காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது
தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இன அழிப்பின் கோரத்தாண்டவம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் போர் 4 தொலைக்காட்சி நிறுவனம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானியா தொலைக்காட்சி துணிச்சலாக உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இந்த நவீன உலகில் காண்பவர்கள் கண்கலங்கி போகும் அளவிற்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் தமிழ் இளைஞர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளது.
இந்த படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்களே பெருமளவில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது.
தொழில்நுட்ப வசதிகள் குறைந்த முன்னைய காலங்களில் உலகில் நடைபெற்ற படுகொலைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினமானது. ஆனாலும் கூட ஆதாரங்களை தேடி கண்டறிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்த இந்த ஜனநாயக உலகம் மிருகங்களை போல வெட்ட வெளிகளுக்குள் இழுத்து வரப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பல ஆதராங்கள் கிடைத்துள்ள நிலையில் இந்த உலகம் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது?
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் துணிச்சலாக வெளியிட்டு வரும் நிலையில் ஐ.நாவையும், மனித உரிமைகள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ள மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் நோக்கி நாம் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சிங்கள இனவெறியர்களின் இந்த கோரத்தாண்டவத்தையும், ஆதரவற்ற நிலையில் அனாதரவாக செத்துவிழும் தமிழ் மக்களின் தலைவிதியையும் வெளிக்கொண்டுவந்துள்ள இந்த காணொளி படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக எமது இளம்தலைமுறை இதை பார்த்தல் அவசியமாகின்றது
மேலும் தாய்த் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதனை பார்க்கவேண்டும். முடிந்தால் உலகத்தின் அத்தனை மனித குலங்களும் இதனை பார்க்கவேண்டும் அதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள நிலையில் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து போட முடியாத நிலையில், அத்தோடு திட்டமிட்டு இலங்கைத்தமிழ் மக்களின் செய்திகளை புறக்கணித்து வரும் நிலையில் மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேரவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவருவது மிகவும் போற்றத்தக்கது.
தமிழக தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி எம்மை ஒரு மயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் எமக்காக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகில் பரந்து வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒன்று திரண்டு போராடுவதற்கு தேவையான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை எம்மிடம் தான் உண்டு.
தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலமும், அவர்களை ஐ.நா சபைக்கு அழைத்து செல்வதன் மூலமும் அவர்களின் மீதுள்ள குருதிக்கறைகளை சிறீலங்கா அரசு கழுவ முற்படுகின்றது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசினை நிறுத்த வேண்டிய கடமையும், அதற்கான பலமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.
ஆனால் காலத்தை நாம் தவறவிட்டால் வரலாறும் எம்மை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.
"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை"
No comments:
Post a Comment