Monday, September 7, 2009

வாளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கிய சீனாவின் அடுத்த பயணம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு சிறீலங்கா அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் சிறீலங்காவில் மீண்டும் ஆயுத மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சருமான றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது. சிறீலங்காவில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செய்த விடயங்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன.


280000 தமிழ் மக்கள் உதவி நிறுவனங்களின் தொடர்புகள் அற்ற முறையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மீண்டும் சிறீலங்காவில் போரை ஆரம்பிப்பதற்கே வழிவகுத்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த பினான்ஸியல் ரைம்ஸ் (Financial Times) என்ற நாளேடும் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வேண்டிய முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் தென்னிலங்கையில் இல்லை எனவும், காலம் காலமாக ஆட்சிபுரிந்த சிறீலங்கா அரசுகள் அவர்களை ஒரு இனவாத சிந்தனைக்குள் தள்ளிவிட்டுள்ளதாகவும், இந்த புறச்சூழல்களின் மத்தியில் மத்திய அரசிடம் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு அதிகாரப்பரவலாகம் என்ற அதிகாரமற்ற ஆட்சியை தமிழ் மக்கள் அமைக்க முடியாது எனவும் விடுதலைப்புலிகள் தொடர்ந்து கூறி வந்ததன் அர்த்தங்கள் தற்போது மேற்குலகத்திற்கு புரிந்திருக்கும்.

அவற்றின் வெளிப்பாடுகளாக தான் அண்மையில் மேற்குலகத்தின் சில நகர்வுகள் அமைந்துள்ளன. சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகள் வேண்டும் என பிரித்தானியா நாடாளுமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் எல்லாவற்றையும் மீறி தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசு இந்தியாவின் ஆதரவை தான் அதிகம் எதிர்பார்த்துள்ளது.

வடக்கு - கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிகத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியாவும் நம்புகின்றது. ஆனால் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 20 தொடக்கம் 30 நாடுகளாக உடைப்பது எப்படி என்ற திட்டங்களை சீனாவின் கொள்கைவகுப்பாளர்கள் வகுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவை சிறு சிறு நாடுகாக உடைப்பதன் மூலம் வளமான ஆசிய பிராந்தியத்தை உருவாக்க முடியும் என சீனா நம்புகின்றது. சிறீலங்காவில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரும் படுகொலைகள் மற்றும் மோதல்களை தொடர்ந்து மேற்குலகமும் அந்த நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலைப்பாட்டில் மேற்கலகத்தின் பூகோள அரசியல் சமன்பாடுகளும் பொதிந்துள்ளன. அதாவது சோவியத்தின் வீழ்ச்சி தொடக்கம், யூகோஸ்லாவாக்கியாவின் உடைவு வரையிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்ட உத்திகளை தான் ஆசிய பிராந்தியத்திலும் பயன்படுத்த முற்பட்டு வருகின்றனர். அதாவது முதலில் இந்தியாவின் உடைவை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது உருவாக்கிவிடுவது அதன் பின் அங்கு கால்பதிப்பதன் மூலம் சீனாவை அச்சுறுத்துவது.

அதனை தான் மேற்குலகம் மறைமுகமாக சாதிக்க முற்படுகின்றது. இந்தியாவின் ஊடாக சிறீலங்காவை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தென்ஆசியாவில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என அமெரிக்கா முன்னர் கருதிக் கொண்டது. ஆனால் ஈழத்தமிழ் மக்களின் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் அந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.
இந்த நிலையில் தான் அமெரிக்கா தற்போது ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி பேணி வருகின்றது. ஈழத்தமிழ் மக்களை ஆதரிப்பதன் மூலம் தென்ஆசியாவில் இழந்துபோன தமது ஆதிக்கத்தை மீண்டும் தக்கவைக்க முடியும் என அமெரிக்கா நம்புகின்றது. சீனாவை பொறுத்தவரையில் அது தனது வளர்ச்சிக்கு முன்னர் அமெரிக்கா பின்பற்றிய அதே நடைமுறைகளை தான் சத்தமின்றி பின்பற்றி வருகின்றது.

அதாவது முதலில் தமது பிராந்தியத்தில் உள்ள தனக்கு ஆதரவான நாடுகளில் அமைதியை தோற்றுவிப்பது. அதாவது அமைதியான நாடுகளின் கூட்டணியை அமைப்பது. அதன் பின்னர் தனக்கு சவாலாக மாறும் நாடுகள் என கருதும் நாடுகளை பல நாடுகளாக துண்டாடி விடுவது. சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்களை வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டுவந்த சீனாவின் தத்துவம் தற்போது அதன் அடுத்த கட்டத்திற்கு நகரப்போகின்றது.

இந்தியாவை சிறிய நாடுகளாக உடைப்பது என்ற சீனாவின் கோட்பாட்டு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்ற கேள்விகளும் உண்டு. அதாவது சீனா நினைப்பது போல அது சுலபமானதா? இந்தியாவின் அரசியல் - கலாச்சார உட்கட்டுமானங்களை நோக்கும் போது அது சுலபமானது என்ற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகின்றனர். ஏனெனில் அங்கு கஷ்மீரிலும், நாகலாந்திலும் பிரிவினைக்கான உந்துதல்கள் உள்ளன. ஏற்கனவே பிரிவினைக்கான போரை ஆரம்பித்து பின்னர் அடங்கிப்போன சீக்கிய மக்களின் அடிமனதிலும் விடுதலை வேட்கை உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரையில் அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமது அதிகார சுகத்திற்காக மத்திய அரசை நம்பி வாழ்ந்தாலும், தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கையின் வலு குறைந்துவிட்டது. அவர்கள் தம்மை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாகவே எண்ணதலைப்பட்டுள்ளதாக தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அண்மைக்கால நடவடிக்கைகள் உலெகெங்கும் பரந்துவாழும் பல இலட்சம் ஈழத்தமிழ் மக்களினதும், உலகில் பரந்து வாழும் பல கோடி தமிழ் மக்களினதும் ஒட்டுமொத்த வெறுப்பை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது.

இந்தியாவை நோக்கி ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் வீழச்சியை விரைவுபடுத்த முடியும் என சீனாவும் சரி மேற்குலகமும் சரி நம்புகின்றன போலும். சீனாவின் இந்த கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்பது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரின் கருத்துக்கள் கடந்த வாரம் திரட்டப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த முடிவுகள் ஆச்சரியமானவை. அதாவது இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

அதாவது இந்தியாவை சுற்றி அதற்கு பாதகமான ஒரு புறச்சூழலை சீனா உருவாக்கி விட்டது. மேலும் தென்ஆசியா பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய பல ஆசிய நாடுகளுக்கும் "வளமான ஆசியா" என்ற சீனாவின் சொற்பதம் ஊக்க மருந்தாகவே தோன்றும். இதனிடையே விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டுவிட்டனர் என்ற சிறீலங்கா அரசின் அறிவித்தலுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் நடைபெற்ற உள்ளுராட்சி மாநகரசபை தேர்தல் முடிவுகளும் இந்திய - சிறீலங்கா அரசுகளின் வடபகுதி மீதான அரசியல் ஆதிகத்திற்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

யாழ்பாணத்தில் 18 விகிதமான வாக்கு பதிவுகள் நடைபெற்றது, அந்த மக்கள் சிறீலங்கா அரசின் அரசியல் நடைமுறைகளில் எவ்வளவு தூரம் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்த போது அது விடுதலைப்புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரு போலியான மயைதோற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை அனைத்துலகமும் நம்பியிருந்தன. ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காண்பிக்காததும், தேர்தலில் பங்குபற்றிய சிறிய தொகை மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழரசுக்கட்சியை ஆதரித்ததும் தமிழ் மக்களின் ஒரு அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.

மேலும் இந்த தேர்தலில் பல குளறுபடிகள் நிகழந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்து வருகின்றன. அங்கு ஒரு இயல்பான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தக்கூடிய அமைப்புக்களோ, அனைத்துலக ஊடகங்களோ இருக்கவில்லை. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் தற்போது எட்டப்பட்ட 18 சத விகித வாக்குகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான தாகம் தற்போதும் உள்ளது என "த ரைம்ஸ்" வாரஏடு தெரிவித்திருந்தது. அதனை போலவே மிகப்பெரும் இராணுவ அழுத்தத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெறவேண்டும் என்ற கோட்பாட்டை தக்கவைத்துள்ளனர். களத்திற்கு அப்பால் இந்த கோட்பாடுகள் புலத்தில் தான் அதிகம் தீவிரம் பெற்று வருகின்றது.

அதனை முறியடிக்க சிறீலங்கா - இந்திய அரசுகள் தீவிரமாக முயன்று வந்தாலும் வெளிநாடுகளின் சட்டவிதிகள் அவர்களின் நடவடிக்கையை ஒரு எல்லைக்கு அப்பால் அனுமதிக்கப்போவதில்லை. மேலும் வலுவான அரசியல் கட்டமைப்புக்களுடன் அனைத்துலகத்துடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ளும் போது நாம் ஒரு பலமான சக்தியாக எம்மை சிறீலங்காவுக்கு வெளியில் கட்டியமைத்துக்கொள்ள முடியும். அதனூடாக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அடுத்த கட்ட நகர்வு முனைப்பாக்கப்படும். அதனை அடைவது எவ்வாறு? அரசியல் வழிமுறையிலா அல்லது ஆயுதவழியிலா என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ளும்.

No comments:

Post a Comment