Wednesday, September 9, 2009


தமிழீழப் போராட்டமும் தமிழ் ஊடகங்களும்:
விலைபோகும் ஊடகத்துறையினால் விபரீதமாகும் தமிழர் நிலை?


அச்சு ஊடகம் இயற்கை விதியாய் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று கேட்பு ஊடகமாகவும், காட்சி ஊடகமாகவும் வளர்ந்துள்ளது. '' நகர்ப் புலவர் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்'' - எனும் பாரதியின் கனவு அதனினும் அதிகப் பாய்ச்சல் பெற்று புவிக்கோளம் தாண்டி அண்டவெளியின் அருகிருந்து கேட்குமாறும் வளர்ச்சி பெற்றுள்ளது.


''நவீன நாகரீகத்தில் முக்கிய சின்னங்களிலொன்று பத்திரிக்கை தொழில்'' என்றான் பாரதி. ஆனால் தற்கால ஊடகங்கள் அவை எவ்வடிவத்தினதாயினும், அதன் இயங்குதளம் எதுவாகிலும் மேற்கூறிய பேற்றிற்கு உரியவாறு உள்ளனவா? எனில் ஐயமே!,


தமிழர் வாழ்வின் இருள் கிழித்து பெரு நெருப்பாகத் தோன்றிய தமிழ்த் தேசியத்தின் எழுத்துக்களை, கருத்துக் கருவிகளை ஏந்தி படைவகுத்தவை தமிழரின் ஊடகங்கள்தான். சமூகப் படிநிலைகளை தகர்த்தெறிந்து சமத்துவ, பாலியல் ஓர்மைப்பண்பு, புரான பொருளியல் வாழ்வு என பல தளங்களில் இயங்கிய தமிழ் ஊடகங்கள் தாய்தேசத்தின் குரலாய் ஒலித்ததுவும் மறக்கப்பட முடியாதவை ஆனால் இன்று போராட்டம் ஓர் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள இவ் இக்கட்டான சூழலில் தமிழ் ஊடகங்களின் நிலை என்னவாக உள்ளது?


''ஊடகச் சுதந்திரமே எல்லா வகையான சுதந்திரத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும். சமுதாய நியதி, மனித நேயம், சமூக நல்லுணர்வுகள், பொருளாதார மேம்பாடு தேச விடுதலை தாய்மொழிக்கல்வி இவற்றின் வளர்ச்சியில் ஊடகச் சுதந்திரம் பங்கு பெறுகின்றது''


. மேற்காணும் வரையறைக்குள் இன்றைய ஊடகச் சுதந்திரம் பங்காற்றுகிறதா? நுகர்வுப் பொருளாக சந்தை மதிப்பை மட்டுமே இலக்காக கொண்டு அதாவது வியாபார நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் தமது இலாப நோக்கிற்காக மட்டுமே ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துகின்றன. வளர்க்கின்றன. First Press Commission '' பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துக்களை கொண்டிருக்கவும் செய்திகளைப் பெறவும், அச்சிட்டும், வெளியிடவும் கருத்துரைக்கவும் காட்சிப்படுத்தவும் இருக்கின்ற சுதந்திரம் ஊடகச் சுதந்திரம்'' என வரையறுத்தது. மானிடவியல்.


சமகாலத்தில் நாம் நோக்கினால் பெரும்பாலான ஊடகங்கள் எவ்வகை ஊடகமாயினும் அதிகாரத்தின் தலையீடுகளையும், தமது தன்னல நோக்கத்திற்காக பொதுக்கருத்தை உருவாக்க ஊடகத்தை பயன்படுத்துவதையும் நாம் கண்முன்னே காணமுடியும் .

உதாரணமாக 2009 மே 19 திகதிக்கு பின்னரான தமிழ் ஊடகத்துறையின் செயற்பாடுகளை அவதானித்து வருவோர்க்கு இது நன்குபுலப்படும் விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமை சிதைக்கப்பட்டதும் தமிழூடகங்கள் தமிழீழ தேசியத்தலைமை சார்ந்து தத்தமது கருத்துக் கணிப்பை வெளியிட்டதும், அதன் தொடர் நிகழ்வாக இன்றும் ஒரு பொதுக்கோட்பாடு இன்றி செயற்பட்டு வருவதும் வேதனைக்குரியதே இதில் தன்னல நோக்கிற்காக பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியாக தமிழ் தேசிய தலைமை சார்ந்த கருத்துக்கள் வெளியானதும், அதில் அதிகாரத்தின் தலையீட்டால் சில ஊடகங்கள் , ஏற்புடமையில்லா செய்திகளை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் அவதானிக்கலாம். பெரும்பாலும் கருத்துருவாக்கங்கள் ஊடகங்களின் மனப்போக்கு, பணப்போக்கு சார்ந்து உள்ளனவேயன்றி சமூக யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இல்லை. இவ்வகையான கருத்துக்கணிப்புகள் பல நேரங்களில் பண்பாட்டு, மொழி, இன வரையறைகளுக்கு எதிராகவும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் திணிக்கப்படுகின்றன.

குறிப்பாக பல்வகை ஊடகங்களை இயக்குகின்ற நிறுவனங்கள் அதாவது அச்சு ஊடகம், கேட்பு ஊடகம், காணொளி ஊடகம் வலைப்பதிவு இணையங்கள் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் எதேச்சதிகாரப் போக்கோடு இயங்குகின்றன. தமக்காக மக்களேயன்றி மக்களுக்காக தாம் இல்லை எனும் ஆணவப்போக்கில் செய்திகளை, கருத்துக்களை உருவாக்கி பரப்புகின்றன. செய்திகளைத் தருவது எனும் நிலைமாறி செய்திகளை உருவாக்கி பரப்புகின்றன. இப்போக்கு தமிழ் சமூகத்திற்கு அச்சுறுத்தலையே உண்டு பண்ணியுள்ளது. தகவல் யுகம் என அழைக்கப்படும் தற்காலம் ஊடக ஏகபோகத்திற்கு அடிகோலிவிட்டது.

மேலும் செய்திகளை முந்தித்தருவது எனும் வியாபாரப் போட்டியில் சமூகப்பாதுகாப்பிற்கும், சமூக ஒற்றுமைக்கும் எதிராக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக முள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் அங்கு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை பல சர்வதேச, ஆங்கிலத் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இதன் பாரதூர விளைவுகளை ''பொறுப்பற்றதனம் '' என இன்றும் பல ஊடகங்கள் கண்டித்து வருவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழீழப் போராட்டமும் தமிழ் ஊடகங்களும்


சிங்கள இனவெறியாட்டத்தின் கோர முகம் மறைத்து அதன் ''உலக ஊதுகுழலாக'' விளங்கியமையாலேயே ''இந்து'' பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் சிங்கள அரசின் உயரிய விருதான ''ஸ்ரீலங்க ரத்னா'' பெற்றார். ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப்பின் தமிழகத்தின் தமிழ் ஊடகங்கள் கனத்த மௌனம் காத்தன. இயல்பில் மனித நெஞ்சில் சுரக்கவேண்டிய மனிதாபிமான ஈரம் கூட ஈழத்தமிழ்மக்களின் இன்னல்கண்டு சுரக்கவில்லை-மிக முக்கியமாக ஐ.நா.மன்றம் உள்ளிட்ட சர்வதேச மனிதநேய அமைப்புகள் இலங்கை நிலைவரம் சார்ந்து கதுத்துரைக்கும் போது. இருண்ட கண்டமாக தமிழர்களின் பூர்வீகத்தாயகம் பலிபீடமாக மாறிய பின்பும்கூட இனவாத அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராக, மனித உரிமைகளுக்கு ஆதரவாக பணியாற்றியிருக்க வேண்டிய ஊடகங்கள் அக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்தன. முள்ளிவாய்க்காலில் நடந்த நரபலிகளை குண்டு வீசி அப்பாவிக் குழந்தைகளை கொன்றபோதும், ஏ-9 நெடுஞ்சாலையை மூடி பொருளாதார முற்றுகைக்குள் தமிழர் தேசத்தையே திறந்தவெளி சிறைக்கூடமாக்கி தமிழர்களைப் பட்டினிப்போட்டுக் கொன்ற ஈனச்செயலை உரியவாறு கண்டித்து மனித நேயக் கடன் கூட ஆற்றாமல் தமிழ் ஊடகங்கள் ''ஊடகத் தர்மம்'' காத்தன.


''நடுநிலையான தமிழ் ஊடகங்கள்'' எனக் கூறப்படும் சில ஊடகங்களில் 2002 தொடக்கம் 2009 மே 19 வரையிலான காலகட்டத்தில் ஆய்வு நோக்கில் தமிழீழப் போராட்டச் செய்திகளைப் பார்த்தால் அதன் நடுநிலைமையும் நமக்கு ஐயத்தையே ஏற்படுத்தி இருந்தது. அடிப்படை மனிதாபிமானத்தால் எழும் இரக்கம் கூட தன் சொந்த இனத்தின் மீது பல ஊடகங்களுக்கு இல்லாமல் போனது ''வரலாற்று சோகமே''.


தங்கள் வாழ்வை அர்ப்பணித்து சமூக மாற்றங்களுக்கு கடனாற்றும் நபர்களையும், இயக்கங்களையும் உதாசீனம் செய்து அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்து மாற்று சமூகத்திற்கான முன்னெடுப்புகளை முனைமழுங்கச் செய்கின்றன

மொழிக்கொலை, பண்பாட்டுச் சீரழிவு, சமூக வன்முறை, நுகர்விய கலாச்சாரம் விற்பனை முதன்மை போன்ற நச்சுவேர்கள் கிளைபரப்பி நிற்கும் ஊடக உலகின் ஊடாக இருள் கிழித்தெழும் வான் கதிராக நம்பிக்கை தரும் நல்ல ஊடகங்களும் தமிழில் காணப்படுகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல முன்னணித் தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் தேச விடுதலையின் குரலாக தமிழ்தேசியத்துக்கான மாற்று ஊடகமாகி வளர்ந்து வருகின்றது.

இதழியல் துறையில் இலத்திரனியல் துறையில் இணைய உலகில் பல இதழ்களின் எதிரணியில் கொள்கை களத்தில் சமூக அக்கறையோடு, வரும் தலைமுறையில் தேசியத்தை நோக்கிய வாழ்விற்கு கடனாற்றும் வண்ணம் புதிய தமிழர் இதழ்கள் அணிவகுக்கின்றன.

இந்த மாற்றங்கள் தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகையில் தமிழகத்தில் மீண்டும் சிங்கள அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் அரங்கேறுகிறது


நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படத்துக்கு விடுதலைப்புலிகள் பணம் கொடுத்தனர்’, ‘தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றார்கள்’ என சிறீலங்கா அரசு முன்வைத்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் இப்போது , தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது .


அத்துடன் ராஜீவ் காந்தி கொலை சார்ந்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளியாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் பொய்யான தகவல்களை, கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்.எழுதி வருகின்றனர்


ஆரம்பத்தில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியும் எழுதியும் வந்த ஊடகங்கள் பின் முள்ளிவாய்க்காலுடன் தமிழர்களின் தலைவிதியே மாறியுள்ளதாகவும் கற்பிதங்களை கூறி வந்தன .


தமிழருக்கு எதிராக தொடர்ந்து வரும் சர்வதேச சதி வலைப்பின்னலின் விளைவால் மலேசியாவில் கைது செய்து சிறீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட கேபி பற்றி கொழும்பின் ஊடகங்கள் அது தமிழ் ஆங்கில சிங்கள ஊடகங்கள் என்ற வேறுபாடின்றி ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.


இவ்வாறான போலியான கற்பனைகள் கலந்து நியம்பாதி நிழல்பாதி என வெளிவரும் இக்கருத்துரைப்புக்களை குறிப்பாக புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை நிலைகுலையச்செய்தே வருகின்றன.

கொள்கைப் பற்றோ இலட்சிய உறுதியோ இல்லா இவ் ஊடகங்கள் தாமே முதலில் செய்திகளை வெளியிட்டோமென்கின்ற பெருமிதத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் தவறினையே செய்து வருகின்றனர். இதை யாரவது சுட்டிக்காட்டினால் ஊடக தர்மம் என ஒரு உருப்படாத வார்த்தையினை சுட்டிக்காட்ட முனைகின்றனர் . உண்மையில் சிறீ லங்காவிலிருந்து வெளிவரும் கணிசமான சிங்கள ஆங்கில ஏன் தமிழ் ஊடகங்கள் எல்லாம் தேசிய வாதம் என்ற போர்வையில் இனவாதத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு மேலும் மேலும் ஊடக வாயிலாக தமிழ்ர்களை அச்சுறுத்தி வருகையில் வருகையில் தமிழ் ஊடகங்கள் மேற்சொன்னவர்களின் கருத்துக்களை கட்டுரைகளை தமது ஊடகங்களில் முதன்மைகுடுத்தி வெளியிடுவதானது வருந்தத்தக்கது. உண்மையில் இந்த நிலை மாற வேண்டும் தமிழ் தேசியம் காப்பாற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் ஊடகங்கள் பணி புரிதலே அவர்கள் தமிழ் இனத்துக்கு செய்யும் கடமையாகும்.


சிங்கள ஊடகங்கள் புலிகள் பயங்கரவாதிகள் கேபி அது சொன்னார் இது சொன்னார் என்று ஊகங்களை வெளிப்படுத்தும் போது அதை நாமும் எமது ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்த்து தமிழினத்தினதும் விடுதலைப்புலிகளினதும் நியாங்களை வெளிப்படுத்தும் ஆக்கங்களையும் கட்டுரைகளையும் வெளிப்படுத்தி சோர்வு நிலையில் இருக்கும் தமிழர்களைநிமிரவைக்க வேண்டியதும் எமது கடமையாகிறது நீதி, நிர்வாகம் போன்றே நற்சமூக வடிவாக்கத்தில் ஊடகமும் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. என்பதை நாம் மறக்கக்கூடாது

கே.பி., இப்போது சிங்கள அரசின் பாதுகாப்புப் படையின் விசாரணையில் எப்படி இருக்கிறார் என்கிற விவரம் முழுமையாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் கே.பி-யிடம் எக்கச்சக்கமான கையெழுத்துகள் வாங்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. அதோடு அவருடைய வாக்குமூலமாகச் சொல்லும்படி சில விவரங்களைப் பதிவு செய்கிற வேலையையும் சிங்கள அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அதேவேளை ராஜீவ் கொலை வழக்கில் கே.பி-க்கு மிக முக்கியப் பங்களிப்பு இருப்பதாகவும், கொலை சம்பவம் நடந்தபோது கே.பி. பெங்களூரில் இருந்ததாகவும் இந்திய உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.


2002-ம் ஆண்டு கே.பி-யை வளைப்பதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நியூஸிலாந்து போனார்கள். ஆனாலும் அவர்களால் கே.பி-யை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இப்போது சிங்கள அரசிடம் சிக்கி இருக்கும் கே.பி-யை ராஜீவ் கொலை குறித்த விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது . ஆனால், அதைச் செய்யாமல் ராஜீவ் கொலைச் சதி குறித்த கேள்விகளை சிங்கள அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து, ஆதார பூர்வமாக பதில் வாங்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள அரசு ராஜீவ் கொலை விவகாரத்தில் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டும், பேசியும் வந்த தமிழகத் தலைவர்கள் பலரையும் பழிவாங்க முனைகிறது!” …

ராஜீவ் கொலைச்சதியில் சம்பந்தப்பட்ட இந்தியர்கள் யார் யார்?

கொலைத் திட்டத்தை நிறைவேற்ற பண உதவி செய்தது யார்?

ராஜீவ் கொலை செய்யப்படப் போகிற தகவல் யார் யாருக்கெல்லாம் தெரியும்?

இதுபோன்ற கேள்விகளுக்கு கேபியிடமிருந்து விடை காண முயல்கிறது சி.பி.ஐ.! அதன்படி, ராஜீவ் கொலையாகப் போகும் தகவல் தமிழகத் தலைவர்கள் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் எனச் சொல்லியும், அத்தகையவர்களின் பட்டியலை வெளியிட்டும் தமிழகத்தில் பீதியைக் கிளப்புகிற திட்டத்தை சிங்கள அரசு கையில் எடுத்துவிட்டது. புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்கள் யார் என்பதைகவனத்தில் எடுத்தே இது அமையக்கூடும்!”.இதை உண்மையாக்குவதுபோல் சுப்பிர மணியசுவாமியின் தகவலும் ஊடகங்களூடக வெளிவந்துள்ளன


ராஜீவ் கொலை குறித்து சந்திராசாமி மற்றும் சுப்பிர மணியன் சுவாமியிடம் விசாரிக்கும்படி ஜெயின் கமிஷன் சொன்னதே… அவர்களிடம் விசாரணை நடந்ததா? ஈழ எழுச்சியைத் தடுக்கிற விதமாக ராஜீவ் கொலை விவகாரம் குறித்து கே.பி. சொன்னதாக சிங்கள அரசு எதை வேண்டுமானாலும் பரப்பிக் கொள்ளட்டும்! மடியில் கனமிருப்பவர்கள்தானே பயப்பட வேண்டும்?” என நிதானமாகச் சொன்னார் நெடுமாறன்.


, ”சிங்கள அரசின் வெறித்தாண்டவ இன அழிப்புக் கோரங்கள் இப்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன அழிப்புத் துயருக்கு இந்திய அரசு தொடர்ந்து துணையாக நின்றது. உலக சமூகமே இந்திய, இலங்கை அரசுகளின் மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறது. அந்தக் கோபத்தைத் திசை திருப்பும் விதமாகத்தான் கே.பி-யிடம் ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கப் போவதாக இப்போது மத்திய அரசு பரபரப்பு காட்டுகிறது. கே.பி-யின் வாக்குமூலமாக பழிச் செய்திகள் பரப்பப்பட்டாலும், அதனைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். ஈழத்துக்காக எழுகிற குரல்களை எல்லாம் மிரட்டி அடக்க நினைக்கும் சதித்திட்டம் ஒருபோதும் ஈடேறாது!” எனக் கொந்தளித்தார் வைகோ.


வாக்கு வங்கி, கோஷ்டி அரசியல், பரஸ்பர பழிதீர்ப்பு என்பதெல்லாம் தாண்டி இன்னும் எதற்கெல்லாம் ராஜீவ்காந்தியின் ஆன்மாவை இழுத்துக்கொண்டே இருப்பார்களோ..?!என்ற ஏக்கம் ஒருபுறமிருக்க ....


உலகமயம், பெரு முதலாளியம், நுகர்வியச் சீர்கேடு. தன்னல உந்துதல் போன்றவை அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் இதற்கு மாற்றாக சமூக அறச்சிந்தனையோடு தேசிய அடையாளத்தைக் காப்பாற்றும் பணிகளுக்கான அர்ப்பனிப்போடு ஊடகங்கள் உலா வரவேண்டும். அதிலும் தேசிய இனச்சுரண்டல், அண்டை தேசிய இன வன்மம் மற்றும் உரிமை மறுப்பு, தன்னல முதன்மையில் மக்களை அடகு வைக்கும் அரசியல் தலைமைகள், கொள்கை வழி நெறிப்படுத்தப்படாத படிநிலை ஒடுக்கு முறையை விரும்பி வரவேற்கும் கட்சிப் பற்றாளர்கள், பணம், பதவி, பகட்டு இவற்றை இறுதி இலக்காக்கொண்டு வளரும் தலைமுறை என இருள்சூழ்ந்து நலிவுற்று இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் மண்ணுரிமை, வாழ்வுரிமை, அற அரசியல் உரிமை இவற்றை நெஞ்சில் ஏந்தி வரப்போகும் சந்ததியினருக்கான சமஉரிமைச் சமூகத்திற்காய் தமிழ்த் தேசத்திற்கான களம் தமிழ் ஊடகங்கள். உடைக்க வேண்டும் என உரிமையுடன் வேண்டுகின்றோம்

No comments:

Post a Comment