Wednesday, September 16, 2009

இலட்சிய நெருப்பு தியாகி திலீபன் தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு





தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!

தேசியத்தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடு – திலீபன தியாகி

திலீபனின் ஆண்டு நினைவுத் தினம் நெருங்கி வருகின்ற இந்த வேளையில், அந்த மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை, நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்!

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபத்தியிரண்டாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு, அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!


இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986ம் ஆண்டு, நவம்பர் மாதத்தின்போது, இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, நாங்கள் இப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளுவது வரலாற்றுக்கடனாகின்றது.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். “அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே” - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

“இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ண்Pர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!”

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளூரப் படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். “ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்” - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். “தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்”- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். “அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?”

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!. உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது! இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.

அது போலவே, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாகவும் தியாகி திலீபன் விளங்குகின்றான். சிறிலங்கா அரசுகள் தம்முடைய உணவைப் பறிப்பதனாலேயோ, தங்களைப் பட்டினி போடுவதாலேயோ, தம்மைப் படுகொலை செய்வதாலேயோ தமிழ் மக்கள் தம்முடைய போராட்ட உணர்வைக் கைவிட மாட்டார்கள். இது தமிழ் மக்களின் போராட்ட இயல்பாகும். திலீபனின் உண்ணா நோன்பு இதைத்தான் குறிப்பிடுகின்றது. “நாங்கள் பசியோடு இருந்தாலும் சரி, உணவில்லாமல் போனாலும் சரி, மிகப் பெரிய துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் சரி, நாங்கள் போராடுவோம். போராட்டத்தைக் கைவிடமாட்டோம்”- என்பதுதான் அந்தக் குறியீடாகும்!

தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்ந்தும் அதைத்தான் சொல்லி வந்திருக்கின்றது. நீங்கள் - அதாவது சிங்கள அரசுகள் - எங்களுக்குப் பசி பட்டினியைத் தந்து எம் மீது போரைத் திணித்து, அழிவைத் தந்து, இவற்றின் மூலம் எமது போராட்டத்தை அழித்து விடப் புறப்பட்டால் அது நடக்கவே நடக்காது! மாறாக, எமது விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுமே தவிர அது அடங்காது!

உணவு, மருந்து, பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளை விதிப்பதன் மூலமோ, பாரிய படைக்கலன்களைக் கொண்டு ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதன் மூலமோ தமிழீழ மக்களின் போராட்டத்தை அடக்க முடியாது என்பதைத்தான் தியாகி திலீபனின் போராட்டம் காட்டி நிற்கின்றது.

தியாகி திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் இன்னுமொரு மிக முக்கியமான விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்டத்தை ஒரே ஒரு வடிவத்தின் ஊடாக மட்டுமே நடத்துவார்கள் என்பதில்லை. விடுதலைப்புலிகள் அந்த - அந்தக் காலங்களுக்கு ஏற்ப, எந்த எந்த வகையில் போராட்டத்தை நடாத்தி, தங்களுடைய இலட்சியத்தை அடைய முடியுமோ, அந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்தையுமே கையாள்வார்கள் என்பதையும், திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் ஒரு குறியீடாகக் காட்டி நிற்கின்றது. புலிகளின் போராட்டம் கரந்தடிப் போர் முறையாக மாறலாம், அல்லது மரபு வழிப்போர் முறையாக இருக்கலாம். அல்லது இவையிரண்டும் கலந்த போர் முறையாக இருக்கலாம். அல்லது உண்ணா நோன்புப் போராட்டமாகக்கூட இருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுவார்கள். ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்தாலும் கடைசி வரைக்கும் தாயக விடுதலைக்காக போராடுவார்கள். போராடுவதற்கு, ஒரே ஒரு உத்திதான் என்று இல்லை. இலட்சியத்தை அடைவதற்காக என்ன என்ன வடிவங்களில் போராட்டக் கலை உள்ளதோ அத்தனை வடிவங்களும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்படும். திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் இதனையும் ஒரு குறியீடாகக் காட்டிள்ளது.

தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்த காலத்தின் -அதாவது இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த காலத்தின் அரசியல் நிலைமையையும், தற்கால அரசியல் நிலைமையையும் சிந்தனையில் கொண்டு, சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய திருப்பத்தைச் சந்தித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக, நேரடியாகத் தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து இந்தியாவினதும், சிறிலங்காவினதும் அன்றைய அரசுகள், ஒப்;பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் பாரளுமன்றத்திலும், சிறிலங்காவின் யாப்பிலும் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியா தனது இராணுவத்தைத் தமிழீழப் பகுதிகளில் நிலைகொள்ளச் செய்திருந்தது. இந்தியாவும் சிறிலங்காவும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை முற்றாக அணுகவில்லை. தமிழ் மக்களைக் கலந்து அவர்களுடைய ஆலோசனைகளையும் பெறவில்லை. ஆனாலும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த சில இயல்பான விடயங்கள் அமலாக்கப்படும் என்றுதான் தமிழீழ மக்கள் பொதுவாக நம்பினார்கள்.

தமிழீழ மக்கள் இவ்வாறு நம்பியதற்குக் காரணம், அவர்கள் சிறிலங்கா அரசுமீது கொண்டிருந்த நம்பிக்கை அல்ல! மாறாக வெளிநாடு ஒன்று இம்முறை தமிழ் மக்களின் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டிருக்கின்றது. அத்தோடு அந்த வெளிநாடு வேறு ஏதாவது ஒரு வெளிநாடு அல்ல! தமது அண்டைநாடான இந்தியா அல்லவா? அது மட்டுமல்லாது, இந்தியா வெறும் அண்டை நாடு மட்டுமல்ல, ஒரு பிராந்திய வல்லரசும் கூட! “தமிழ் மக்களின் நலனில், பிரச்சனையில் ‘அக்கறை’ கொண்டுள்ள இந்திய வல்லரசு, இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறைந்த பட்ச சரத்துக்களையாவது அமலாக்கம் செய்ய முற்படும். அதற்குரிய இராஜதந்திர அரசியல் அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு மேற்கொள்ளும் என்று எமது தமிழ் மக்கள் உளப்பூர்வமாக நம்பியிருந்த காலம்தான் அது!

ஆனால் தமிழீழ மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்;த்திருந்தது போல் எதுவுமே நடக்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாதம் தனது வழமையான பயங்கரவாத, பேரினவாதச் செயல்களை முடுக்கி விட்டது. மிகவேகமாகச் சிங்கள குடியேற்றங்களைத் தன் இராணுவத்தின் துணையுடன் சிங்கள அரசுடன் மேற்கொண்டது. தமிழ் அகதிகள் தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப்பகுதிகளில் மேலும் விரிவாக்கப்பட்டது. தமிழ்த் துரோகக் குழுக்கள், இந்திய-சிறிலங்கா இராணுவங்களின் துணையுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், போன்ற கொடுஞ் செயல்களைப் புரிய ஆரம்பித்தன. நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல சரத்துக்கள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.

இவற்றை இந்திய அரசும், இந்திய இராணுவமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக அமல் படுத்த வேண்டிய தம்முடைய கடமையைச் செய்யாமல், சிங்கள இனவாதத்திற்குத் துணைபோகும் சக்தியாகவே இந்தியா நடந்து கொண்டது.

‘இது இவ்வாறுதான் நடக்கப் போகின்றது’ என்று தேசியத் தலைவர் பிரபாகரன் ஏற்கனவே, வெளிப்படையாகவே அறிவித்திருந்தார் “இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தினால், தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை. சிங்கள இனவாதப் பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை” என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 1987ம் அண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் தெட்டத் தெளிவாகக் கூறியிருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான பார்வையின்படியே அன்றைய சிங்கள அரசு - ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசு - நடந்து கொண்டது. அது மட்டுமல்லாது, நடைமுறையில் செயல் இழந்துபோன இந்த ஒப்பந்தத்தை, உத்தியோகபூர்வமாக விழுங்கி ஏப்பம் விடுகின்ற வேலையை, இன்றைய சிங்கள அரசு - ராஜபக்சவின் அரசு - செய்து காட்டிவிட்டது. சிறிலங்காவின் உச்சமன்றத்தின் தீர்ப்பு மூலம் இந்த ஒப்பந்தம் இப்போது ‘சட்ட விரோதமான’ ஒன்றாகி விட்டது. அன்றைய ஆட்சியாளரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இன்றைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அரசியலில் எதிர்க்கட்சியினராக இருந்தாலும், சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சிந்தனையில் இரு தரப்பினரும் ஒத்த கருத்தினரே!


இந்த ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து, சிறிலங்கா அரசிடம் முறையிடுவதையும் விட, இந்த ஒப்பந்தத்தின் பாதுகாவலனாக வந்திருந்த இந்திய அரசிடம் முறையிடுவதே பொருத்தமானதாக இருந்தது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பும் கடமையும் இந்தியாவினுடையதாக இருந்தது. இந்தியாதான் தமிழ் மக்களின் உரிமைக்கு உத்தரவாதத்தை அளித்து, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தையும் நிறுத்தி வைத்தது. எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக தேசியத் தலைவர் தனது சுதுமலைப் பிரகடனத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்திய அரசு, தமிழ் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் காப்பாற்றுமாறு வேண்டி, ஐந்து கோரிக்கைகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முன் வைத்தது.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் மற்றும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும்
சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


இடைக்கால அரசு நிறுவப்படும்;வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் புதிதாகத் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, பள்ளிக்கூடங்கள், தமிழ்க் கிராமங்கள் ஆகியவற்றில் உள்;ள இராணுவ மற்றும் பொலிஸ் நிலைகள் மூடப்படல் வேண்டும்”

என்ற இந்தக் கோரிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்தபோது, எந்தவிதமான பதிலோ, சமிக்ஞையோ இந்தியாவிடமிருந்தோ, இந்தியாவின் தூதுவரிடமிருந்தோ வரவில்லை. ஆகவே இந்த ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து, இந்திய அரசிடம் நீதி கேட்டு, சாகும்வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தியாகி திலீபன் மேற்கொண்டான். மற்றவர்கள் இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொள்ளக் கூடாது. அதனைத் தானேதான் மேற்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக நின்று தலைமையிடம் அனுமதியைத் திலீபன் பெற்றான்.

இந்த ஐந்து கோரிக்கைள் புதிதாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல! ஏற்கனவே ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசாலும், சிறிலங்கா அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவைதாம் இவை! தவிரவும், இந்த ஒப்பந்தத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய விடயங்களையும் பார்க்க, மிகவும் இலகுவாக அமலாக்கக்கூடிய மிக எளிமையான சரத்துக்கள்தாம் இவை!

ஆனால் இந்திய அரசு இறங்கி வரவில்லை. அது சிறிலங்கா அரசு மீது எந்தவிதமான அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து பன்;னிரெண்டு நாட்கள் - 265 மணித்தியாலங்கள் - ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணா நோன்பினை மேற்கொண்டு, உடல் துடித்து உயிர் விட்டது, ஓர் உத்தம ஆத்மா!

தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான்! இந்திய அரசு தமிழர்களின் கோரிக்கைளுக்கு இணங்காத பட்சத்தில், திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக்கொள்வான் என்று எல்லோருக்குமே நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உயிரோடு இருந்தபோதே அவன் மீது இரங்கல்பா பாடப்பட்டது. அவன் உயிரோடு இருந்தபோதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.

அன்று, பிராந்திய வல்லரசான இந்தியா ஈழத்தமிழரின் பிரச்சனை தொடர்பாக ஒரு மலிவான ஒப்பந்தத்தைச் சிறிங்கா அரசுடன் மேற்கொண்டிருந்த போதும் அதனால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது இராணுவத்தை இலங்கைத்தீவில் நிலை கொள்ளச் செய்திருந்த போதிலும், அது எந்தவிதமான அழுத்தத்தையும் சிறிலங்கா மீது ஏற்படுத்தவில்லை. மாறாக, சிறிலங்கா அரசின் அலட்சியப் போக்கையே, இந்தியாவும் மேற்கொண்டதால்தான் மீண்டும் போர் வெடித்தது.

இதே செயற்பாட்டைத்தான் இப்போது மீண்டும் நாம் காண்கின்றோம். முன்பு இந்தியா இருந்த இடத்தில், இப்போது பல உலக நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கு உள்ள பிராந்தியச் செல்வாக்கு உலக நாடுகளுக்கு இல்லை. இந்தியா சிறிலங்கா அரசோடு ஒப்பந்தம் ஒன்றையும் போட்டிருந்தது. இந்த உலகநாடுகள் அவ்வாறு ஒப்பந்தமும் போடவில்லை. இந்தியா தனது படைகளை இலங்கையில் தரையிறக்கியிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவுமில்லை.

ஒப்பீட்டளவில் உலக நாடுகளையும் விட, அன்று இந்தியா பலம் பொருந்திய செல்வாக்கோடு இருந்தது. எனினும் இந்தியா சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அல்லது கொடுக்க முடியவில்லை. மாறாக, தமிழ் மக்ளின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுதான் தேவையற்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகித்தது. இதே செயல்களைத்தான் இன்று இந்த உலக நாடுகளும் செய்கின்றன. சிறிலங்கா அரசும் தன்னுடைய பாணியில் தன்னுடைய அதே செயற்பாடுகளைத்தான் செய்து வருகின்றது.

திலீபன் தன்னுடைய உயிர்த் தியாகத்தின் மூலம் ஒரு மிகத் தெளிவான செய்தியைச் சொல்லிச் சென்றுள்ளான். எந்த ஒரு சிறிலங்கா அரசும், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நிரந்தரமான நியாயமான, கௌரவமான, சமாதானத் தீர்வைத் தராது என்கின்ற உண்மையைத்தான் திலீபன் தன்னுடைய தியாகத்தின் ஊடான செய்தியாகச் சொல்லிச் சென்றுள்ளான்.

சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் சமாதானத் தீர்வைத் தரப்போவதில்லை என்ற யதார்த்தத்தை -உண்மையை - நாமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளோம். திலீபனின் தியாகம் எமக்கு அந்தத் தெளிவைத் தந்தது.

என் அன்புத் தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!! என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் விழி மூடி வீரச் சாவடைந்தான். திலீபன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தக் காலகட்டத்தில் நாமும் விழிப்பாக இருந்து, எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எமது கடமையைச் செய்வோமாக! அதுவே நாம் திலீபனுக்கு இந்த இருபத்திரண்டாவது ஆண்டு நினைவின் போது செய்யக் கூடிய உண்மையான அஞ்சலியுமாகும்.

No comments:

Post a Comment