Monday, September 21, 2009

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முதலாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத் தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம் வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது.

மூன்றாவது 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாடு பெரும் சோகமாக நிறைவுற்றது. தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றை சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இறுதிநாள் நிகழ்வில் திட்டம்போட்டு உள்நுழைந்த காவல்த்துறையினர் கணணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடதத்தியும் கலகம் விளைவித்ததால் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததாலும் 9 தமிழர்கள் பலியானார்கள். அந்த அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த வேளை, 1981-ம் ஆண்டு 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989 இல் மொரிசியசிலும் நடைபெற்றது. அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 1995-ம் ஆண்டில் அப்போது தமிழக முதல்வராகப் பதவி வகித்த செல்வி ஜெயலலிதா அவர்களால் தஞ்சாவூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ளச் சென்ற தமிழீழ அறிஞர்கள் வெல்வி ஜெயலலிதா அவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' என்ற பதம் மாற்றம் செய்யப்பட்டு, 'உலகத் தமிழ் மாநாடு' என்ற நாமத்துடன் அரங்கேற்றப்பட உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட்டிருக்க வேண்டிய இந்த மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தை ஆண்ட 14 வருட காலத்தில் முதல் தடவையாக உலகத் தமிழர் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. கலைஞர் அவர்களது தமிழ்ப் பற்றுக்கு இதுவும் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்படவுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்குச் செய்ததை விட அதிகமாகவே தமிழ் அவருக்குச் செய்துள்ளது.

வெறும் தகரப் பெட்டியுடன் திருக்குவளையிலிருந்து சென்னை வந்த கருணாநிதி அவர்களுக்கு தமிழ் சோறு போட்டது. தமிழ் அரசியலைக் கற்றுக் கொடுத்தது. தமிழ் அவரைக் கோடீஸ்வரனாக உயர்த்தியது. தமிழ் அவரை தமிழக முதல்வராக 14 வருடங்கள் பதவியில் அமர்த்தியுள்ளது. தமிழ் வேறொருவருக்கும் இந்த அளவுக்கு வாரி வழங்கியதும் இல்லை வாரி வழங்கப் போவதும் இல்லை.

'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக இருக்கவேண்டும்' என்ற அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர் உயர்ந்துவிட்டார். 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்று கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது.

தமிழர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள் மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற அவாவினால், இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது, ஆனால், ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை. அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைக்கத்தான் போகின்றது. மூன்று வேளையும் உண்டு வசதியாக வாழ்ந்த மக்கள், சிங்கள தேசத்திடம் அடிபணிய மறுத்து முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து, அதற்கும் அப்பால் செய்வது எதுவென்று தெரியாமல், ஒருவாய் தண்ணீருக்கும் வழியில்லாமல் ஏங்கித் தவித்தபோது, அப்போதும் தத்துவம் பேசத் தமிழ்தான் கலைஞரின் நாவில் நின்றது.

தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே அரைநாள் உண்ணாவிரதம் இருந்தபோது, அதையும் மந்தைகள் போல் தமிழக மக்களைத் தலையாட்ட வைத்ததும் அதே தமிழ்தான். தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பமாக கவைஞரை உருவாக்கி, அரசியலில் அந்தக் குடும்பமே உச்ச நிலைக்குச் செல்ல, இன்னமும் மேலே செல்ல உறுதுணையாக இருக்கும் தமிழுக்கு கலைஞர் விழா எடுப்பது மிகப் பொருத்தமானதே.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது முதல், அதன் நிமித்தம் உயிர்களையும் பலி கொடுத்த ஈழத் தமிழினம் இத்தனை கொடுமைகளை அனுபவிக்கும் இன்னைய காலத்தில், ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்டு, எஞ்சியவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக சிறை முகாம்களில் சிக்கித் தவிக்கும்போது போலியாக ஆவது கலைஞர் கவலை கொண்டிருந்தால் உலகத் தமிழினம் தமது சினத்தைக் குறைத்திருக்கும்.

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஈழத் தமிழர்களின் அவலங்ங்கள் தொடர்வதால் உலகம் சிறிலங்காமீது கோபப் பார்வை பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில் கொள்முதல் செய்யவே கலைஞர் 'உலகத் தமிழ் மாநாடு' ஏற்பாட்டைச் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகின்றது.

இப்போது கலைஞரது தலைக்குப்பின்னால் பிரகாசித்த ஒளி வட்டம் மங்கி வருவது நன்றாகவே தெரிகின்றது. அதை மீண்டும் துலக்குவதற்கு கலைஞர் முயற்சிக்கிறார். தமிழகத்து முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழாலும், பணத்தாலும், சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் அப்பாவிப் பாமர தமிழகத்து மக்களுக்குத் தன்னை பரமாத்மாவாகக் காட்டிக் கொள்ளலாம். நடந்து முடிந்த, நடக்கின்ற அத்தனையையும் பகுத்தறிவோடு பார்த்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழினம் அவரின் மகுடிக்கு மயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட உள்ள 'உலகத் தமிழ் மாநாடு' மிகக் கொடுமையான ஈனச் செயல் என உலகத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். சினம் கொள்கிறார்கள்.

தமிழுக்கு அரியாசனம் பெற்றுக் கொடுக்கவும், உலகத் தமிழினத்திற்கு ஒரு நாடு உருவாக்கவும் களத்தில் நின்று போராடி பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்குப் பக்கபலமாக நின்று, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இந்த விடுதலைத் தீ அணைந்து போகாமல் தடுக்கவும், விடுதலை அவா கொண்ட அந்த மக்களைக் காப்பாற்றவும் முத்துக்குமார் தொடக்கம் பல தமிழர்கள் தம்மைத் தீக்கு இரையாக்கித் தீபங்களாக மாறியுள்ளார்கள்.

அத்தனை நடந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் பச்சைத் துரோகம் செய்த தமிழக முதல்வர் அவர்கள் ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' என்ற உயரிய சிந்தனைக்கு விளக்கு ஏற்றுவதும் விழா எடுப்பதும் பொருத்தமற்ற காலத்தில் செய்யப்படும் வெட்கக்கேடான செயலாகவே கணிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுத் தவறை மேற்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மீதான அளவற்ற பற்றுக் காரணமாக, இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறிய அனைத்துத் தமிழ்ப் பெரு மக்களும், அறிஞர்களும் இந்த 'உலகத் தமிழர் மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே, தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்.

No comments:

Post a Comment