Wednesday, September 23, 2009

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 01 வான் படை கண்ட முதல் தமிழன்


முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று போராடிய போராளியின் அனுபவப் பதிவு இது. பாதுகாப்பான தளம் ஒன்றை இவர் சென்றடையும் வரை இவரது விபரங்களை தவிர்த்துக்கொள்கின்றோம்.

2005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.

மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய செயற்பாடுகளிலும் சிறீலங்காப் படையினர் இறங்கியிருந்தனர்.

சிறீலங்காவின் இந்தப் போரை எதிர்கொள்ள, தமிழீழத் தேசியத் தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அதில் வான் புலிகளின் தாக்குதல்கள் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்தபோதும், அதற்கான எந்தவொரு தடயமோ, ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை.

1998ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழீழ வான் படையினர் மலர்தூவி தமது முதல் பறப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் வான் புலிகளின் பறப்பு 2005 காலப் பகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது. வன்னி வான் பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. தமிழீழத் தேசியத் தலைவரை சுமந்து கொண்டு தமிழீழ வான் படை வன்னியின் வான் பரப்பில் வட்டமடித்தது.

இந்த பறப்புச் செய்திகள் கூட விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. மாவிலாற்றில் மகிந்த அரசு போரைத் தொடங்கி, கிழக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தபோதும், வன்னியில் பெரும் தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால், வன்னிப் பகுதியில் ஆள ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இதனால் பொது மக்கள் மட்டுமல்ல போராளிகளும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் 05.01.2008 சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் சிறீலங்கா ஆள ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலைப் புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. காரணம் சாள்ஸ், பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வுத் தாக்குதல் தளபதி. பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அப்போது விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இருந்தது.

விடுதலைப் புலிகளின் பல கரும்புலித் தாக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்கா வான் படைத் தளம் மீதான தாக்குதல்கள் வரை எந்த நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும். தென்னிலங்கையில் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தமுடியுமா என்ற சந்தேகங்கள் ஒருகாலத்தில் எழுந்தபோது, முடியும் என்று பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் கேணல் சாள்ஸ். ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகின்ற அளவிற்கு பொட்டு அம்மானுக்கு அடுத்து சாள்ஸ் அவர்கள் தான் இருந்தார்.

சிறீலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கைப் பிரதேசம் எங்கும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் என்றால் சாள்ஸ் அவர்கள்தான் முக்கிய காரணம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயற்பட்டனர். சிறீலங்காவின் தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் பிரதேசத்தில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுத்ததற்கு காரணமும் இருந்தது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேம் எங்கிலும் செல்பேசிக்கான ‘கவறேச்' உள்ளது. அத்துடன் ‘டயலொக், சீடிஎம்ஏ., றண்கத்தா, மோட்டரோளா' என்பனவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ‘சிக்னல்'கூட சிலவேளைகளில் கிடைக்கும் எனும் அளவிற்கு பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கவறேச் அங்கு தொடர்ச்சியாக இருந்தது. இது சாள்சின் நடவடிக்கைக்கு மிகவும் இலகுவாக இருந்தது.

அத்துடன், தென்னிலங்கைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதற்கு சென்று வர மன்னார் கடல் பகுதியும், கரையை ஒட்டிய காட்டுபகுதியும் இலகுவாக இருந்தது. கடல்வழியாக புத்தளம் சிலாபத்துறைக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தலைநகருக்கும் தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் நகர்த்துவது இலகுவானதாக இருந்தது. இதனால், மன்னாரே பின்னர் சாள்சின் தளப் பிரதேசமாக மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அப்பாதை படையினரின் முற்றுகைக்குள்ளானதால் மன்னாரின் கட்டையடம்பன், மடு போன்ற பகுதிகள் ஊடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனுாடாக தாக்குதலுக்கான போராளிகளும், வெடிபொருட்களும் நகர்த்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தலைவர் அவர்களுடன் அந்த வான் பறப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்துகொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதைக் கேட்டாலேயே, விடுதலைப் போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். "சாள்ஸ் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலைத் தளபதியாக செயற்பட்டவர்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல, தென்னிலங்கையிலும் உலக நாடுகள் எங்கும் இயக்கிக்கொண்டிருப்பது அமைப்பின் சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பினால்தான். அதற்கு முக்கிய காரணமானவர்களில் சாள்சும் ஒருவர். சிலவேளைகளில் தாக்குதல் நடத்தபோகும் கரும்புலிகளுக்கு கூட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது. கரும்புலிகளுக்கான திட்டத்தினை வேறு தளபதிகள்தான் வழிநடத்துவார்கள். இதனால், சாள்ஸ் பற்றி சாதாரண போராளிகளுக்கு கூட பெரிதாக தெரிந்திருந்ததில்லை.

இவ்வாறான செயற்பாட்டாளன் சாள்ஸ் அவர்களின் கால் படாத இடம் இலங்கையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். மட்டக்களப்பில் நின்றுகூட தனது தென்பகுதி நடவடிக்கையினை மேற்கொண்டவர். விடுதலைப் புலிகளின் கெரில்லா பாணியிலான நடவடிக்கைகள், மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும். இதனால்தான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறையின் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக அவரால் உயரமுடிந்தது.

அன்று, எமது விமானத் தளத்திற்கு தளபதிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போது அங்குதலைவர் அவர்களும் நின்றிருந்தார். அதில் நானும் கலந்துகொண்டேன். எமது இயக்கத்தின் முதன்மைத் தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானப் படையினை அறிமுகம் செய்து வைக்கின்றார். இதில் விமானப்படைப் பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் நான்கு, நான்கு பேராக விமானத்தில் பறப்பில் ஈடுபட்டார்கள். எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமானத் தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறமையினையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார். அதன்பின்புதான் தளபதிகள் அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள். இரண்டு விமானங்கள் மாறிமாறி பறப்பில் ஈடுபட்டன. அப்போது தலைவர் அவர்களும் விமானம் ஒன்றில் பறப்பதற்காக ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும்போது அவரது பாதுகாப்பிற்காக நானும் அதில் ஏறமுற்பட்டேன். அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள், "பொட்டு நான் தனியப் போறன். பிறகு நீ போ. நான் போனால், நீ பார்" என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான் பரப்பில் வட்டமிட்டுவிட்டு கீழிறங்கினார்.

அப்போது அங்கு நின்றவர்களுக்கும் தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது. அதாவது விமானத்தில் தான் போகும்போது எதாவது நடந்தால், இயக்கத்தை நீ பார் என்றுதான் அர்த்தம். அதன் பின்தான் நான் பறப்பதற்கு சென்றேன். அப்போது தளபதி சாள்ஸ்சும் நான் ஏறிய விமானத்தில் எனது பாதுகாப்பிற்காக ஏறினான். அப்போது தலைவர் அவர்கள் சாள்சை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார். "உவங்கட ஓட்ட விமானங்களை நம்பி எல்லாரும் ஒண்டாய் பறக்கேலாது. முதல்ல அம்மான் போகட்டும். பிறகு நீ போ. ஏனெண்டால் அம்மான் இல்லாட்டிக்கு நீதான் புலனாய்வுத்துறையை கொண்டு நடத்த கூடியவன்" என்று கூறினார்.

அந்தளவிற்கு சாள்ஸ் திறமையானவாக இருந்தான். அதன்பின்பு பல தளதிகள் விமானத்தில் ஏறி பறப்பில் ஈடுபட்டார்கள்" என்றார். இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்ந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் 2007 மார்ச் 26ம் திகதியே தமிழீழ வான்படை கட்டுநாயக்கா மீது தனது முதற் தாக்குதலை நடத்தி உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.

தமிழின வரலாற்றில் முதல் வான்படையை அமைத்த தலைவன் எனும் பெருமையும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு கிடைத்தது. இந்தத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலைப் புலிகள், வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்றிருந்தனர். ஆனால், இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து, செயலிழந்து போனார்கள்..?
(தொடரும்...)
நன்றி: ஈழமுரசு


No comments:

Post a Comment