Thursday, September 17, 2009


தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்தமிழ்த் தேசியத் தந்தை:


இன்று 17 செப்டம்பர் 2009 த‌ந்தை பெரியாரின் 131வது பிறந்த நாளாகும் இந்த நாளையொட்டி அவர் நினைவாக இவ் ஆய்வுக்கட்டுரையினை வெளிக்கொணர்கின்றோம். மானுடத்தின் குரலாக ஒலித்த அந்த ஆத்மாவுக்கு எமது வணக்கங்கள்
தமிழ் தேசிய அரசியல் என்பது 1938 ஆம் ஆண்டு முதலே தொடங்குகிறது.'தமிழத் தேசியம்' என்பது ஒரு மொழிப் போராட்டமோ அல்லது பண்பாட்டுப் போராட்டமோ அல்ல, அது ஒரு தேசிய இனத்தின் விடுதலை கோரும் கோட்பாட்டின் அரசியல் வடிவம்.அந்த வடிவத்தை தமிழகத்தின் எந்த சிந்தனையாளரிடமும் அல்லது தமிழ் அறிஞர்களிடமும் காணக் கிடக்கவில்லை.தமிழின உணர்வை மொழியுணர்வை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுதினாலும், தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்க வேறு எவரும் இயக்கம் கட்டியதில்லை.களத்தில் இறங்கிப் போராட்டங்கள் நிகழ்த்தியதில்லை;சிறைப்பட்டதுமில்லை.

1938 முதலே தமிழகத்தின் விடுதலையை பெரியார் தனது குறிக்கோளாகக் கொண்டார். தமிழ் நாட்டின் விடுதலையைக் கோராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் தேசத் துரோகிகள் எனக் கணித்தார்.இந்தக் கோணங்களில் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியத்தின் தந்தை இதந்தை பெரியார் என்பது புலப்படும்.

ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல.ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு 'தேசம்' என்ற நிலையை எட்டுகிறது.இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள்.


தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.1789 முதல் 1871 வரையிலான கால கட்டத்தில் அய்ரோப்பாவில் பல தேசங்கள் கண் விழித்தன.1871 இல் 14 தேசங்கள் விடுதலை பெற்றவையாக இருந்த அய்ரோப்பாவில் 1924 இல் 26 தேசங்களாகவும் விடுதலை பெற்ற தேசங்கள் உலகப் போர் காலகட்டத்தில் 35 ஆகவும் மாறின.இன்று கிட்டத்தட்ட அனைத்து தேசிய இனங்களும் விடுதலை பெற்று விட்ட கண்டமாக அய்ரோப்பா திகழுகிறது.ஆசியாவைப் பொறுத்தவரை 20 ஆம் நூற்றாண்டில் தான் தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக் கோரிக்கையை நோக்கி நகரத் துவங்கின.


'இந்தியத் தேசியம்' என்ற பொய்மை தேசியத்தை முன் வைத்த போதுஇஅதை எதிர்த்து தங்கள் அடையாளங்களைக் காத்துக்கொள்ளவும் இந்தியத் தேசியம் என்ற பெயரில் நிரந்தரமாக நிலை கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியத்தை தகர்க்கவும் இந்தியாவின் சில பகுதிகளிலேயே தேசிய இனங்கள் தங்கள் குரலை எழுப்பின.இந்திய உபகண்டத்தில் 1909 க்குப் பிறகு தேசிய இனங்களின் இயற்கையான வளர்ச்சி தெளிவாகத் தெரியத்துவங்கின.1909 இல் 'பீகார் பீகாரிகளுக்கே' என்ற தனி மானிலக் கோரிக்கை எழுந்தது.1920 இல் காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக் கொண்டது.இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்திலும் இவ்வுணர்வு வளர்ந்து வந்தது.எந்த தேசிய இனத்தை விடவும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் அதைப்பற்றிய முழுமையான உளவியல் உருவாக்கம் இன்றி உறங்கிக் கிடந்தார்கள்.


இக்காலகட்டத்தில் ஒரு தேசிய இன உணர்வின் விழிப்பினையும்இ தாம் ஓர் இனம் என்ற விழிப்பினையும் உருவாக்குவதில் தந்தை பெரியார் தம் வரலாற்றுப் பங்கினை அளித்தார்.அது மட்டுமின்றி சாதிகளாக உடைந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தில்இ தமிழர்களை 'திராவிடர்கள்' என்ற சொல்லைப் பயன் படுத்தியதற்க்கு அன்றைய அரசியல் சமூகச் சூழல்களும் அதிரடியாக எழுந்த வந்த ஆரியப் பார்ப்பனப் பேரலைகளும் காரணக்களாக இருக்கின்றன.தந்தை பெரியார் தமிழத் தேசிய இனத்தின் உரிமைப் போருக்கு முன் நிபந்தனையான தமிழத் தேசிய உளவியல் உருவாக்கத்தை எப்படி உருவாக்கித் தந்தார் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.


உடைந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒட்டி வைத்த பெரியார்.


தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தங்களை உணர்வதற்குப் பெருந்தடையாக இருந்ததுஇ அவர்களைப் பிரித்து வைத்திருந்த சாதிப் பிரிவுகளே.18-19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் அங்கமாகாக் கருத்தப்படவில்லை.1881 இல் எம் எ ஷெர்பிங் தனது Hindu tribes & castes இல் குறிப்பிடுவது போல பார்ப்பனர்களும் பறையர்களும் தமிழர்கள் என்ற வரையறைக்குள் சேர்க்கப்படவில்லை.அச்சொல் திராவிட சூத்திரர்களை மட்டுமே குறித்தது.அயோத்திதாசப் பண்டிதர் 1891 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திராவிட மகாஜனசபையை நிறுவினார்.

1882 இல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை பூர்வத் தமிழர் என அடையாளப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.1920 இல் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தில் அரசு அமைத்த நீதிக்கட்சி 1922 இல் ஆதி திராவிடர் என அழைக்க ஆணையிட்டது.தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்திய விடுதலையைக் கோரிய தலைவர்களும் கூட எப்படிப்பட்ட பார்வையைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 1921 இல் தமிழத்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த பகிங்காம் ரூ கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் கலவரம் பற்றி' நவசக்தி'யில் இப்படி எழுதினார்:'சேரிகளில் கூட்டங் கூட்டமாக வசிக்கும் பறையர்கள் திடீரென தமிழ் மக்களைத் தாக்குகிறார்கள்.புரசையில் சில தமிழ் மக்கள் பறையர்களால் கொலை செய்யப்பட்டனர்.திமிர் கொண்ட பறையர்களிடம் கத்திகளும்இபட்டாக் கத்திகளும் ... ஒளி வீசுகின்றன.தமிழ் மக்களிடம் கரங்கள் தவிர வேறொன்றுமில்லை.


' திரு.வி,க.போன்ற தமிழ் உணர்வு கொண்ட அறிஞர்களின் போக்கும்,புரிதலும் தமிழ்ச் சமூகத்தைப் பிளவுபட்ட நிலையிலையே பார்க்கும் அல்லது வைத்திருக்கும் நிலையில் இருந்தது.சாதியத்தை உயர்த்திப் பிடித்ததால் தமிழ்ச் சமூகம் ஒன்றுபட முடியாமல் இருந்ததை இது பிரதிபலிக்கிறது.


சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை தலமையில் தொகுக்கப்பட்டது.அவ்வகராதியில் தமிழறிஞர்கள் தமிழன் என்ற சொல்லுக்கு ''பறையனொழிந்த தமிழ்ச் சாதியான்'' என்று வரையறை செய்திருந்தார்கள்.இவ்விதம் சொல்லும்,பொருளும்,நடைமுறையும் தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ் இனத்துக்கு வெளியே நிறுத்தியிருந்தன.


இந் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவினத் துடைக்க 'திராவிடர்' என்ற சொல்லை ஏற்க விரும்பினர்.அந்த சொல் முன்னமே வழக்கில் இருந்தது.


1892 இல் ஆதி திராவிட ஜனசபா சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. 1894 இல் பறையர் மகாஜனசபை திராவிட மகா ஜனசபாவாக மாறியது.


1909 இல் மெற்றாஸ் பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு (Madras Non-Brahmin Association), மெட்றாஸ் திராவிடர் அமைப்பாக(Madras Dravidian Association) மாறியது.திராவிடன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களையும்,பார்ப்பனர் அல்லாத பிற சாதியினரையும் இணைப்பதில் பெரும் பங்காற்றியது.திராவிடர் என்ற சொல்லை அன்றைய நிலையில் தமிழர்களைக் குறிக்கும் சொல்லாகவே பிற தேசிய இனத்தவர்கள் கருதினார்கள்.


தாழ்த்தப்பட்ட மக்களைத் தமிழ் சமூகத்தின் ஒரு பிரித்தறிய முடியாத அங்கமாக உணரவைத்து தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கு வழி வகுத்த பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.அவரது செயல்பாடுகள் 1930 முதல் 1950 வரைஇ இக் கோணத்தில் அமைந்திருப்பதைக் காண முடியும்.11.1.1942 அன்று திருவள்ளூர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் இவ்விதம் பேசினார்.


''தமிழர் கதி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் சமுதாயத்தில் தமிழன் சூத்திரனாக வேசி மகனாக ஆகி விட்டான்.ஆரியனால் தீண்டப்படாதவனாக நடத்தப்பட்டு வருகிறான்.கோவில்களில்,ஓட்டல்களில் தமிழனுக்குச் சம உரிமை இல்லை,பல தமிழர்களுக்குப் பிரவேசமே இல்லை.


சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லை.இதற்கு என்ன காரணம்? தமிழனே.தமிழனை இழிவு படுத்துகிறார்கள்..தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதிகளாக மதிக்கப்படுகிறார்கள்.பழந்தமிழர்கள்� பறையர்,பள்ளர்,சக்கிலியர் சண்டாளர்களாக இருக்கிறார்கள்.இப்படி நூற்றுக் கணக்கான சாதியாய் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்''.


தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒட்டு மொத்த தமிழர்களின் விடுதலையைக் கோரியது.பெரியார் பேசிய திராவிட விடுதலை ஒட்டு மொத்த தமிழ்மொழியினக் குடும்பத்தையும் உள்ளிட்டதாக இருந்தாலும் தெலுங்கு,கன்னட,மலையாள தேசிய இனங்கள் திராவிடர் என்பது தமிழர்களைக் குறிப்பதாகவே புரிந்து கொண்டன.1956 இல் மொழிவாரி மானிலச் சீரமைப்புக்குப் பின் தந்தை பெரியார் தமிழ் நாட்டு விடுதலையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.தமிழ் மக்களை சாதி கடந்து இணைப்பதையே குறிக் கோளாகக்கொண்டு அதில் வெற்றி பெற்றார்.1930-1950 ஆகிய கால கட்டத்திற்குள் இம் முயர்ச்சியில் அவர் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.இக் கால கட்டத்தில் தான் நாம் தமிழர் என்ற உணர்வும் புரிதலும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டது.


சாதிச் சுவர்களை உடைத்துத் தமிழர்களை ஒருங்கிணைப்பதே சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடாக இருந்தது.சாதி உணர்வையும்,சைவ உணர்வையும் பாராட்டிய சைவப் பெரியார்கள் பெரியாரின் கண்டனத்திற்கு உள்ளானார்கள்.1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கற்பட்டில் நடந்த முதலாவது மாகாணச் சுய மரியாதை மாநாடு சாதி மேலாண்மையைக் கடுமையாகத் தாக்கியது.தீண்டாமை,சாதி ஒழிப்பு,புரோகிதர் விலக்கல்,சாதிப்படங்களைத் துறத்தல்,சமயச் சின்னங்கள் அணிவதை மறுத்தல் போன்றவற்றைத் தீர்மானங்ககளாக நிறைவேற்றியது.தீண்டாமையைக் கைவிடக்கோரியும், இழிகுலத்தார் கோவிலுக்கு நுழையக் கூடாது என்ற கடுஞ் சைவர்கள் போக்கினையும் எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போர் தொடுத்தது.தீண்டாமை என்பது சிவபெருமானால் வகுக்கப்பட்டது என்று சிவ நேசன் (செப்டம்பர் 1927) போன்ற சைவப் பத்திரிகைகள் தீண்டாமையை ஆதரித்துப் போராடின.(ஆ.இரா.வெங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாளரும்,சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1994.பக் 35-36)


சுய மரியாதை இயக்கம் பார்ப்பனர்களை எவ்விதம் எதிர்த்ததோ அதே வேகத்தில் சாதிவேற்றுமை பாராட்டிய பார்ப்பனர் அல்லாதாரையும், சைவ-தமிழ் உணர்வாளர்களையும் சாடியது.1929 மே 16 முதல் ஆறு நாட்கள் நடை பெற்ற திருப்பாதிரிப்புலியூர் சைவர் மா நாட்டில் சுய மரியாதை இயக்கச் சார்புடையவர்களாகக் கருதப்பட்ட சீர்திருத்தச் சைவர்களை விலக்கி வைத்தனர்.சீர்த்திருத்த எண்ணம் கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை இபூவாளூர் செல்வகணபதி அகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பார்ப்பன எதிர்ப்பு என்பதில் சுயமரியாதை இயக்கத்தின் போக்கை விரும்பிய சைவர்கள், தங்களுடைய சாதிஉணர்வும் மேலாதிக்க உணர்வும் தாக்கப்படுவதைப் பார்த்தவுடன் பார்ப்பனர்களுடன் கைகோர்க்கத் தலைப்பட்டனர்.இதை குடியருசுப் பதிரிகை சுட்டிக்காட்டிச் சாடியது.


''பார்ப்பனர்களும் அவர்களின் எதிரிகளாகிய சைவ சமயிகளும் இது சமயம் தங்கள் இருவர்களின் அடிப்படையான வித்தியா சத்தைக் கூட மறந்து விட்டு எப்படியாவது அடியோடு அழிக்க வந்திருக்கும் ஆபத்திலிருந்து தப்பு வித்துக் கொண்டால் பின்னால் அவரவர்கள் தனித்தனிக் காரியத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி தினம் ஒரு வருணாச்சிரம மகா நாடும் கூட்டிய வண்ணமாக இருக்கிறார்கள்''(குடியரசு 7 ஏப்ரல் 1929 தலையங்கம்.)


ஆனால் 1930 களில் தந்த்தை பெரியார் சைவர்கள் பெரிதும் போற்றிய மறைமலையடிகளின் 'அறிவுரைக் கொத்து' தொடர்பான போராட்டங்களில் மறைமலையடிகளை ஆதரித்து அவருக்கு அரணாக நின்றார்.


1935 ஆம் ஆண்டு மறைமலையடிகள் எழுதிய 'அறிவுரைக் கொத்து' சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடை நிலைத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்ட நிலையில் இந்திய தேசியம் பேசிய தினமணி சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் அந் நூலைக் கடுமையாக விமர்சித்தன.' நம் நாட்டவரைத் தாழ்த்தியும்,வெளி நாட்டவரை உயர்த்தியும் மறைமலையடிகள் எழுதியிருப்பதாகக் கண்டித்தன.இதை பகுத்தறிவு இதழ் ( செப்டம்பர் 1935) 'போக்கிரித்தனமான புகார்' என்று சாடி மறைமலையடிகளுக்கு அரணாக நின்றது.மறைமலையடிகள் நல்ல தமிழரிஞராக இருந்தாலும் அவர் பார்பனர் அல்லாதவர் என்பதால் பிராமணர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.என்றும் இது பார்ப்பன சூழ்ச்சியே என்றும் குடியரசில் நீலாவதி எழுதினார் (ஆ,இரா.வேங்கடாசலபதி .பக் 48) இந் நிலையில் மறைமலையடிகளுக்கும் தந்தை பெரியாருக்கும் இடையே ஓர் இணக்கமான சூழல் ஏற்பட்டது.


1937 இல் சென்னை மாகாண பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பு செய்தி வந்த பின், சைவ-தமிழ் அறிஞர்களும் சுயமரியாதைக்காரர்களும் இந்தியை எதிர்த்தனர்.1938 இல் இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன சூழ்ச்சியாகவே இரு சாராலும் கருதப்பட்டது.1937 டிசம்பர் மாதத்தில் வேலூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாஜ மாநாட்டில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திக்கு எதிரான போரில் இக் கூட்டணியை அமைக்க முதல் அழைப்பை விடுத்ததே தந்தை பெரியார் தான்.(குடிஅரசு 8 மே 1938)


1937 ஜூன் மாதம் முதலே இந்தி எதிர்ப்பு கருக் கொள்ளத் துவங்கியது.1937 லிருந்தே சைவர்கள் கூட்டங்கள் நடத்தி இந்தியை கட்டாய பாடமாக்கக் கூடாதென கூறி வந்தனர்.1937 டிசம்பரில் வேலூரில் சைவ சித்தாந்த மகா சமாஜ மா நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.( ஆ.இரா.வெங்கடாசலபதி இபக் 50)


ஆத்திகர்கள் என்றும் தங்களை மேல்சாதிக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சமூக மேலாண்மையைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்த சைவர்கள் ஒரு கூட்டணியில் சேர்த்து இந்தியை எதிர்க்கப் பெரியார் முன் வந்த்தார்.(குடிஅரசு 8 மே 1938) ஆனால் அவர்களோடு சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை.குடி அரசு இவ்விதம் எழுதியது,


''பொதுவாக தமிழ் மக்களை ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலை தூக்காமல் இருக்கத் தக்க வண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள்,வருகிறவர்கள் சைவர்களேயாகும்.அவர்களும் அவர்களது சைவ சமூகமுமே தமிழ் நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்கு தமிழர்களை அடிமையாக்கிற்று.ஆரிய வாதிக்கத்துக்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாக இருகிறார்கள் என்றால் சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம்.உண்மைச் சைவர்களுக்கு கடுகளாவாவது தன்மான உணர்ச்சி ஏற்பட்டு தங்களுடைய சற்சூத்திர தத்துவத்தை சிறிதாவது பின் வாங்கிக் கொள்ள அறிவு கொள்வார்களேயானால் ஆச்சாரியாரின் மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கிவிடும்.அந்த உணர்ச்சி சைவர்களுக்கு சுலபத்தில் ஏற்படாது எங்கின்ற தைரியத்தாலையே இன்று ஆச்சாரியார் இவ்வளவு துணிச்சலுடனும் மூர்க்க உணர்ச்சியுடனும் காரியாதிகள் செய்ய முடிகின்றது.(குடி அரசு 27 மே 1938)


இதில் பெரியாரின் சறுக்கலில்லா கொள்கையும் அதே நேரம் இன உரிமையைக் காக்க உசுப்பிவிட்டு ஒன்று சேர்க்கும் திறனும் வெளிப்படும். இதன் பின்னர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வர சுவாமியின் ஆண்டு விழாவின் போது ஞானியாரடிகள் இந்தித் திணிப்பைக் கண்டிப்பப் பேசினார் ( நவசக்த்தி 17 ஜூன் 1938).இதன் பின்னர் சைவர்களும் சுயமரியாதைக்காரர்களும் சேர்ந்து பல மா நாடுகளில் பங்கு பெற்றனர்.இதில் குறிப்பிடத்தக்கது 1937 ஆகஸ்ட்டில் துறையூரில் நடைபெற்ற முன்றாவது சுயமரியாதை மாநாடு ஆகும்.இதில் பெரியார்,அண்ணா,மறைமலை அடிகள் பிற சைவர்கள் பங்கேற்றனர்.


அது போலவே சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் திருச்சி மா நாட்டில் பெரியாரும் பிற சுயமரியாதை இயக்கத் தலைவர்களும் பங்கேற்றனர்.(குடி அரசு 17 அக்டோபர் 1937)


இவ் விதம் இந்தி எதிர்புப் போரில் சைவர்களும் இணைந்து நின்றாலும் போராட்டக் களத்திற்க்கு வரும் போது அவர்கள் சட்டப் படியான வழி முறைகளுக்கு அப்பால் வர மறுத்தனர்.1939 முதலே பல மாநாடுகள் நடத்தப்பட்டு அவற்றில் தமிழ் சமயம் ஆன்மீகம் ஆகியவை சைவர்களால் வலியுறுத்தப்பட்டன.


1938 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் சுயமரியாதைக் காரர்களையும் ஆன்மிகம் பேசிய சைவர்களையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் போராட்டக் களத்திற்க்கு அழைத்து வந்த பெருமை பெரியாரைச் சேரும்.தமிழ்த் தேசிய இனத்தைப் பிரித்து வைத்திருந்த சாதித் தடைகளை மீறித் தமிழர்களை இணைத்தவர் அவரே.முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கி கைதாகி சிறையில் மாண்ட போராட்டக்காரர் நடராசன் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்.(15 சனவரி 1939).அது போலவே இறந்த தாளமுத்து (12 மார்ச் 1939) நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிற சாதியினரையும் ஒன்றிணைத்தது.பெரியாரின் இந்திக்கு எதிரான போராட்டம் சாதியுணர்வைச் சைவர்களையும் ஏனைய சாதியினரையும் களத்தில் கை கோர்க்க வைத்தது.தாங்கள் அனைவரும் தமிழர் என்ற உணர்வு பெற வைத்து தமிழின உளவியல் உருவாக்கத்தை நிலைப் படுத்தியது.

1938 முதலே தமிழகத்தின் விடுதலையை பெரியார் தனது குறிக்கோளாகக் கொண்டார். தமிழ் நாட்டின் விடுதலையைக் கோராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் தேசத் துரோகிகள் எனக் கணித்தார்.இந்தக் கோணங்களில் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியத்தின் தந்தை இதந்தை பெரியார் என்பது புலப்படும்.

No comments:

Post a Comment