டையில் சிங்கள இராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி போர் விதிமுறைகளை மீறியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே?
'உண்மைதான். இரண்டு தரப்புமே பல மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசக்கூடாது என்பது சர்வதேச போர் நெறிமுறை. ஆனால், சிங்கள இராணுவம் வவுனியா மருத்துவமனையில் குண்டுகளை வீசியிருப்பதை நான் அங்கு சென்றபோது கண்கூடாகவே பார்த்தேன். அதுவும் முள்ளிவாய்க்காலில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இறுதிக்கட்டப் போரில் இரண்டாயிரம் பேர் பலியாகியிருப்பார்கள் என்று அரசு சொன்னாலும் கூட உண்மையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். சில சிங்கள இராணுவ அதிகாரிகளிடம் பேசினே் 'சுமார் 35 இராணுவ வீரர்கள் ஊனமுற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அனுராதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய இராணுவ மருத்துவமனைகளில் தங்க வைத்திருக்கிறார்கள்' என்று கூறினார்கள். ஆனால், அவர்களையும் யாரும் சந்திக்க முடியாது. உண்மைகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம்தான் காரணம்.'

போர் முடிந்துவிட்ட நிலையிலும் வவுனியா மக்களை முகாமிலேயே அரசு தங்க வைத்திருக்கிறதே, அங்கு வசதிகள் எப்படி? மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?

சற்று சிந்தித்தவர், 'பாவம் தமிழர்கள்' என்று சோகத்தோடு கூறிவிட்டுத்தான் தொடர்ந்தார். 'சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மெஜாரிட்டி பேர் கிரிமினல்களோ, போர்க்குற்றவாளிகளோ அல்ல. அப்பாவிகள். விசாரித்துவிட்டு அவர்களை ஊருக்கு அனுப்பிவிடவேண்டியதுதானே. ஆனால், அந்த முகாம்களுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. முகாம்களின் நிலைமையும் படு மோசம். ஆயிரம் பேருக்கு ஒரு மலசலகூடம்தான். அது போதாது என்று எங்களைப் போன்றவர்கள் சொன்னதால் எண்ணூறு பேருக்கு ஒரு மலசலகூடம் என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு குடிக்கக் கூட சொற்ப தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. குளிப்பது என்றால் முறை வைத்துத்தான் குளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றால் அப்பா இன்றைக்குக் குளித்தால், அம்மா மூன்று நாட்களுக்குப் பிறகே குளிக்க முடியும். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் பவுடர் கிடையாது. இப்போதே இந்த நிலைமை என்றால், விரைவில் பருவ மழை தொடங்கி விடும். முகாம்களுக்குள் மழைநீர் பெருக்கெடுக்கும்போது மக்களால் தங்க முடியாது. மழை பெய்கிறதே என்று எழுந்து ஓடினால் இராணுவம் சுட்டுவிடும் என்ற நிலைதான் என்கிறார்கள். நான் முகாம்களுக்குச் செல்லவில்லையென்றாலும் மருத்துவமனைக்குப் போனேன். அங்கிருந்தவர்களின் நிலைமை மிகவும் பரிதாபம். அங்குள்ள ஒரு தாயின் சோகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இராணுவம் குண்டு போட்டபோது தப்பிப்பதற்காக குடும்பத்தோடு ஓடியிருக்கிறார்கள். அப்போது ஒரு குண்டு வெடித்ததில் அந்த கர்ப்பிணித் தாயின் இடுப்புக்கு கீழ் சிதைந்து விட்டது. அப்போது அவர் மேல் பிணமாக விழுந்திருக்கிறாள், அவரது பத்து வயது மகள். அதன்பிறகே அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதை வளர்க்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை. தற்போது முகாம்களில் இருந்த மூவாயிரம் முதியவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால் இளைஞர்களின் கதி அதோகதிதான். தீவிரவாதிகள் என்று இன்னொரு குரூப் (கருணா கோஷ்டி) அடையாளம் காட்டும் பட்சத்தில் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆக, பாவம் தமிழர்கள்.''

இந்த அவலத்தை மாற்ற முடியாதா?

'முடியும். அதுவும் வெளிநாடுகளிலிருந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தமிழர்களின் அவலம் மாறும். குறிப்பாக, இந்தியாவின் அழுத்தம் மட்டுமே நல்ல பலனைக் கொடுக்கும். அதிபர் ராஜபக்ச எனது நண்பர். அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். அவர் அதிபர் ஆவதற்கு முன்பு ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இருவரும் சேர்ந்துதான் கலந்து கொண்டோம். அவர் வேண்டுமானால் தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பார். உரிமைகள் கொடுக்க மாட்டார். தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்போவதாக அவர் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது. எள்முனையளவு உரிமைகளைக் கூட அவர் தமிழர்களுக்குக் கொடுக்க மாட்டார். இப்படிச் சொல்வதன் மூலம் நானும் டார்கெட் பண்ணப்படலாம். இந்தியாவும், தமிழ்நாடும் 500 கோடி ரூபாய் நிதி, பலாலி விமான நிலையம் புதுப்பிப்பு என்பதெல்லாம் சரிதான். அதே சமயத்தில் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்குமே சொந்த வீடு இருக்கிறது. மீனவர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களில் யாருமே பிச்சைக்காரர்கள் அல்ல, வசதியாக வாழ்ந்தவர்கள். அவர்களையெல்லாம் 180 நாட்களுக்குள் சொந்த வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று ராஜபக்ச சொன்னார். ஆனால், அதற்கான அறிகுறிகளே இல்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டு அழுத்தம் கொடுத்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது.''

பிரபாகரனின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

'சிங்கள இராணுவ அதிகாரிகளிடம் நான் பேசிய வரையில் அவர் இறந்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். ஆனால் எப்படி இறந்தார் என்று இராணுவம் வௌ;வேறு கருத்துக்களைச் சொல்லிக் குழப்புகிறது. தவிர, டி.வி.யில் யூனிஃபார்ம், அடையாள அட்டை சகிதம் காட்டியது அவரது உடல் அல்ல என்பதே பெரும்பாலான தமிழ் மற்றும் சிங்கள மக்களின் கருத்து. தமிழர்கள் அதிலும் குறிப்பாக, வயதானவர்கள் டி.வி.யில் அவரது உடலைக் காட்டும்போது பார்க்க கஷ்டப்பட்டு கண்ணீருடன் தலை குனிந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு 'வோர் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள 'மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் 'அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல' என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்.'

இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

'ராஜிவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசின் 13 ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்துவதே தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. அதாவது வடகிழக்குப் பகுதிகளில் பிராந்திய அரசு அமைக்கப்பட வேண்டுமென்பதே அச்சட்டப் பிரிவு. இதை ஜே.வி.பி, புத்த பிக்குகள் தவிர இலங்கையிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர்களின் தாய்நாடும் இதுவே. அவர்களும் மண்ணின் மைந்தர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டு அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும். இந்தியாவும், கருணாநிதியும் தமிழ் மக்கள் படும் பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தியா அளப்பரிய ஆதரவு கொடுத்து ராஜபக்சவை ஜனநாயகவாதியாக ஆக்க வேண்டுமே தவிர, சர்வாதிகாரியாக மாற்றி விடக்கூடாது.'

காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்டதால்தான் தனித் தமிழ் ஈழக் கோரிக்கை வந்தது. இனிமேல் அது சாத்தியமா?

'முதலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதோடு நின்று விடாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். ஈழப்பிரச்னைக்கு இலங்கையில் கூட்டாட்சி அமைவதே சரியான தீர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன்.'

புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்க முடியுமா?

'முதலில் சொந்த வீடுகளில் மக்கள் வாழத்தொடங்கட்டும். மக்களிலிருந்துதானே தலைவர்கள் வரமுடியும். எப்போது தேர்தல் நடந்தாலும் விடுதலைப் புலிகள் மக்களை மிரட்டுகிறார்கள் என்று ஆட்சியாளர்கள் சொல்லி வந்தார்கள். இப்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட நிலையிலும் வவுனியாவை அவர்களின் ஆதரவுக் கட்சிதானே கைப்பற்றியிருக்கிறது.'

தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நடப்பதாகச் சொல்கிறார்களே?

'இது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சிறுபான்மை சமுதாயத்தின் அடையாளம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்கும் முயற்சி இது. இதெல்லாம் சாத்தியமானால் எங்களைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் வேலை செய்யவே முடியாது
.

No comments:

Post a Comment